ஆன்மிக வழிபாட்டைத் தவிர, கலைகளையும் மனித உறவுகளையும் கொண்டாடும் ஒரு பாரம்பரியத் திருவிழா நவராத்திரி.
ஒற்றைப்படையில் அமைக்கப்பட்ட படிகளில் தெய்வ உருவச் சிலைகளையும், மனித வாழ்க்கையை உணர்த்தும் பொம்மைகளையும், பல்வேறு கைவினைப் பொருள்களையும் வரிசையாக அடுக்கி வைக்கும் பழக்கமே கொலு எனப்படுகிறது. நவராத்திரி கொண்டாடப்படும் ஒன்பது இரவுகளுக்கும் மிக முக்கிய அம்சமாகக் கொலு அமைப்பு திகழ்கிறது.
நவராத்திரித் திருவிழாவைக் கடைப்பிடிக்கும் வீடுகளில் மக்கள், மிகுந்த பக்தியுடனும் கலைநயத்துடனும் கொலு அமைத்து, உற்றார் உறவினரையும் நண்பர்களையும் வீட்டிற்கு அழைத்துத் தாம்பூலம் வழங்கி மகிழ்வர்.
பழம்பெரும் பழக்கத்தைப் பின்பற்றும் இளையர்
தொடக்கப் பள்ளியில் பயின்றபோது தம் தமிழாசிரியர் வீட்டுக் கொலு தம்மை மிகவும் ஈர்த்ததாகக் கூறினார் திரு நவீன் பன்னீர்செல்வம், 31.
இருப்பினும், ஐந்தாண்டுகளுக்கு முன்புதான் திரு நவீன், நவராத்திரியின்போது தம் வீட்டிலேயே கொலு வைக்கத் தொடங்கினார்.
தம் வீட்டில் மூலதெய்வமாக அம்மனை வழிபடும் நிலையில், நவராத்திரி விழா மிகவும் சிறப்பானது என்று திரு நவீன் குறிப்பிட்டார்.
ஒவ்வோர் ஆண்டும் புதிய பொம்மைகள் சேர்வதால் இவரது கொலு மண்டபம் வளர்ந்துகொண்டே போகிறது.
அவற்றில் சில பரிசுகளாகக் கிடைத்தவை என்றும் வேறு சில, தான் வெளிநாடுகளுக்குச் சென்றபோது வாங்கியவை என்றும் திரு நவீன் குறிப்பிட்டார்.
அத்துடன், உற்றார் உறவினர் தொடர்ந்து ஒன்பது இரவுகள் வீட்டுக்கு வருவது மிகவும் உற்சாகமளிக்கும் ஒரு தருணம் என்றார் இவர்.
“இதன் சிறப்பு என்னவென்றால், ஒவ்வோர் ஆண்டும் புதிதாக ஒருவர் என் கொலுப்பூசைக்கு வருவார். நான் அதனை ஒரு வரமாகக் கருதுகிறேன்,” என்று இவர் சொன்னார்.
வீட்டுக்கு ஒரே மகனான திரு நவீனுக்கு அவரது பெற்றோர் மிகுந்த உறுதுணையாக உள்ளனர்.
கல்வித் துறையில் பணிபுரியும் தாயார், ஒன்பது நாள்களுக்கும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து சமையல் வேலைகளைக் கவனிப்பார் என்றும் தந்தை தேவையான பொருள்களை வாங்க அடிக்கடி லிட்டில் இந்தியா செல்வார் என்றும் திரு நவீன் விளக்கினார்.
“என் அம்மாதான் என் முதல் தெய்வம் என்று கருதுகிறேன். ஒவ்வோர் ஆண்டும் சரஸ்வதி பூசையின்போது, தவறாமல் நான் முதலில் என் அம்மாவையே வணங்குவேன்,” என்றார் இவர்.
நவராத்திரிக்குக் கொலு வைக்கும் வழக்கம் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட இவர், “தற்போது அதிகமான இளையர்கள் தங்களது முந்தைய தலைமுறையினரிடமிருந்து இதுபோன்ற பண்பாட்டுக் கடமைகளை ஏற்றுக்கொள்கிறார்கள்,” என்றும் சொன்னார்.
இதுபோன்ற பழக்கங்கள் எளிதில் மறைந்துவிடா என்பதில் தமக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது என்றும் அவற்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வது நல்லது என்றும் இந்த இளையர் கூறினார்.
பாட்டியின் வழக்கத்தைத் தொடரும் பேத்தி
பாட்டியிடமிருந்து கொலு வைக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொண்ட திருவாட்டி பிரேமா சுரேஷ், 44, இப்போது தமது சொந்த வீட்டில் அதனைத் தொடர்கிறார்.
இந்தப் பழக்கம் தொடர்ந்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக நீடித்து வருவதாக இவர் குறிப்பிட்டார்.
“பதின்ம வயதில் நான் பாட்டியின் கொலு பொம்மைகளுக்கு வண்ணம் தீட்ட உதவினேன்,” என்று நினைவுகூர்ந்தார் திருவாட்டி பிரேமா.
இனி யாராவது பொறுப்பேற்க வேண்டும் என்பதை உணர்ந்த பிரேமாவின் பாட்டி, அவருக்கும் அவரது சகோதரிகளுக்கும் கொலு வைக்கும் பழக்கத்தைப் பற்றிச் சொல்லிக் கொடுத்தார்.
“ஒவ்வோர் ஆண்டும் கொலுவில் புதிய சிலைகளைக் காண்பதில் நாங்கள் உற்சாகமடைவோம்,” என்கிறார் திருவாட்டி பிரேமா.
நவராத்திரித் திருவிழா வழியேதான் இவர் தம் கணவரையும் சந்தித்தார்.
“நவராத்திரியின்போது அவர் என் நண்பருடன் வீட்டிற்கு வந்தார். அப்படித்தான் நாங்கள் முதன்முதலில் சந்தித்தோம்,” என்று புன்னகைத்தவாறே கூறினார்.
மேலும், கொலு வைக்கும் கலை தமக்கு நிதி மேலாண்மையின் முக்கியத்துவத்தையும் கற்றுக் கொடுத்ததாகத் திருவாட்டி பிரேமா குறிப்பிட்டார்.
“நவராத்திரி நேரம் வரை பாட்டி ஒவ்வொரு நாளும் பத்து வெள்ளி சேமித்து, கொலுவுக்குத் தேவையானதை வாங்குவார். அது எனக்கும் நிதியைச் சிறப்பாகக் கையாளக் கற்றுக் கொடுத்தது,” என்றார் இவர்.
பாட்டிக்குப் பிறகு, திருவாட்டி பிரேமாவின் சித்தி கொலு வைக்கும் பழக்கத்தைத் தொடர்ந்தார்.
திருமணத்துக்குப் பிறகு தன் சொந்த வீட்டில், பாட்டி கற்றுக்கொடுத்த முறைப்படி கொலு வைத்து வருகிறார் திருவாட்டி பிரேமா.
இருப்பினும், இப்போது கொலு வைக்கும் பழக்கத்தில் சில மாற்றங்கள் உள்ளன என்றும் இவர் சுட்டினார்.
“பாட்டியின் வீட்டில் எல்லா இரவுகளிலும் பஜனைப் பாடல்கள் இடம்பெறும். நான் இப்போது ஒரு தனியார் வீட்டில் வசிப்பதால் அது சற்று சிரமமாக இருக்கிறது,” என்று பகிர்ந்தார்.
இப்போது இவரது வீட்டுக் கொலுப் பூசையில் பாட்டி கலந்துகொள்கிறார்.
கொலுவுக்கான படிகளை அமைக்கும் வேலையை கணவரும் மகனும் பார்த்துக்கொள்ள, கொலுப்பூசை சார்ந்த அனைத்தையும் திருவாட்டி பிரேமா தன் மகளுக்குக் கற்றுத் தருகிறார்.
“எனக்குப் பிறகு, என் பிள்ளைகள் பொறுப்பேற்று, பாட்டி எனக்குக் கற்றுக் கொடுத்ததை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்றார் இவர்.
காலத்திற்கேற்ப மாறிவரும் கொலு
நவராத்திரியின்போது கொலுப்படிகள் பொதுவாக 3, 5 அல்லது 9 என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமைக்கப்படுவதாகக் கூறினார் திருவாட்டி சாரதா பாலசுப்ரமணியன், 64.
முன்பெல்லாம் களிமண் பொம்மைகளுடன் ராமர், கிருஷ்ணர் போன்ற தெய்வங்களின் உருவங்கள் மட்டுமே கொலுவில் இடம்பெற்றதாகத் தெரிவித்த இவர், தற்போது காலத்திற்கேற்ப பல மாற்றங்கள் இடம்பெற்று வருவதாகவும் கூறினார்.
சிங்கப்பூரின் அடையாளங்களான பறவைகள் மகிழ்வனம், விலங்கியல் தோட்டம், கருப்பொருள் பூங்கா போன்றவற்றின் மாதிரிகள் கொலுவை அலங்கரிக்கின்றன.
கடந்த காலங்களில் சிங்கப்பூரின் 50வது ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டங்களை விளக்கும் வகையிலும் திருவாட்டி சாரதா கொலு அமைத்திருந்தார்.
இவ்வாண்டு இவரது கொலுவில் 200க்கும் மேற்பட்ட பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் பல புதிய பொம்மைகள்.
மைசூர் மகாராஜா ஊர்வலம், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சிதரும் காஞ்சி அத்திவரதர் உருவம், திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின்போது வீதி உலாவுக்காகப் பயன்படுத்தும் வாகனங்கள் போன்றவற்றின் மாதிரிகளும் கொலுவில் இடம்பெற்றுள்ளன.
“கொலுவின் தொடக்கப் பணியாக, இவ்வாண்டு அக்டோபர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்பட்ட மகாளய அமாவாசை நாளன்று கலசம் வைத்து, ஒவ்வொரு நாளும் சிறுக சிறுக இந்தக் கொலுவை அமைக்கிறேன்.
“நவராத்திரி நாள்களில் வீட்டிற்கு வருகைதரும் விருந்தினர்களுக்குப் பாடல்கள் பாடி, தாம்பூலம், பரிசு வழங்குவது வழக்கம்,” என்று திருவாட்டி சாரதா கூறினார்.
கொலுவைப் பார்க்க வரும் பிற இனத்தவரும் இந்தியப் பண்பாட்டைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் தாம் இதைத் தொடர்ந்து செய்து வருவதாகத் திருவாட்டி சாரதா கூறினார்.
