பிரதமர் லாரன்ஸ் வோங் ஆகஸ்ட் 23ஆம் தேதி தமது தேசிய தினப் பேரணி உரையில் அறிவித்திருந்த பல்வேறு திட்டங்கள் வரவேற்கத்தக்கதாக உள்ளதென இந்தியச் சமூகத்தினர் கூறியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி முன்னேறுதல், இளம் குடும்பங்களுக்கான கூடுதல் ஆதரவு, இளையர்களிடையே சமூக ஊடகத் தாக்கம், எதிர்காலத் தொழில்துறை, இடவசதித் திட்டங்கள் ஆகிய நான்கு அம்சங்களை மையமாகக் கொண்டிருந்தது பிரதமரின் உரை.
பெற்றோர்க்குக் கூடுதல் பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு வழங்கப்படுவதைச் சிறந்த முயற்சியாகக் கருதுகிறார் மருத்துவ ஊழியர் ராஜேந்திரன் ராஜேஷ்.
ஆனால், இந்த முயற்சி வெற்றிபெறுவது முதலாளிகளின் கைகளில்தான் உள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்.
“இந்தப் புதிய திட்டங்கள் நிச்சயமாக முன்பிருந்த நிலையைவிட சிறந்ததொரு சூழலை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் அவை வெற்றியடைய, ஊழியர்களின் தேவைகளைப் புரிந்துக்கொள்ளும் முதலாளிகள் அவசியம். திட்டங்கள் எந்தளவிற்கு ஆக்கபூர்வமாக இருக்கின்றன என்பதை வேலையிட ஆதரவே நிர்ணயிக்கும்,” என்றார் அவர்.
செயற்கை நுண்ணறிவை முன்னிறுத்திய திட்டங்கள் மக்களுக்குப் பயனுள்ளதாக அமையுமென சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் நம்புகிறார்.
“குறைந்த வருமானமுடைய குடும்பத்தினருக்குச் செயற்கை நுண்ணறிவுத் திறன்களைக் கற்பித்து அவர்களைப் பின்தங்கிவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.
இளம் பெற்றோர்க்கு பிடிஓ வீடு வாங்குவதற்கான முன்னுரிமை வழங்கப்படுவது பாராட்டத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிதி, நேரம், வீடு என இளம் பெற்றோர்க்கு இருக்கும் முக்கியச் சவால்களை நிவர்த்திசெய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் சொன்னார்.
பிரதமர் தமது உரையில் அறிவித்த மேற்குத் தீவைக் குறித்த விரிவான தகவல்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் வழக்கறிஞர் ஹரன் சுகுமாறன்.
“அடுத்த 50 அல்லது 100 ஆண்டுகளில் மேற்குத் தீவில் அமைக்கப்படவிருக்கும் கட்டமைப்புகள் எவ்வாறு சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்கு உதவும் என்பதைக் காண ஆவலாக உள்ளேன்,” என்றார் அவர்.
சிங்கப்பூரையும் தெக்கோங் தீவையும் இணைக்க வருங்காலத்தில் கடலடிச் சுரங்கப்பாதையை அமைப்பதன் சாத்தியக்கூறு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் எனப் பிரதமர் கூறியிருந்ததும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


