அந்திமகாலம் தொடர்பாக சிங்கப்பூர் அந்திமகால பராமரிப்பு மன்றம் (Singapore Hospice Council), பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுகாதார நிபுணர்களை ஈடுபடுத்தி வருகிறது.
மரினா பே சேண்ட்ஸ் எக்ஸ்போ மாநாட்டு மையத்தில் ஆகஸ்ட் மாத பிற்பாதியில் நடந்த சிங்கப்பூர் அந்திமகாலத் தரநிலை மேம்பாடு மாநாட்டில் 450க்கும் அதிகமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.
முன்னணி அந்திமகால பராமரிப்பு நிபுணர்களும் பன்முகத் திறன்களுடைய சுகாதார நிபுணர்களும் பங்கேற்ற இந்த மாநாட்டில், தேசிய பல்கலைக்கழகச் சுகாதாரக் கட்டமைப்பு (NUHS), தேசிய சுகாதார குழுமம் (NHG) மற்றும் சிங்ஹெல்த் குழுமத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட தலைவர்கள் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொண்டு கூடுதல் இணக்கத்தை ஏற்படுத்த முயன்றனர்.
அந்திமகால பராமரிப்பைப் பொறுத்தவரையில் அந்தத் துறையில் அல்லாத, வேறு நிபுணத்துவம் கொண்டுள்ளோரை ஈடுபடுத்துவதன் முக்கியத்துவத்தை சிங்கப்பூர் அந்திமகால பராமரிப்பு மன்றத்தின் நிர்வாக இயக்குநர் குமாரி சிம் பீ ஹியா வலியுறுத்தினார்.
“இதர வகை பராமரிப்பாளர்கள் நோயாளிகளுடன் முக்கியத் தொடர்புப் புள்ளிகளாகத் திகழ்கிறார்கள். இவர்களையும் ஈடுபடுத்தி, தரமான அந்திமகால பராமரிப்பைப் பெறுவதற்கான சிறந்த அடித்தளத்தை உருவாக்க அந்திமகால பராமரிப்பு மன்றம் முனைகிறது,” என்று குமாரி சிம் கூறினார்.
மக்கள்தொகை மூப்படைய, அந்திமகால பராமரிப்புக்கான தேவை அதிகரிக்கும் என்று மன்றத்தின் தேசிய அந்திமகால பராமரிப்புத் தரநிலை மேம்பாட்டுக் குழுவின் இணைத்தலைவர் டாக்டர் யீ சூன் மெங் தெரிவித்தார்.
“அதிகரித்துவரும் இந்த தேவையை ஈடுகட்ட திறன்களை வளர்ப்பது அவசியமாகிறது,” என்று அவர் கூறினார்.

