பல்லினக் கலையின் புதிய விடியல்

பல்லினக் கலையின் புதிய விடியல்

5 mins read
7437c4e4-36a3-49ce-a2eb-585f2f12c197
கம்போடியாவின் அம்ரிதா பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் அமைப்புடன் இணைந்து பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமி 2017ல் வழங்கிய ‘பிருகன்னளை - அர்ஜுனனின் மாறுவேடம்’ கலாசாரங்களுக்கு இடையிலான நடனப் படைப்பு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

சிங்கப்பூரின் பல்லினக் கலாசார அடையாளத்தை மேலும் செழுமைப்படுத்தவும் கலைகளின்வழி நாட்டின் தனித்துவத்தை உலகிற்குப் பறைசாற்றவும் புதிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கலைத்துறையின் மூலம் பல்வேறு மரபுகளை இணைத்து, நம் கூட்டு அடையாளத்தை வளர்க்கும் நோக்கில் 12 சிறந்த கலை, பண்பாட்டுத் தலைவர்களை உள்ளடக்கிய ‘அதிபர் சவால் பன்முகப் பண்பாட்டுக் குழு’ அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னெடுப்பின் ஒரு முக்கிய அங்கமாக, அதிபர் சவால் அறநிதித் திரட்டு அமைப்பும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சும் இணைந்து 20 மில்லியன் வெள்ளி மதிப்பிலான ‘பன்முகப் பண்பாட்டுக் கலைத் திட்ட’ மானியத்தை அறிவித்துள்ளன. வரும் 2026 செப்டம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பங்களை வரவேற்கும் இத்திட்டம், பல்லினக் கலைப் படைப்புகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லப் பெரும் துணையாக அமையும்.

இப்புதிய மானியத் திட்டத்தை வழிநடத்தவும், கலைத்துறையின் வளர்ச்சிக்கான பாதைகளை வகுக்கவும் அமைக்கப்பட்டுள்ள பன்முகப் பண்பாட்டுக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவராக லசால் கலைக் கல்லூரி முதல்வர் டாக்டர் வெங்கா புருஷோத்தமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்குழுவில் பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமியின் கலை இயக்குநரும் மூத்த நடனக் கலைஞருமான மீனாட்சி பாஸ்கர் உள்ளிட்ட முன்னணிக் கலைத்துறையினர் பத்துப் பேர் இடம்பெற்றுள்ளனர்.

வாழும் சூழலியலாகப் பல்லினக் கலாசாரம்: வெங்கா புருஷோத்தமன்

லாசால் கலைக் கல்லூரி முதல்வர் டாக்டர் வெங்கா புருஷோத்தமன்.
லாசால் கலைக் கல்லூரி முதல்வர் டாக்டர் வெங்கா புருஷோத்தமன். - படம்: லாசால் கலைக் கல்லூரி

கலைத்துறையிலும் கலைக் கல்வியிலும் 25 ஆண்டுகளுக்கும் மேலான பரந்த அனுபவம் உள்ளவர் டாக்டர் வெங்கா புருஷோத்தமன்.

எஸ்பிளனேட், தேசியக் கலை மன்றம் போன்ற கலாசார நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்த அவர், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் லசால் கலைக் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றார். கொள்கை உருவாக்கம், கல்வி, ஆராய்ச்சி ஆகிய தளங்களில் அனுபவமிக்கவர் அவர்.

டாக்டர் வெங்காவின் கலைப்பயணம் அவரது சிறுவயது அனுபவங்களிலிருந்தே முளைவிட்டது. அன்றாட வாழ்க்கையில் ஒலித்த பல மொழிகள், பல்வேறு சமயச் சடங்குகள், கதைகள், இசை, தெருக்கூத்துகள் போன்ற பன்முகத் தன்மைகொண்ட சூழலில் அவர் வளர்ந்தார்.

கலை மீதான தமது ஆர்வம் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தொடங்கவில்லை என்றும், தாம் வாழ்ந்து அனுபவித்த அந்தப் பல்லினச் சூழலிலிருந்தே அது இயல்பாக வேரூன்றி வளர்ந்தது என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.

பயணத் துறையாகவும் வர்த்தக மையமாகவும் விளங்கும் சிங்கப்பூரில், கலை என்பது நிகழ்ச்சிகள் மட்டுமன்று, அது நம் பல்லினச் சமூகத்தின் அடையாளத்தை நமக்கும் உலகிற்கும் விவரிக்கும் ஒரு முக்கியக் கருவி என்பது அவரது நம்பிக்கையாகும்.

டாக்டர் வெங்காவின் பார்வையில், இன்றைய பல்லினக் கலாசாரம் என்பது ஒரு வாழும் சூழலியல் (living ecology) போன்றது. இளைய தலைமுறையினர் பாரம்பரியக் கலைகளைப் புதிய ஊடகங்கள் வாயிலாகத் தங்களின் அடையாளங்களோடு மறுவடிவாக்கம் செய்து வருகின்றனர்.

லாசால் கலைக் கல்லூரி முதல்வர் டாக்டர் வெங்கா புருஷோத்தமன்.
லாசால் கலைக் கல்லூரி முதல்வர் டாக்டர் வெங்கா புருஷோத்தமன். - படம்: லாசால் கலைக் கல்லூரி

புதிய மானியத் திட்டம் குறித்துப் பேசிய அவர், “இது ஓர் இடைவெளியை நிரப்புவதற்காக மட்டும் உருவாக்கப்படவில்லை. ஆழமான பன்முகப் படைப்புகளுக்கு நேரம், அறிவு, கலாசாரப் புரிதல், பரஸ்பர நம்பிக்கை ஆகியவை தேவை. அதற்கான தனிப்பட்ட தளத்தை இம்மானியம் அமைத்துத் தரும்,” என்றார்.

உலகத் தரவரிசையில் லாசால் கல்லூரி கலை, வடிவமைப்புத் துறையில் 67ஆம் இடத்தைப் பிடித்திருப்பதையும், சிங்கப்பூரின் முதல் கலைப் பல்கலைக்கழகத்தின் நிறுவன உறுப்பினராக அது உருவெடுத்துள்ளதையும் தமது பயணத்தின் முக்கிய மைல்கற்களாக அவர் கருதுகிறார்.

எனினும், தலைமுறை தலைமுறையாக மாணவர்கள் தங்களின் கலைக் குரலைக் கண்டறிந்து சிறந்த வாழ்வை அமைத்துக்கொள்வதைப் பார்ப்பதே தமக்கு அளப்பரிய மனநிறைவைத் தருவதாக அவர் குறிப்பிட்டார்.

பாரம்பரியத்தின் வழித்தோன்றல்: மீனாட்சி பாஸ்கர்

பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமியின் கலை இயக்குநரும் மூத்த நடனக் கலைஞருமான மீனாட்சி பாஸ்கர்.
பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமியின் கலை இயக்குநரும் மூத்த நடனக் கலைஞருமான மீனாட்சி பாஸ்கர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாரம்பரியக் கலைகளின் வேர்களைப் பாதுகாத்தபடியே பல்லினப் பண்பாட்டு முயற்சிகளை முன்னெடுக்கும் மற்றொரு முக்கியக் குழு உறுப்பினர் திருவாட்டி மீனாட்சி பாஸ்கர்.

1996ஆம் ஆண்டின் ‘இளம் கலைஞர் விருது’ பெற்ற இவர், பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமியின் கலை இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார். 1952ல் அவரது பெற்றோர் கே.பி. பாஸ்கர், சாந்தா பாஸ்கர் ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பு, பாரம்பரிய இந்திய நடன உத்திகளின் அடிப்படையில் பல்லினக் கலைப் படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

நடனத்தை கலையாக மட்டுமல்லாமல், மூச்சாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் திருவாட்டி மீனாட்சி. முழுநேர நடனக் கலைஞர்களான தம் பெற்றோர், வகுப்புகள், ஒத்திகைகள், கலைநிகழ்ச்சிகள் என எங்குச் சென்றாலும் தம்மையும் உடன் அழைத்துச் சென்றதை அவர் நினைவுகூர்ந்தார்.

“என் வீட்டில் நடனம் என்பது கலை மட்டுமன்று, அதுவே வாழ்க்கையாக இருந்தது,” என நினைவுகூர்ந்த திருவாட்டி மீனாட்சி, மற்ற பிள்ளைகளைப்போல் சாதாரணமாக விளையாட முடியாமல் போனதில் தொடக்கக் காலத்தில் சற்று மனவருத்தம் அடைந்ததாகக் குறிப்பிட்டார்.

அவருக்குப் பத்து வயதாக இருந்தபோது அரங்கேற்றம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதே ஆண்டில் எதிர்பாராத விதமாக அவரது நடன குரு காலமானார். அந்தப் பேரிழப்பால் தமது நடனப் பயணம் தொடங்குவதற்கு முன்பே முற்றுப்பெற்றுவிட்டதாக அவர் கலக்கமுற்றார்.

பல ஆண்டுகள் அந்த இடைவெளி தொடர்ந்த நிலையில், அவரது 17வது வயதில், மறைந்த குரு அவருக்காகத் தனிப்பட எழுதி வைத்திருந்த நடனக் குறிப்புகள் திருவாட்டி மீனாட்சியின் பெற்றோரிடம் கொண்டு சேர்க்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகச் சற்றே தயக்கத்துடன் சம்மதித்த அவர், அரங்கேற்றத்திற்கான முயற்சிகளை மீண்டும் தொடங்கினார்.

மூன்று மாதக் காலத்தில் கடுமையான உடல்நலக் குறைவு, எலும்பு முறிவு போன்ற பல்வேறு தடைகளைத் தாண்டி, 11 கடினமான நடனப் பகுதிகளைக் கற்று, அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடித்தார். அந்த மேடை அனுபவமே தம்மை பரதநாட்டியக் கலையோடு மீண்டும் வலுவாக இணைத்ததாகத் திருவாட்டி மீனாட்சி கூறினார்.

பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமியின் கலை இயக்குநரும் மூத்த நடனக் கலைஞருமான மீனாட்சி பாஸ்கர்.
பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமியின் கலை இயக்குநரும் மூத்த நடனக் கலைஞருமான மீனாட்சி பாஸ்கர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் வலுவான பல்லினக் கலாசார அடித்தளத்துடன் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலும் அவர் கலை அமைப்பை நிர்வகித்து வருகிறார். அந்தப் புதிய சூழலில், உணவகம் தொடங்குவது, மதுபான ஆலை (brewery) நடத்துவது, ஆப்பிள் தோட்டம் அமைப்பது எனப் பலதரப்பட்ட சவாலான பணிகளை மேற்கொண்டு உழைப்பின் மதிப்பு, மனவுறுதி ஆகியவற்றைக் கற்றுக்கொண்டதாகக் கூறினார்.

‘சிரமமான ஒன்றைக் கண்டு விலகி ஓடாமல், அதனை எதிர்கொள்ளும்போதுதான் உண்மையான வளர்ச்சி பிறக்கும்’ என்ற தம் பெற்றோரின் அறிவுரையை அவர் இன்றும் உறுதியாகப் பின்பற்றி வருகிறார்.

கலைகளில் பாரம்பரியத்தின் அடித்தளம் மிக வலுவாக இருக்க வேண்டும் என்பதைத் திருவாட்டி மீனாட்சி ஆழமாக நம்புகிறார். “ஒரு கட்டுரையை எழுத மொழி அறிவு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் பாரம்பரியக் கலையின் நுட்பங்களை முழுமையாக அறிந்திருப்பது புதுமையான கலைப் பரிசோதனைகளுக்கு மிகவும் அவசியமாகும்,” என்றார் அவர்.

பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமியின் கலை இயக்குநரும் மூத்த நடனக் கலைஞருமான மீனாட்சி பாஸ்கர்.
பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமியின் கலை இயக்குநரும் மூத்த நடனக் கலைஞருமான மீனாட்சி பாஸ்கர். - படம்: மீனாட்சி பாஸ்கர்

பல்லினப் பண்பாட்டுக் குழுவின் மூலம், போதிய அங்கீகாரம் இல்லாத பாரம்பரியக் கலைஞர்களுக்கான குரலாகத் திகழவும் இளைய தலைமுறையினரைப் பாரம்பரியக் கலைகளோடு இணைக்கும் பாலமாகச் செயல்படவும் அவர் இலக்கு கொண்டுள்ளார்.

எல்லைகளைத் தாண்டத் தயங்கும் கலைஞர்களுக்கு, “கலையில் சரியானது என்று எதுவும் இல்லை. உண்மையான ஆர்வத்துடனும் மரியாதையுடனும் செய்யப்படும் எந்தவோர் முயற்சியும் இயல்பாகவே அதன் மதிப்பைப் பெறும்,” என அவர் ஊக்கமளித்தார்.

குறிப்புச் சொற்கள்