அண்டைவீட்டாரை ஒன்றிணைத்த தேசிய தின அலங்காரம்

அண்டைவீட்டாரை ஒன்றிணைத்த தேசிய தின அலங்காரம்

2 mins read
54e4de88-057b-4906-8516-1cb8f3649eb4
பாய லேபார் - கோவன் வட்டாரவாசிகளால் உருவாக்கப்பட்ட 2 மீட்டர் உயரம் கொண்ட கேக் வடிவம். - படம்: மக்கள் கழகம் - ‘பேஷன்ஆர்ட்ஸ்’ கலைத்திட்டம்
Google News Preferred Icon

“பல ஆண்டுகளாக அருகருகே அடுக்குமாடி புளோக்குகளில் குடியிருந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாதவர்கள், எங்களது தேசிய தின அலங்கார முயற்சியால் சந்தித்து, உரையாடி மகிழ்ந்தது நெகிழ்ச்சியளிக்கிறது,” என்று பாய லேபார் சமூகக் கலை, கலாசார மன்றத் தலைவர் சுப்பிரமணியன் சங்கரசுப்பிரமணியன், 49, கூறினார்.

பாய லேபார் - கோவன் வட்டாரவாசிகள் இணைந்து சிங்கப்பூரின் 61வது பிறந்தநாளைக் கொண்டாட 2 மீட்டர் உயரம் கொண்ட நான்கு அடுக்கு கேக் ஒன்றை வடிவமைப்பு களிமண்ணைக் (modelling clay) கொண்டு தயாரித்துள்ளனர்.

அந்த கேக் சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) கோவன் நடுவத்தில் நடைபெற்ற பாய லேபார் - கோவன் ‘பேஷன்ஆர்ட்ஸ்’ கலை விழாவில் இடம்பெற்றது. அதனைச் சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் பதிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அவ்வட்டாரத்தின் முக்கிய அடையாளங்களான பாய லேபார் - கோவன் சமூக மன்றம், பாய லேபார் ஆகாயப்படைத் தளம், 105 ஹைனனீஸ் சந்தை, உணவு நிலையக் கடைகள், 209 கோவன் சந்தை ஆகியவை காற்றில் உலர்ந்த களிமண் (air-dry clay) வடிவங்களாக கேக்கில் பொருத்தப்பட்டுள்ளன.

அவற்றுடன் உள்ளூரில் விருப்பமாக உட்கொள்ளப்படும் உணவுகளான ‘ஜஸ்ட் ஜெம்’ பிஸ்கெட்டுகள், சிக்கன் ரைஸ், சாத்தே, மீனுருண்டை நூடல்ஸ் ஆகியவையும் அலங்காரங்களாகப் பொருத்தப்பட்டன.

“நம் அக்கம்பக்க ரத்தினங்கள்” (Our Neighbourhood Gems) என்ற திட்டத்தின்கீழ் செய்யப்பட்டுள்ள இந்த அலங்காரம், சென்ற ஆண்டின் அலங்காரங்களுடன் ஒப்பிடுகையில் மேலும் சிறப்பான முயற்சியாக கருதப்படுகிறது எனத் திரு சங்கரசுப்பிரமணியன் கூறினார்.

“கேக்கில் பொருத்தப்பட்டுள்ள வட்டார இடங்கள், அங்கு வசிப்பவர்களின் வாழ்வியலில் முக்கியப் பங்கு வகிப்பவையாக அமைந்துள்ளன. அவ்வடிவங்களை அவர்கள் துடிப்புடன் உருவாக்கினர்,” என்றார் அவர்.

காற்றில் உலர்ந்த வடிவங்களை வட்டாரவாசிகள் அவர்கள் கைப்படச் செய்ய அவர்களுக்கு மூன்று பயிலரங்குகள் நடத்தப்பட்டதாகவும் ஏறக்குறைய 100 தொண்டூழியர்கள் இணைந்து அம்முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“வெவ்வேறு பின்னணிகள், இனங்களைச் சேர்ந்த அனைவரும் அர்த்தமுள்ள வகையில் ஒன்றிணைந்து செயல்பட்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது,” என்றார் அவர்.

பாய லேபார்-கோவன் வட்டார குடியிருப்பாளரான திருவாட்டி ரீடா அந்தோனிதாசும் பாய லேபார் சமூகக் கலை, கலாசார மன்றத் தலைவர் திரு சுப்பிரமணியன் சங்கரசுப்பிரமணியனும் பாய லேபார் - கோவன் ‘பேஷன்ஆர்ட்ஸ்’ கலை விழாவில் கலந்துகொண்டனர்.
பாய லேபார்-கோவன் வட்டார குடியிருப்பாளரான திருவாட்டி ரீடா அந்தோனிதாசும் பாய லேபார் சமூகக் கலை, கலாசார மன்றத் தலைவர் திரு சுப்பிரமணியன் சங்கரசுப்பிரமணியனும் பாய லேபார் - கோவன் ‘பேஷன்ஆர்ட்ஸ்’ கலை விழாவில் கலந்துகொண்டனர். - படம்: மக்கள் கழகம் - ‘பேஷன்ஆர்ட்ஸ்’ கலைத்திட்டம்

அலங்கார பணிகளில் பங்கேற்ற ஒருவரான திருவாட்டி ரீடா அந்தோனிதாஸ், 69, அப்பயிலரங்குகள் தமது அண்டைவீட்டாரின் திறமைகளைக் கண்டு வியக்க செய்ததாக கூறினார்.

“பயிலரங்குகளில் அனைவரும் வெவ்வேறு கலை வடிவங்களைப் புத்தாக்கத்துடன் செய்தனர். அழகான மலர் வடிவங்களை அவர்கள் செய்ததுடன் எனக்கும் கற்பித்தனர். மனதிற்கு நிறைவான அனுபவமாக அமைந்தது,” என்றார் அவர்.

தொண்டூழியர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்து, கேக்கின் உருவாக்கத்தில் பக்கபலமாக இருந்த உள்ளூர் கலைஞர்களுக்குத் திரு சங்கரசுப்பிரமணியன் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்