பாலர் கல்வி பயிலும் மலாய்/முஸ்லிம் பிள்ளைகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஆதரவளிக்கும் நோக்குடன், அவர்களுடன் நட்புறவாட வகைசெய்யும் புதிய திட்டம் அடுத்த ஆண்டு அறிமுகம் காணவுள்ளது.
சனிக்கிழமை (நவம்பர் 22) நடைபெற்ற மெண்டாக்கி தொண்டூழியர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சியில் தற்காப்பு; நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த முயற்சிக்கு கைகொடுக்க இதுவரை ஏறத்தாழ 100 தொண்டூழியர்கள் முன்வந்துள்ளதாக அவர் கூறினார்.
மெண்டாக்கி தலைவருமான திரு ஸாக்கி, சமூகத்திற்கு தங்களது அயராத சேவையால் அர்த்தமிகு பங்களிப்புகளை வழங்கும் தனிநபர்கள் வாயிலாகத் தொண்டூழிய உணர்வு வாழ்வதாகக் குறிப்பிட்டார்.
கூட்டு முயற்சியுடனும் பரிவுடனும் தனித்துவமிக்க தொண்டூழியம் புரிந்துவரும் பலர் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
அவ்வகையில் இளையர் மேம்பாட்டிலும் சமூகச் சேவையிலும் தலைசிறந்த கடப்பாட்டுடன் தொண்டூழியம் புரிந்ததற்காக மதிப்புமிக்க தேசிய இளம் சாதனையாளர் விருது (வெண்கலம்) பெற்றார் திரு ஹாஜாமுகைதீன் ஷஃபீக் அகமது, 24.
திரு ஷஃபீக் போன்றோர் சமுதாயத்திற்கு ஊக்கமளிக்கும் முன்னுதாரணம் என்று தமது உரையில் குறிப்பிட்ட திரு ஸாக்கி, நாம் கொண்டாடும் தொண்டூழியச் சேவையின் உயிர்நாடியை அவர் வெளிப்படுத்துவதாகச் சொன்னார்.
‘‘அரவணைப்பு, இலக்குடன் மக்களை ஒன்றிணைத்து, அர்த்தமுள்ள கலந்துரையாடல்கள் மூலம் சமூகத்தைத் தொடர்ந்து வளப்படுத்தும் தொடர்புகளை உருவாக்கவும் அவர் கைகொடுத்தார்,’’ என்றார் திரு ஸாக்கி.
‘‘மெண்டாக்கிக்கு அப்பால் கற்றல், சுற்றுச்சூழல், மூத்தோர்க்கான மின்னிலக்க எழுத்தறிவு உள்ளிட்ட பல பிரிவுகளிலும் தொண்டூழியம் புரிந்துவரும் திரு ஷஃபிக்கின் பங்களிப்பை இந்த விருது அங்கீகரிப்பதாகவும் திரு ஸாக்கி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
விருது குறித்து தமிழ் முரசிடம் மகிழ்ச்சி தெரிவித்த திரு ஷஃபிக், ‘‘தொண்டூழியம் என்பது ஏதோ ஒரு சில மணி நேரம் மட்டும் ஈடுபடும் காரியமன்று. அதுவே நாம் வாழவேண்டிய வழி, சமூகமாக நாம் செல்ல வேண்டிய பாதை,’’ என்றார்.
2022ல் ஏறத்தாழ 1,450ஆக இருந்த தொண்டூழிய சமூகத்தினரின் எண்ணிக்கை 40 விழுக்காடு கூடி, 2025ல் 2,000ஐ தாண்டியுள்ளதைப் பார்ப்பது ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்ட திரு ஸாக்கி, ‘‘இது வெறும் எண்ணிக்கை மட்டுமன்று. இது நம் சமூகத்தின் சேவை, ஒற்றுமைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் வலிமையான வெளிப்பாடு,’’ என்றார்.
இதற்கிடையே, விரிவடைந்து வரும் தொண்டூழியர் தளத்தை ஆதரிக்கவும் சமூகத் தொடர்புகளை வலுப்படுத்தவும் முன்னெடுக்கப்படும் முயற்சியின் ஓர் அங்கமாக, குறிப்பிட்ட குழுத்தொகுதிகளுடன் இணைந்து செயலாற்ற 13 தொடர்பு அதிகாரிகளை மெண்டாக்கி நியமிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு ஆலோசகர்கள் உதவி கோரும் குடும்பங்களுடன் மெண்டாக்கி நேரடியாகத் தொடர்ந்து பணியாற்றும் வேளையில், இந்த அதிகாரிகள் மெண்டாக்கி, சமூகப் பங்காளிகள், மலாய்/முஸ்லிம் குடியிருப்பாளர்களுக்கு இடையே இணைப்புப் பாலமாகச் செயல்படுவார்கள்.

