சிங்கப்பூரின் 60வது தேசிய தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 180க்கும் மேற்பட்ட மூத்தோர் ஒரு சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) அங்கீகரிக்கப்பட்டனர்.
சன் லவ் தாதிமை இல்லங்கள், பல்வேறு முதியோர் இல்லங்கள், துடிப்பான முதுமை நிலையங்கள் முதலியவற்றைச் சேர்ந்த அந்த முதியவர்கள், சுவையான உணவையும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் பிஜிபி மண்டபத்தில் அனுபவித்து மகிழ்ந்தனர்.
இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை இந்து அறக்கட்டளை வாரியம், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில், சிங்கப்பூர் சத்ய சாய் அனைத்துலக அமைப்பு ஆகியவை, ஷா அறக்கட்டளையின் ஆதரவுடன் ஏற்பாடு செய்திருந்தன.
வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
தேசிய தினம் என்பது பிரம்மாண்டமான அணிவகுப்புகள் அல்லது வாணவேடிக்கைகளைப் பற்றியது மட்டுமன்று, மக்களையும் பற்றியது என்று அவர் தமது உரையில் கூறினார்.
“நீங்கள் ஒரு முதியவராக இருந்தாலும், இளையராக இருந்தாலும், அல்லது நமது நாட்டிற்காக அயராது உழைக்கும் ஊழியராக இருந்தாலும், உங்கள் அர்ப்பணிப்புதான் இன்றைய சிங்கப்பூரை உருவாக்கியுள்ளது,” என்று அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் முதியோர்களுடன் இளைய தொண்டூழியர்கள் கலந்துரையாடி பழகியதைப் பாராட்டிய அவர், “பணத்தை நாம் மீண்டும் சம்பாதிக்கலாம். ஆனால், கழிந்த நேரத்தை மீண்டும் பெற முடியாது. நமது மூத்தோர்களுக்கு நாம் அளிக்கக்கூடிய மிகப்பெரிய பரிசு நமது நேரமே,” என்று வலியுறுத்தினார்.
இன்றைய இளைய தலைமுறை அமைதியையும் பாதுகாப்பையும் அனுபவிப்பதற்கு நமது மூத்தோர் நாட்டிற்காகச் செய்த தியாகங்களே காரணம் என்றும் டாக்டர் ஹமீது குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“ஒரு தேசம் அதன் மக்களால் கட்டமைக்கப்படுகிறது. நாம் தேசிய தினத்தைக் கொண்டாடும்போது, சமூக உறவுகளையும் கொண்டாடுகிறோம். இத்தகைய நிகழ்ச்சிகள் இனம், மொழி, சமயத்தை தாண்டி பிணைப்புகளை வலுப்படுத்துகின்றன,” என்று அவர் கூறினார்.
விருந்தினர்கள் எட்டு வகை சைவ உணவு விருந்து, சிரிப்பு யோகா பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர். தொண்டூழியர்கள் உணவு பரிமாறி, அன்பளிப்புப் பைகளை விநியோகித்து, மூத்தோருடன் நேரத்தைச் செலவிட்டனர்.
“இம்முறை இந்த வருடாந்தர நிகழ்ச்சி நண்பகல் விருந்து நிகழ்ச்சியாக அமைந்ததால், ஏற்பாடுகள் மிகவும் விரிவாக இருந்தன. இரண்டு நாள்களுக்கு முன்னரே தயாரிப்புகளைத் தொடங்கினோம்,” என்று பெருமாள் கோவிலின் துணைத் தலைவர் வளத்தம்மை முத்துபழனியப்பன் கூறினார்.
பல இளையர்களை உள்ளடக்கிய தொண்டூழியர்கள் ஆர்வமுடன் முன்வந்து உதவியது மகிழ்ச்சி அளித்ததாக அவர் தெரிவித்தார். பங்கேற்றவர்களில் இளைய தொண்டூழியர் எட்டு வயதுடையவரும், வயதில் மூத்தவர் 70 வயதுடையவருமாவார்.
இத்தகைய நிகழ்ச்சிகள், மூத்தோருக்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதையும், குறிப்பாக இளைய தலைமுறையினரால் அன்போடு பராமரிக்கப்படுகிறார்கள் என்பதையும் உணர்த்துகின்றன என்று சன்லவ் இல்லங்களின் தலைமைத் திட்ட அதிகாரி ராஜமோகன், 64, கூறினார்.
சத்ய சாய் அனைத்துலக அமைப்பைச் சேர்ந்த 27 வயதான தொண்டூழியர் ஹரன் புனிதன் நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக மேடையில் கித்தார் இசைத்துப் பாடினார்.
“மூத்தோர் பலர் பங்கேற்பதால் அவர்களுக்காக பழைய தமிழ், இந்தி பாடல்களைத் தேர்ந்தெடுத்தேன். எனது மேடை நிகழ்ச்சியின்போது அவர்கள் கைதட்டிச் சிரித்து இன்புற்றது கண்டு நானும் பெருமகிழ்ச்சி அடைந்தேன்,” என்று அவர் கூறினார்.