சிறார்க்கான மின்னிலக்கப் பயன்பாட்டு வழிகாட்டிக் குறிப்புகள்: பெற்றோர் பார்வை

சிறார்க்கான மின்னிலக்கப் பயன்பாட்டு வழிகாட்டிக் குறிப்புகள்: பெற்றோர் பார்வை

3 mins read
676fe95e-a2a6-472c-96ad-89e552e80f18
டிக்டாக் நிறுவனம் அறிமுகப்படுத்திய குடும்ப மின்னிலக்கப் பயன்பாட்டு வழிகாட்டிக் குறிப்பு. - படம்: பெரித்தா ஹரியான்

கடந்த இரு வாரங்களில் சிறுவர்களின் மின்னிலக்கப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முனையும் இரண்டு வழிகாட்டிக் குறிப்புகள் சிங்கப்பூரில் அறிமுகம் கண்டன.

டிக்டாக்கின் குடும்ப மின்னிலக்கப் பயன்பாட்டு வழிகாட்டிக் குறிப்பும் (Family Digital Check-In Guide) தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் மின்னிலக்கத் திரை அறிவாற்றல் – தொடக்கம் முதல் (Screen Smart from the Start) எனும் வழிகாட்டிக் குறிப்பும் பெற்றோர்க்கு உதவும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்டன.

பெற்றோர்க்கு உதவ தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு ‘மின்னிலக்கத் திரை அறிவாற்றல் – தொடக்கம் முதல்’  எனும் வழிகாட்டிக் குறிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெற்றோர்க்கு உதவ தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு ‘மின்னிலக்கத் திரை அறிவாற்றல் – தொடக்கம் முதல்’ எனும் வழிகாட்டிக் குறிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. - படம்: சாவ்பாவ்

இவற்றைக் குறித்த பெற்றோரின் கருத்துகளை அறிந்து வந்தது தமிழ் முரசு.

கூடுதல் சுமையாக இருக்கலாம்

வழிகாட்டிக் குறிப்புகளின் அறிமுகம் வரவேற்கக்கூடியதாக இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்துவது கேள்விக்குறிதான் என்றார் தர்ஷிணி கிருஷ்ணா.

மூன்று பிள்ளைகளுக்குத் தாயான அவர், வேலைச் சுமை அதிகமிருக்கையில் இத்தகைய வழிகாட்டிக் குறிப்புகளைப் பயன்படுத்துவது கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்று எண்ணுகிறார்.

“அமைச்சின் வழிகாட்டிக் குறிப்பில் மின்னிலக்கம் சாராத பல்வேறு நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டிருப்பது சிறப்பு. ஆனால், நீக்குப்போக்கான வேலை நேரம் இல்லாத என்னைப் போன்ற பெற்றோர்க்கு அது எந்த அளவிற்கு உதவியாக இருக்குமெனத் தெரியவில்லை,” என்றார் அவர்.

தமிழாசிரியராகப் பணிபுரியும் திருவாட்டி தர்ஷிணி, தம் குழந்தைகளுடன் தாம் செலவிடும் குறைந்தபட்ச நேரத்தை இந்த வழிகாட்டிக் குறிப்புகள் பாதிக்குமோ என்றும் அஞ்சுகிறார்.

“இக்குறிப்புகள் உண்மையில் பயனுள்ளதாக இருக்க, இவை கூடுதல் வீட்டுப்பாடம் போன்றோ வேலையைப் போன்றோ இல்லாமல் இருத்தல் மிகவும் அவசியம். அப்போதுதான் அவற்றைப் பயன்படுத்த முனைப்பு ஏற்படும்,” என்று அவர் சொன்னார்.

அவரைப் போலவே, இந்த வழிகாட்டிக் குறிப்புகளைப் பயன்படுத்துவதில் 39 வயதுத் தாதி சிவரஞ்சனியும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

“நானும் என் கணவரும் சில நேரங்களில் வார இறுதி நாள்களிலும் வேலை செய்ய வேண்டிய கட்டாயமிருப்பதால் பிள்ளைகளுடன் செலவிடும் குறைந்த அளவு நேரத்தை அவர்களுக்குப் பிடித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுச் செலவிட விரும்புகிறோம்,” என்று அவர் சொன்னார்.

தம் வீட்டில் முன்பிருந்தே பிள்ளைகள் மின்னிலக்கக் கருவிகளைப் பயன்படுத்த ஒரு மணி நேர காலவரையறை இருப்பதால் இந்த வழிகாட்டிக் குறிப்புகளைப் பயன்படுத்துவது அவசியமாகத் தோன்றவில்லை என அவர் குறிப்பிட்டார்.

“பொதுவாக நாங்கள் வீட்டிலிருக்கும்போது ஒருவருடன் ஒருவர் அந்தந்த நாள்களின் எங்கள் நடவடிக்கைகளைப் பற்றிப் பகிர்ந்துகொள்வதில் நேரம் செலவிடுவோம். ஆகையால், பிள்ளைகளுக்கு மின்னிலக்கச் சாதனங்களின் மீதான சார்புத்தன்மை பெரிதாக இல்லை,” என்று அவர் கூறினார்.

சில வேளைகளில் அவரது 13 வயது மூத்த மகன் மின்னிலக்கக் கருவிகளைப் பயன்படுத்துவதைக் கண்டு, முறையே எட்டு, நான்கு வயதாகும் அடுத்தடுத்த பிள்ளைகள் இருவரும் கூடுதல் மின்னிலக்க நேரத்திற்காகப் பிடிவாதம் பிடிப்பது உண்டு என்றார் அவர். ஆனால், தொடர்ச்சியான உரையாடல்கள்வழி கட்டுப்பாடான மின்னிலக்கப் பயன்பாட்டின் முக்கியத்துவத்தைத் திருவாட்டி சிவரஞ்சனி அவர்களுக்குப் புரியவைத்து வருகிறார்.

வெளிப்புற நடவடிக்கைகள் குறித்த தகவல்களால் நன்மை

மாறாக, இந்த வழிகாட்டிக் குறிப்புகளைத் தாம் பயன்படுத்த வாய்ப்புள்ளதெனக் கூறினார் 34 வயது இல்லத்தரசி மோனலிசா.

அவருக்கு ஐந்து வயது மகளும் இரண்டு வயது மகனும் உள்ளனர். வார இறுதி நாள்களில் குறைந்தது ஒருநாளாவது பிள்ளைகளை வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுத்த அவர் முயல்கிறார்.

“வார இறுதிகளில் பலமுறை என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்படுவதோடு நடவடிக்கைகள் குறித்த போதுமான தகவல்கள் இருக்காது. அமைச்சின் வழிகாட்டிக் குறிப்புவழி இந்தத் தகவல்கள் கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் அவர்.

தற்போது தம் வீட்டில் மின்னிலக்கப் பயன்பாட்டைக் கடுமையாகக் கட்டுப்படுத்தி வந்தாலும், பிள்ளைகள் பள்ளி செல்லத் தொடங்கியவுடன் அப்பழக்கங்களைத் தொடர இத்தகைய வழிகாட்டிக் குறிப்புகள் உதவலாம் என்றும் திருவாடி மோனலிசா நம்புகிறார்.

வழிகாட்டிக் குறிப்புகள் பயனுள்ளவையாக இருக்க வேலை நேரங்களும் ஏதுவானவையாக இருக்க வேண்டுமென எண்ணுகிறார் திரு மனோஜ்குமார் சென்னியப்பன்.

தம் மகனுக்கு ஐந்து மாதங்களாகும் நிலையில், சிறுபிள்ளைகள் இருக்கும் பெற்றோருக்கு முதலாளிகள் நீக்குப்போக்கான வேலை நேரத்தை வழங்கினால், குழந்தைகளுடன் கூடுதல் நேரம் செலவிட்டு, அவர்களுக்கு மின்னிலக்கக் கருவிகளை முன்பே அறிமுகப்படுத்தாமல் இருக்க முடியும் என அவர் நம்புகிறார்.

“நானும் என் மனைவியும் எப்போதேனும் மடிக்கணினியிலோ தொலைபேசியிலோ ஏதேனும் வேலை செய்துகொண்டிருந்தால், என் மகனுக்கு நாங்கள் என்ன செய்கிறோம் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. அந்த ஆர்வத்தைத் தற்போதைய காலச் சூழலில் தடுப்பது முடியாது.

“ஆனால், எங்கள் முயற்சிகள், இந்தப் புதிய வழிகாட்டிக் குறிப்புகள் ஆகியவற்றின் வழி அந்த ஆர்வத்தையும் அதனால் ஏற்படும் தாக்கத்தையும் கட்டுப்படுத்த முடியும்,” என்றார் திரு மனோஜ்.

அரசும் தொழில்நுட்ப நிறுவனங்களும் இளம்பயனர்களைக் காக்கப் புதிய வளங்களை அறிமுகப்படுத்தி வந்தாலும், அந்த முக்கியப் பொறுப்பு பெற்றோரின் முதன்மைக் கடமையாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்