தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசிய தின அலங்காரங்களில் மின்னும் வீவக குடியிருப்புப் பேட்டைகள்

3 mins read
24933175-d153-4cf0-bd2e-9fc617c6a554
மூத்தோருக்கு கைவினைப் பொருள்கள் செய்யக் கற்றுத்தரும் மாணவர்கள். - படம்: ஏற்பாட்டுக் குழு

தேசிய தினத்தை முன்னிட்டு, தீவெங்கிலும் பல்வேறு வீவக குடியிருப்புப் பேட்டைகளை அப்பகுதி மக்கள் இணைந்து அலங்கரித்துள்ளனர். பள்ளி மாணவர்கள், மூத்தோர் என இன, வயது வேறுபாடின்றி அனைவரும் வெவ்வேறு கைவினைப் பொருள்களை செய்து, அவற்றைக் கொண்டு பேட்டைகளை அலங்கரித்துள்ளனர்.

தேசியக் கொடி தொகுப்பு அலங்காரத்தில் மின்னும் சுவா சூ காங் 

நாட்டின் பெருமையையும் குடிமக்களின் ஒற்றுமையையும் எடுத்துக்கூறும் விதமாக சுவா சூ காங் (Zone 2) பகுதியில், தேசியக் கொடிகளைக் கொண்டு புளோக் 26 தெக் வாய் லேனை அலங்கரித்திருந்தனர்.

சிங்கப்பூரின் 59வது தேசிய தினத்தைக் குறிக்கும் வண்ணம் ‘59’ எனும் எண் வடிவில் அலங்காரத்தை வடிவமைத்திருந்தனர்.

சுவா சூ காங்கின் நுழைவாயிலான இப்பேட்டையின் அலங்கரிப்பு நிகழ்ச்சி ஜூலை 14ஆம் தேதி நடைபெற்றது. இதில் அடித்தள அமைப்புகளின் தலைவர்களும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சி மக்களின் நாட்டுப்பற்றைப் பறைசாற்றுவதுடன் சக குடிமக்களாகத் தாங்கள் பகிரும் பிணைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இது உறவுகளை வலுப்படுத்தி, நாட்டுப்பற்றைத் தூண்டி, கொண்டாட்ட மனநிலையை உருவாக்குவதற்கான முயற்சி என்று பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

சிறுவர்கள்-மூத்தோரை இணைத்த கைவினை அலங்காரங்கள்

மூத்தோர் செய்த காகிதப் பூக்களாலான அலங்காரம்.
மூத்தோர் செய்த காகிதப் பூக்களாலான அலங்காரம். - படம்: ஏற்பாட்டுக் குழு

செம்பவாங் சென்ட்ரல் (Zone B) பகுதியில் சிறுவர்களுடன் இணைந்து மூத்தோர் செய்த அலங்காரங்கள் அப்பகுதியை வண்ணமயமாக்கின.

ஜூலை 27ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வெலிங்டன் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 22 பேர் இணைந்து அப்பகுதியில் வசிக்கும் மூத்தோருக்கு காகிதப் பூ செய்யக் கற்றுக் கொடுத்தனர்.

சிவப்பு, வெள்ளை காகிதப் பூக்களும் சிறுவர்கள், மூத்தோரின் சிரிப்பொலியும் அப்பகுதியை உற்சாகத்தில் ஆழ்த்தின.

ஏறத்தாழ மூத்தோர் 100 பேர் இணைந்து சிறுவர்கள் கற்றுக்கொடுத்த பூக்களைச் செய்ததுடன், இதய வடிவிலான அட்டைகளில் நாட்டுக்குத் தங்கள் வாழ்த்துகளைக் கைப்பட எழுதினர்.

“மூத்தோருடன் இணைந்து அலங்காரங்கள் செய்தது உற்சாகமாக இருந்தது. அவர்கள் எப்போதும் கனிவுடனும் புன்சிரிப்புடனும் இருப்பார்கள். இது ஒரு சிறந்த அனுபவம்,” என்றார் இதில் பங்கேற்ற தொடக்கநிலை 6 மாணவி திரிஷால கீர்த்திகா, 12.

மூத்தோரிடம் உற்சாகமாகப் பேசி மகிழும் மாணவி திரி‌‌‌ஷால கீர்த்திகா.
மூத்தோரிடம் உற்சாகமாகப் பேசி மகிழும் மாணவி திரி‌‌‌ஷால கீர்த்திகா. - படம்: லாவண்யா வீரராகவன்

“தொலைக்காட்சி பார்ப்பது, திறன்பேசியில் விளையாடுவதைவிட இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது சிறந்த அனுபவம். அனைவரையும் என் சொந்த தாத்தா, பாட்டிகளாகக் கருதுகிறேன். நாங்கள் சொல்லிக் கொடுப்பதைக் கேட்டு அவர்கள் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் மாணவி பாவனா, 12.

இதில் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர் மீனாட்சி, 72, கிருஷ்ணன், 80, இணையர். சிறுவர்களுடன் இணைந்து அலங்காரப் பொருள்கள் செய்ததில் தங்கள் வயது குறைந்ததுபோல் உணர்ந்ததாகக் கூறினர் இந்த இணையர்.

இதேபோன்ற நிகழ்வுகளில் தொடர்ந்து குழந்தைகளுடன் நேரம் செலவிட்டால் நோய்களும் பறந்துவிடும் என்கின்றனர் இவர்கள்.

மக்கள் கழகக் குடியிருப்பாளர் கட்டமைப்புத் (Residents Network) தொண்டூழியர்கள், மூத்தோர் செய்த கைவினைப் பொருள்களைக் கொண்டு அப்பகுதியை அலங்கரித்தனர்.

நீடித்த நிலைத்தன்மையை எடுத்தியம்பிய கான்பெரா, வெலிங்டன் சர்க்கிள் பகுதி அலங்காரங்கள்

மறுசுழற்சிக் கலைப்பொருள்கள் செய்யக் கற்றுத்தரும் தொண்டூழியர் ஜீவா (இடது).
மறுசுழற்சிக் கலைப்பொருள்கள் செய்யக் கற்றுத்தரும் தொண்டூழியர் ஜீவா (இடது). - படம்: ஏற்பாட்டுக் குழு

செம்பவாங் பகுதியைச் சேர்ந்த ‘இன்டராக்ட் கிளப்’, ‘ப்ளாசம் சீட்ஸ்’, ‘டச் கம்யூனிட்டி சர்வீசஸ்’ உள்ளிட்ட சமூக அமைப்புகள், மக்கள் கழகத்துடன் இணைந்து அப்பகுதி மூத்தோரை ஒருங்கிணைத்து தேசிய தினக் கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தின.

குடியிருப்பாளர்கள் அமைப்பு வழக்கமாக நடத்தும் மூத்தோர்களுக்கான அமர்வுகளின் ஒரு பகுதியாக கடந்த ஜூலை 30ஆம் தேதி கைவினை அலங்காரப் பொருள்கள் செய்யக் கற்றுத்தரும் அமர்வுகள் நடத்தப்பட்டன.

முட்டை ஓட்டில் செய்யப்பட்ட பூ அலங்காரம்.
முட்டை ஓட்டில் செய்யப்பட்ட பூ அலங்காரம். - படம்: ஏற்பாட்டுக் குழு

இந்நிகழ்ச்சிகள் குறிப்பாக மூத்தோரிடம் மறுசுழற்சி குறித்த புரிதலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வண்ணம் அமைந்தன.

பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களில் வண்ணப் படங்கள் வரைவது, முட்டை ஓடுகளைக் கொண்டு கைவினைப் பொருள்கள் செய்வது உள்ளிட்டவை மூத்தோருக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டன.

பயன்படுத்தப்பட்ட போத்தலுக்கு கலை வடிவம் தரும் குடியிருப்பாளர் மீனாட்சி (இடது).
பயன்படுத்தப்பட்ட போத்தலுக்கு கலை வடிவம் தரும் குடியிருப்பாளர் மீனாட்சி (இடது). - படம்: ஏற்பாட்டுக் குழு

கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றிய தொண்டூழியர் ஜீவா, இந்த நிகழ்ச்சியை வழிநடத்தினார். தற்போது தாதிமைப் பணியில் ஈடுபட்டு வரும் இவர், மூத்தோரை ஒன்றிணைத்து நிகழ்ச்சிகள் நடத்துவது நட்புறவை வலுப்படுத்துவதுடன் சமூகத்திற்குத் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்கிறோம் எனும் எண்ணத்தை அவர்களிடம் விதைக்கிறது என்றார்.

“மூத்தோரும் குழந்தைகளும் ஏறத்தாழ ஒரே மனநிலையில் இருப்பார்கள். புதியதாக ஏதேனும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவர்களிடம் மேலோங்கி இருக்கும். அவர்களை மறுசுழற்சி செய்ய ஊக்குவிப்பது அவசியம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்