கலை ரசிகர்களின் கண்களையும் செவிகளையும் கவர்ந்தது ‘முதிதா கலை விழா 2026’.
ஜூலை 24ஆம் தேதியிலிருந்து 26 வரை பிஜிபி மண்டபத்தில் நடந்தேறிய விழாவில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளைப் பலநூறு மக்கள் கண்டு களித்தனர்.
முதல் நாள்
விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக ஜூலை 24ஆம் தேதி மாலை ஏழு மணிக்கு மேடையேறிய ‘எர்த் அண்ட் ஸ்ட்ரிங்ஸ்’ அங்கத்தை ‘ஸ்த்ரீ தாள் தரங்’ என்ற பெண்கள் இசைக்குழு படைத்தது. இந்திய இசையின் தாளத்தையும் ராகத்தையும் முதன்மையாகக் கொண்டு அப்படைப்பு அமைத்திருந்தது.
இந்தியாவின் முதல் பெண் ‘கடம் வித்வான்’ சுகன்யா ராம்கோபால் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
பொதுவாகக் கர்நாடக இசையில் தாள வாத்தியக் கருவிகள் பக்க வாத்தியங்களாக பயன்படுத்தப்படும். அப்படிப்பட்ட நிலையில், தாள வாத்தியங்களின் அழகையும் சிறப்பையும் வெளிக்கொணரும் வண்ணம் அந்தப் படைப்பு திகழ்ந்தது.
நிகழ்ச்சியில் கடங்களுக்குத் துணையாக வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய இசைக்கருவிகளும் ரசிகர்களுக்கு முழுமையான அனுபவத்தை வழங்கின.
இரண்டாம் நாள்
இரண்டாம் நிகழ்ச்சியான, ‘கபீர் வாணி - பெர்ல்ஸ் ஆஃப் விஸ்டம்’, ஜூலை 25ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு நடந்தேறியது. 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவக் கவிஞரும் முனிவருமான கபீர் தாசின் படைப்புகளில் சிலவற்றைப் பாடல்களாகத் தொகுத்து வழங்கினார் உள்ளூர்க் கலைஞர் சீமா ஓவலேகர்.
சமயம், சடங்கு ஆகியவற்றைச் சாராமல் முனிவர் கபீரின் படைப்புகள் அன்றாட வாழ்வியலை மையமாகக் கொண்டிருந்ததுடன் அக உண்மையைக் கண்டறியவும் உதவின.
அவரது முக்கியத் தத்துவங்களான, பயமற்ற அன்பு, உருவமற்ற பக்தி, கோட்பாடற்ற ஞானம் ஆகியவை அந்நிகழ்ச்சியில் பாடல்களாக மக்களுக்குப் படைக்கப்பட்டன.
அதே நாளில் மாலை ஏழு மணிக்கு, ‘என்ட்வைண்ட் ட்வின்ஸ் - அ வோக்கல் ஜுகல்பந்தி’ நிகழ்ச்சியும் இடம்பெற்றது. ‘ஜுகல்பந்தி’ என்பது இசைக்கலைஞர்கள் இருவர் இணைந்து வழங்கும் இரட்டையர் இசை நிகழ்ச்சியாகும்.
அந்த வாய்ப்பாட்டு-இரட்[Ϟ]டையர் கச்சேரியில், வெவ்வேறு இசை மரபுகளைச் சேர்ந்த இளம், புகழ்பெற்ற கலைஞர்களான விக்னேஷ் ஈஷ்வரும் (கர்[Ϟ]நாடகம்) கௌஸ்துவ் கந்தி கங்குலியும் (ஹிந்துஸ்தானி) இணைந்தனர். இவர்களுக்கு வயலின், மிருதங்கம், தபலா, ஹார்மோனியம் ஆகிய இசைக்கருவிகள் பக்கவாத்தியங்களாக அமைந்தன.
இறுதி நாள்
இறுதி நாளின் முதல் நிகழ்ச்சியாகக் காலை 10 மணிக்கு, ‘யூனிசன்-சமகமா’ நிகழ்ச்சி நடந்தது. இந்தக் கர்நாடக இசை நிகழ்ச்சியில், ஐந்து பாடகர்களுடன் வயலின், வியோலா, கொன்னக்கோல் ஆகியவையும் அடங்கியிருந்தன.
ஒருங்கிணைந்த கர்நாடக இசை அனுபவமாக வடிவமைக்கப்பட்டு, குழுவின் ஒருமைப்பாட்டையும் இசை வழிக் கதைகூறலையும் மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட இக்கச்சேரியில் மனோதர்மத்துடன் கூடிய பாரம்பரிய கர்நாடக இசைப் பாடல்கள் இடம்பெற்றன.
இவ்விழாவிற்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்ட இந்தப் படைப்பு, கர்நாடகப் பாரம்பரிய இசைக்கும் குழு இசை வெளிப்பாட்டிற்கும் இடையே உள்ள இணைப்பை ஆராய்ந்தது.
சிங்கப்பூர் இந்திய இசை, பாடகர் குழுவும் புகழ்பெற்ற அமெரிக்க இசைக்கலைஞர் சஞ்சய் சுப்பிரமணியனும் இணைந்து அப்படைப்பை மேடையேற்றினர்.
அடுத்ததாகக் காலை 11.30 மணிக்கு, கர்நாடக சங்கீதமும் பரதநாட்டியமும் சங்கமிக்கும் விதமாக ‘சீசன்ஸ் வித்தின்’ நிகழ்ச்சி மேடையேறியது.
இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞரான திருவாட்டி சுதா ரகுராமன், பழங்காலப் புலவர்களின் புகழ்பெற்ற படைப்புகளின் அடிப்படையில் பருவகாலங்களின் அழகை விளக்க, சிங்கப்பூரின் முன்னணி நாட்டியக் கலைஞரான மீரா பாலசுப்ரமணியன், பரதநாட்டிய மரபின் வழியே அப்பருவகாலங்களின் வெவ்வேறு உணர்வுநிலைகளை அருமையாக வெளிப்படுத்தினார்.
காதலில் விழுந்த ஒரு பெண்ணின் உணர்வையும் ஆன்மீகப் பயணத்தையும் பருவங்களின் சுழற்சி எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை அந்தப் படைப்பு ஆராய்ந்தது.
மாலை நான்கு மணியிலிருந்து 5.30 மணி வரை ‘வாட் சே யூ?’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
தமிழ் முரசின் ஆசிரியர் த.ராஜசேகர் வழிநடத்திய நிகழ்ச்சியில், லாசால் கலைப் பள்ளியின் கல்வியாளர்கள் டாக்டர் நித்யா சாந்தினி மனோகராவும் நோரா சமோசிரும் கலந்துகொண்டனர்.
அவர்களுடன் இரா நடன நாடக நிறுவனத்தின் ஒஸ்மான் அப்துல் ஹமீத், ஓப்ரா அகாடமியின் டாக்டர் சுவா சூ போங், பாஸ்கர்ஸ் கலைக் கழகத்தின் மினாக்ஷி பாஸ்கர், சாந்தா ரதி இனிஷியேடிவ்ஸ் அமைப்பின் சாந்தா ரதி ஆகியோரும் பங்கேற்றனர்.
பல்லினச் சமூகத்தில் பாரம்பரிய இந்தியக் கலைகளின் வளர்ச்சிக்கு நிலவும் வாய்ப்புகள், சவால்கள் ஆகியவற்றுடன் இளையர்களுக்கு அக்கலைகளின்மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வழிகளும் நிகழ்ச்சியில் கலந்துரையாடப்பட்டன.
விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக ‘கிருஷ்ணா - த ப்ளூ மேஜிக்’ மாலை 6.30 மணிக்கு நிகழ்ந்தேறியது.
நிகழ்ச்சியில் புகழ்பெற்ற எழுத்தாளரும் கல்வியாளருமான துஷ்யந்த் ஸ்ரீதர், கிருஷ்ணரின் வாழ்க்கைக் கதையை அனஹிதா, அபூர்வா சகோதரிகளுடன் இணைந்து இசைச் சொற்பொழிவாக ஆற்றினார்.
மக்கள் நிறைந்த அரங்கில் சிரிப்பொலியும் கைதட்டலும் கூடுதல் அழகு சேர்த்தன.
பிஜிபி அரங்கின் இரண்டாம் தளத்தில் நிகழ்ச்சிகள் நடைபெற்ற வேளையில், முதல் தளத்தில் திருவாட்டி விஜயா மோகனின் ஏற்பாட்டில் கைவினைப் பொருள்கள், ஓவியப் படைப்புகள் ஆகியவை அடங்கிய கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மனநல நோயாளிகள், சிறப்புத் தேவையுடைய பிள்ளைகள் ஆகியோரின் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றன.
இவ்விழா வரும் காலங்களில் தொடர்ந்து பல்லினச் சமூகத்திற்கானதாக அமையுமென்று விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சௌந்தர்யா சுகுமார் ஐயர் கூறினார்.
அதிகமான நாடகப் படைப்புகள், கலைக் கண்காட்சிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தவும் முதிதா அமைப்பு முற்படுவதாக அவர் தெரிவித்தார்.


