வாழ்ந்து காட்டி வழிகாட்டிய வள்ளல்

இந்தியச் சமூகத்தினரால் ஆதரிக்கப்படும் நிறுவனங்கள் அதே சமூகத்திற்குத் திரும்ப ஆதரவு தரவேண்டும் என்ற கொள்கைபடி வாழ்ந்தவர். 

வாழ்ந்து காட்டி வழிகாட்டிய வள்ளல்

6 mins read
4695edce-0849-4012-95c5-6a72ccc5877c
ஜோதி வர்த்தக குழுமத்தின் நிறுவனர் முருகையா ராமச்சந்திராவுடன் அவர் மகனும் குழுமத்தின் தலைவருமான ராஜகுமார் சந்திரா (வலது). - படம்: இந்தியாசே மீடியா

ஜோதி ஸ்டோர், ஜோதி வர்த்தகக் குழும நிறுவனர் முருகையா ராமச்சந்திரா, வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு பூவுடலைவிட்டுப் பிரிந்தார். அவருக்கு வயது 93. 1931 டிசம்பர் 21ல் மன்னார்குடியின் திருமக்கோட்டை நகரில் திரு ராமச்சந்திரா பிறந்தார்.

1948ல் தமது 16வது வயதில் சிங்கப்பூருக்கு வந்த அவர், தமிழ் முரசின் அலுவலக உதவியாளராகப் பணியாற்றினார். 

இரவு நேர வகுப்புகளில் சேர்ந்த திரு ராமச்சந்திரா, பிறகு டைகர் ஸ்டான்டர்ட் நிறுவனத்தில் சேர்ந்து தலைமை நூலக அதிகாரியாக உயர்வு பெற்றார். அந்த நிறுவனத்தின் மூடலால் வேலையை இழந்த அவர், 1960ல் கேம்பல் லேன் சந்திப்பில் உள்ள கடைவீடு ஒன்றில் பெட்டிக் கடை திறந்தார்.

அடுத்து, அருகில் உள்ள கடையை வாடகைக்கு எடுத்து, பின்னர் தற்போதைய கட்டடத்தின் முதல் தளத்தை வாங்கி, 1992ல் ஐந்து மாடிக் கட்டடத்தை வாங்கினார். அவர் அமைத்துள்ள வர்த்தகம் சிங்கப்பூரைக் கடந்து மலேசியாவிலும் இந்தியாவிலும் சிறப்பாக உள்ளது.

இளம் வயதில் முருகையா ராமச்சந்திரா
இளம் வயதில் முருகையா ராமச்சந்திரா - படம்: ராமச்சந்திரா குடும்பத்தார்

விதிவிலக்கான நாள்கள் தவிர்த்து, ஒவ்வொருநாளும் கடைக்குச் செல்வது அவரது வழக்கம். சொந்தக் கடையை மேற்பார்வை செய்யும்போது வியாபாரம் சிறப்பாக இருக்கும் என நம்பியவர். 

தம் வாழ்நாளின் கடைசி மூன்று வாரங்கள் வரை திரு ராமச்சந்திரா, இந்தக் கொள்கையிலிருந்து வழுவாமல் நின்றார். வரும் வாடிக்கையாளர்களிடம் அன்பாகப் பேசி அவர்களது அபிமானத்தைப் பெற்றார். 

பூஜைப்பொருள்களையும் மலர்களையும் விற்கும் கடைக்காரர் மட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்குத் திருமணம், இறுதிச்சடங்கு போன்ற விவகாரங்களில் ஆலோசனை தருபவராகவும் அவர் இருந்தார்.

ராமச்சந்திரா குடும்ப இல்லமான ஜாலான் தம்பூர் நம்பர் 24ல் இறுதி மரியாதை செய்ய மக்கள் வருகை.
ராமச்சந்திரா குடும்ப இல்லமான ஜாலான் தம்பூர் நம்பர் 24ல் இறுதி மரியாதை செய்ய மக்கள் வருகை. - படம்: ரவி சிங்காரம்

எதையும் கூர்ந்து கவனிப்பவர். எல்லா அலுவல்களையும் நன்கு திட்டமிட்டு கட்டுக்கோப்புடன் நடப்பவர். சுருங்கச் சொன்னாலும் அவர் கூறும் சொற்கள், கேட்பவருக்கு நிறைவளிக்கும். தமிழ் முரசிடம் மனம் திறந்த அன்பர்கள் பலர் ஒருமித்தமாகக் கூறுவது இவையே.

சக வர்த்தகர்களுக்கு கைகொடுப்பவர்

பரந்த மனம் கொண்ட திரு ராமச்சந்திரா, குடும்பச் சூழலால் வாடகை கட்ட இயலாத லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் சிலருக்கு தனிப்பட்ட முறையில் உதவி நல்கியதாக  லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) கெளரவச் செயலாளர் ருத்திராபதி பார்த்தசாரதி, 56, தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

சிராங்கூன் ரோடு வர்த்தகர் என்ற முறையில் திரு ராமச்சந்திராவை 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரிந்துள்ளதாக லிட்டில் இந்தியா ஆர்க்கேட்டில் செலிப்ரேஷன் ஆஃப் ஆர்ட்ஸ் கடை வைத்துள்ள ருத்திராபதி குறிப்பிட்டார்.

அன்றைய ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடை.
அன்றைய ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடை. - படம்: ராமச்சந்திரா குடும்பத்தார்

“இளம் வர்த்தகர்கள் பலருக்கு நல்ல வழிகாட்டியாகவும் முன்னுதாரணமாகவும் திகழ்ந்தார்.  ஏராளமாக செல்வம் சேர்த்திருந்தபோதும் பிள்ளைகளின் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தினார். மூத்த மகள் ஜோதி, கல்வித்துறையில் சிறந்து விளங்கினார். வங்கி, தாதிமைத் துறைகளில் அவருடைய மற்ற இரண்டு மகள்களும் வேலை செய்திருந்தனர்,” என்றார் திரு ருத்திராபதி. 

வீரமாகாளியம்மன் கோயிலில் மண்டபம் கட்டுவதற்கு திரு ராமச்சந்திரா $500,000 தந்ததாகவும் மாரியம்மன் கோயிலுக்கும் மற்றும் பல கோயில்களுக்கும் அளப்பரிய திருத்தொண்டுகளைச் செய்துவந்ததாகவும் திரு ருத்திராபதி கூறினார்.

திரு ராமச்சந்திராவின் மறைவுக்குப் பிறகும் அவரது பங்களிப்புகள் தலைமுறைகள் கடந்து எதிரொலிக்கும் என்று ஹனிபா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அப்துல் சமது தெரிவித்தார். 

“அவர் வாழ்க்கையும் சேவையும் தொலைநோக்குப் பார்வையுடன் சேவை செய்த சமூகத்தில் நீடித்த முத்திரை பதித்துள்ளன,” என்றும் திரு சமது கூறினார்.

திரு ராமச்சந்திராவும் தம் தந்தையும் நெருங்கிய நண்பர்கள் என்று குறிப்பிட்ட வர்த்தகர் ஜாய்ஸ் கிங்ஸ்லி, இளம் வயதில் தமது குடும்பமும் அவரது குடும்பமும் சிலிகி ஹவுசஸ் வட்டாரத்தில் தங்கியிருந்ததை நினைவுகூர்ந்தார். 

“சிறந்த மாமனிதர். சிறுவயதிலிருந்து அவரைத் தெரியும். கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அவர் கடையில் இருப்பார். கடை நடத்துபவர்கள் நேரில் கடையைக் கவனிப்பது வர்த்தகத்தை வளப்படுத்தும் என்ற அறிவரை என் மனதில் நிற்கிறது,” என்று திருவாட்டி ஜாய்ஸ் கூறினார்.

இறைப்பற்று, சமூகப் பரிவு

திரு ராமச்சந்திரா சிறந்த இறைப் பற்றாளர் என வருணித்த ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத் தலைவர் ஆர்.மகேந்திரன், அவர் இயன்ற அளவு கோயிலுக்குச் செல்வதாகக் கூறினார்.

“நமது கோயில் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். கோயிலுக்குப் பல ஆலோசனைகளை வழங்கினார். அவரது மறைவு எல்லாக் கோயில்களுக்கும் இந்தியச் சமூகத்தினருக்கும் பேரிழப்பு,” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூர் மாணவர்களுக்காகத் திரு ராமச்சந்திரா ஆற்றிய தொண்டும் நினைவுகூரப்பட்டது.

சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளைக்கான புரவலராகத் திரு ராமச்சந்திரா செயல்பட்டது குறித்து அவரை ஆழ்ந்த மரியாதையுடனும் பாசத்துடனும் நினைவுகூர்வதாக அறக்கட்டளை, தனது சமூக ஊடகத் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு குறிப்பட்டது.

“கல்வி மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கை, பல்லாண்டுகளாக அவர் அமைதியாக நல்கிய நன்கொடைகள் ஆகியவை நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குப் பயன் தந்துள்ளன,” என்றது அந்தப் பதிவு.

சிங்கப்பூரில் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ளபோதும் பிறந்த நாட்டை அவர் மறக்கவில்லை. திருமக்கோட்டையிலும் சுற்றுவட்டாரப் பகுதியிலும் உள்ள பழைய, பராமரிப்பற்ற கோயில்களைப் புனரமைத்ததாகச் சென்னை டிரேடிங் & சூப்பர்மார்ட் உரிமையாளர் வைர. இராம மூர்த்தி தெரிவித்தார். 

திருமக்கோட்டையில் பள்ளிக் கட்டடம் ஒன்றைக் கட்டியதாக டன்லப் ஸ்திரீட்டில் சாய் பாபா ஃபேஷன் கடை உரிமையாளர் சுனில் குமார் தெரிவித்தார்.

“திரு ராமச்சந்திராவின் தாயார் பொன்னுக்கண்ணு வேதாம்பாளின் பெயர் அந்தப் பள்ளிக்குச் சூட்டப்பட்டது. 2000ல் கட்டப்பட்ட அந்தப் பள்ளியில் தற்போது 600 மாணவர்கள் பயில்கின்றனர்,” என்று திரு சுனில் கூறினார்.  

திருமக்கோட்டையிலுள்ள பொன்னுக்கண்ணு வேதாம்பாள் பள்ளி புகைப்படம்.
திருமக்கோட்டையிலுள்ள பொன்னுக்கண்ணு வேதாம்பாள் பள்ளி புகைப்படம். - படம்: சுனில் குமார்

ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் அருள்மிகு வேல்முருகன் ஆலயத்தை அமைக்க 1990களில் நடைபெற்று வந்த முயற்சிகளை ஆதரித்த வெகு சிலரில் திரு ராமச்சந்திராவும் ஒருவர் என்று அறங்காவலர் த.ராஜேந்திரன் தெரிவித்தார். 

குடும்பத்தினரையே வியக்க வைக்கும் ஈகை

வாழ்நாளில் திரு ராமச்சந்திரா துணிந்து எடுத்த பல முடிவுகளுக்கும் அவர் ஆற்றிய நற்காரியங்களுக்கும் பக்கபலமாக இருந்து வந்த அவருடைய மனைவி ராஜப்பா தனலெட்சுமி, தமது 85ஆம் வயதில் 2022ல் அமரரானார். 

மூன்று மகள்கள், புதல்வர் ராஜகுமார் சந்திரா, பேரப்பிள்ளைகள், கொள்ளு பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் ஆகியோரை விட்டுப் பிரிந்துள்ளார். 

அன்புக்குரிய தந்தையாகவும் தாத்தாவாகவும் மட்டுமின்றி நற்பண்புகளைச் செயல்வழி போதித்த வழிகாட்டியாகவும் அவர் இருந்ததைக் குடும்பத்தினர் பகிர்ந்தனர். 

ராமச்சந்திரா குடும்ப இல்லமான ஜாலான் தம்பூர் நம்பர் 24ல் இறுதி மரியாதை 
ராமச்சந்திரா குடும்ப இல்லமான ஜாலான் தம்பூர் நம்பர் 24ல் இறுதி மரியாதை  - படம்: ரவி சிங்காரம்

திரு ராமச்சந்திராவின் ஈகைத்தன்மையைக் கண்டு மகனான தாமே வியந்துபோவதாக திரு ராஜகுமார் தெரிவித்தார். 

“இவ்வளவு ஏன் தருகிறீர்கள் என்று நான் கேட்டதுண்டு. அதற்கு அவர், இந்திய மக்களால் ஆதரிக்கப்பட்ட நம் வர்த்தகம், அம்மக்களுக்குத் திரும்ப ஏதேனும் செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார். 

குடும்பத்தினர் ராஜகுமார் சந்திரா, ரெகுநாத் சிவா ஆகியோருடன்  
மனிதவள கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் உரையாடுகிறார். 
குடும்பத்தினர் ராஜகுமார் சந்திரா, ரெகுநாத் சிவா ஆகியோருடன்  மனிதவள கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் உரையாடுகிறார்.  - படம்: ரவி சிங்காரம்

நெருங்கிய பிணைப்புள்ள, ஒற்றுமையான குடும்பத்தினர் சூழ அநேகர் இல்லம் தேடி இறுதி மரியாதை செய்வதிலிருந்து அவர் பெரிய மனம் படைத்தவர் என்பதைக் காண முடிவதாக மனிதவள கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தெரிவித்தார்.

வாழ்க்கையின் வெற்றிக்கு பணமும் செல்வாக்கும் அளவுகோள்கள் அல்ல என்று தம் தாத்தா செயல்வழி உணர்த்தியதாக லிஷாவின் தலைவர் ரெகுநாத் சிவா தெரிவித்தார். 

பாசமிகு பேரப்பிள்ளைகள்

வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்தாலும் வேர்களை மறவாதிருக்கும்படி திரு ராமச்சந்திராவிடம் கற்றுக்கொண்டதாக அவரது பேரப்பிள்ளைகள் கூறுகின்றனர்.

பிறந்தநாள் குதூகலம்.
பிறந்தநாள் குதூகலம். - படம்: ராமச்சந்திரா குடும்பத்தார்

“தாத்தா விட்டுச்சென்ற வெற்றிடம் ஆழமானது. என்றாலும் அவரது புகழ் நம்மிடையே தொடர்ந்து வாழ்கிறது. நான் அவரது வயதை அடையும்போது அவர் சாதித்ததில் பாதி அளவாவது என்னால் சாதிக்க முடிந்தால் நான் என்னை நற்பேறு பெற்றவனாகக் கருதுவேன்,” என்றும் திரு ரெகுநாத் கூறினார்.

உழைப்பாலும் உறுதியாலும் மாபெரும் வர்த்தகத்தை என் தாத்தா உருவாக்கினார். மதிப்புமிக்கவரும் பண்புமிக்கவருமான அவரது புகழ் என்றும் நிலவும் என்று பேரன் ரமணன் ரவீந்திரன் கூறுகிறார்.

ராமச்சந்திரா தாத்தா குடும்பத்திற்குத் தூணாக மட்டுமில்லாமல் அனைவர்க்கும் நன்கு அறிமுகமான, வாழ்த்தப்பட்ட ஆளுமையாக இருப்பதை நினைத்து பெருமைப்படுவதாக அவரது பேத்திவழி மாப்பிள்ளையாக இருக்கும் கார்த்திகேசன் மணியம் தெரிவித்தார்.

வாழ்வில் வழிகாட்டும் ஒளியாக தாத்தா ராமச்சந்திரா மிளிர்ந்ததாக பேத்தி மலர் உருக்கத்துடன் கூறினார்.

“கனிவான செயல்பாடுகளாலும் மாறா பண்புகளாலும் என்னைச் செதுக்கியுள்ளார்,” என்றார் மலர்

இறுதிச்சடங்கு

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) மாலை ஏறத்தாழ 6 மணி முதல் 6.15 மணி வரை திரு ராமச்சந்திராவின் நல்லுடல் ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடைக்குக் கொண்டுசெல்லப்பட்டு பின் மண்டாய் தகனச் சாலையில் சேர்க்கப்படும் என்றும் திரு ரெகுநாத் சிவா கூறியுள்ளார்.

கூடுதல் செய்தி: ரவி சிங்காரம் 

குறிப்புச் சொற்கள்