ஊழியர் உள்ளம் கவர் இல்லம்

நவீனம், காற்றோட்டம், கடைகள், பொழுதுபோக்கு உதவிகோரும் வசதிகளுடன் ஊழியர்கள் விரும்பும் துக்காங் ஊழியர் தங்குவிடுதி

ஊழியர் உள்ளம் கவர் இல்லம்

5 mins read
23790121-85ae-4f94-a651-01763f61c65a
நவீன வசதிகளுடன் மனிதவள அமைச்சு கட்டியுள்ள துக்காங் ஊழியர் தங்குவிடுதி. - படம்: த கவி

புதிய நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேம்படுத்தப்பட்ட புதிய தரநிலைகளுக்கேற்ப கட்டப்பட்ட மனிதவள அமைச்சின் முதல் துக்காங் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி. அவ்விடுதி அண்மையில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்கள் மட்டுமே தங்கக்கூடிய அறைகளைக் கொண்ட இந்த தங்குவிடுதியில் மொத்தம் 210 அறைகள் உள்ளன.

தொழில்நுட்ப உதவியுடன் மேம்பட்ட நிர்வாகம்

ஏறத்தாழ 2,400 ஊழியர்கள் தங்கக்கூடிய இந்த விடுதியை ‘நெஸ்ட் சிங்கப்பூர்’ நிறுவனம் வடிவமைத்து, நிர்வகிக்கிறது.

நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், ஊழியர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கவும் மின்னிலக்கத் தொழில்நுட்பம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார் ‘நெஸ்ட்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெங் சீ மெங்.

மின்னிலக்க நுழைவு முறை

‘ஐ-ஸ்மார்ட்’ அமைப்புடன் கூடிய மின்னிலக்க நுழைவாயில்.
‘ஐ-ஸ்மார்ட்’ அமைப்புடன் கூடிய மின்னிலக்க நுழைவாயில். - படம்: த கவி

விடுதியின் நுழைவாயில்களில் ‘ஐ-ஸ்மார்ட்’ அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. இது முக அடையாளத் தொழில்நுட்பத்தைக் (Facial Recognition) கொண்டு உள்நுழைவை உறுதி செய்கிறது.

அங்கு உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கும் தானியங்கிக் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

இது, உடல்நலப் பிரச்சினைகள் கொண்ட ஊழியர்களைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து, தனிமைப்படுத்திச் சிகிச்சையளிக்க உதவுகிறது.

திறன்பேசிச் செயலியின் வழி மேம்பட்ட மேலாண்மை

விடுதியில் தங்கும் ஊழியர்களின் அன்றாடத் தேவைகளுக்காக தனித்துவ செயலி வழங்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் நன்கு அறிந்து விடுதி வடிவமைக்கப்பட்டதாகக் கூறிய தெங் சீ மெங், தொடர்ந்து அவர்களின் கருத்துகளை அறிய ஏதுவாக இச்செயலி அமைந்துள்ளதைச் சுட்டினார்.

இந்தச் செயலி வழி, திரைப்பட அறை, விளையாட்டுப் பூங்கா, பிற பொது வசதிகள் குறித்த கருத்துகளைப் பதிவிட முடியும்.

புகார்ப் பதிவு

நிர்வாகம் குறித்து அல்லது பாரமரிப்பு குறித்துப் புகார்கள் இருந்தால், ஏதேனும் சிறு சிறு பழுதுபார்ப்புகள் தேவைப்பட்டால் அதனை உடனடியாகச் செயலியின் வழியே தெரிவிக்கலாம்.

விடுதியில் 24 மணி நேரம் இயங்கும் நிர்வாக அலுவலகம் இருப்பதைச் சுட்டிய விடுதியில் தங்கும் ஊழியர் கணேசன் வெங்கடே‌ஷ், “குறிப்பிட்ட சிறு சிறு புகார்களும் உடனடியாக கவனிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டன,” என்றார்.

முன்பதிவு

விடுதிக்குள் இருக்கும் உடற்பயிற்சிக்கூடம், தொலைபேசித் தனியறை உள்ளிட்ட வசதிகளைத் தங்களுக்குத் தேவையான நேரத்தில் ஊழியர்கள் முன்பதிவு செய்து பயன்படுத்தவும் இச்செயலி உதவுகிறது.

ஊழியர் தலைவர்

ஊழியர்களுக்குள்ளேயே தலைவர்களை உருவாக்கும் வகையில் ‘நெஸ்ட் கேர்ப்ரோஸ்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கிடையே தேர்ந்தெடுக்கப்பட்ட விடுதித் தலைவர்கள் (Resident Leaders), சக ஊழியர்களின் பிரச்சினைகளைக் கேட்டு நிர்வாகத்திடம் கொண்டு செல்கின்றனர்.

விடுதிக்குள் நட்புடன் கூடிய பாதுகாப்பான சூழலை இத்திட்டம் உறுதி செய்கிறது. மேலும், அத்தலைவர்கள் சக ஊழியர்களின் மன அழுத்தத்தைக் கண்டறிந்து உரிய ஆதரவும் பெற உதவுவார்கள்.

“வீடுகளை விட்டு வெகுதூரம் வந்துள்ள ஊழியர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. அதற்கு எங்கு, எவ்வாறு ஆதரவை நாடவேண்டும் என்பது பலருக்கும் தெரியாது. தெரிந்தாலும் தயக்கமாக இருக்கும். ஊழியர்களுக்குள்ளேயே தலைவர்கள் இருந்தால், அவர்களை நாடுவதும், பேசுவதும் எளிதாக அமைகிறது,” என்றார் கணேசன் வெங்கடே‌ஷ்.

சமூக நிகழ்ச்சிகள்

ஊழியர்களின் ஒன்றுகூடலை உறுதிசெய்யவும், அவர்களுக்குப் பண்டிகைக் கால உற்சாகத்தை அளிக்கவும் ஏதுவாக விடுதி நிர்வாகம் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதற்காக லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமை சங்கத்துடன் விடுதி கைகோத்துள்ளது.

பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினம் ஆகிய நாள்களில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

விடுதி வளாகத்தில் (Centralised Courtyard) வாரயிறுதி நாள்களில் திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. திரைப்படங்கள் ஊழியர்களின் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

“ஊழியர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவதும், நிர்வாகம் பொறுப்புடன் நடந்துகொள்வதும் சிறப்பு. சிறு புகார்களுக்கும் கனிவுடன் பதில் வருவதும் மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் கணேசன் வெங்கடே‌ஷ்.

வசதிகள்

வசதியான தங்குமிடமாக இருப்பதுடன், உடல், மனநலனை மேம்படுத்தும் வளாகமாகவும் திகழும் வண்ணம் பல்வேறு வசதிகளுடன் இவ்விடுதி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலே - குருசாமி அங்குப்பாண்டி, கீழே கணேசன் வெங்கடே‌ஷ்.
மேலே - குருசாமி அங்குப்பாண்டி, கீழே கணேசன் வெங்கடே‌ஷ். - படம்: த கவி

“நாள்முழுவதும் பணியாற்றிவிட்டு சோர்வாக அறைக்கு வரும் ஊழியரின் முக்கியத் தேவை தூக்கம். அதற்கு ஏற்பப் படுக்கைகள் வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன,” என்று குறிப்பிட்டார் குருசாமி அங்குப்பாண்டி.

ஒவ்வோர் அறையிலும் 6-3-3 என்னும் வகையில் படுக்கை அமைப்பு உள்ளது. இதில் ஆறு ஒற்றைப் படுக்கைகளும், மூன்று ‘லாஃப்ட்’ (Loft) வகைப் படுக்கைகளும் உள்ளன.

6-3-3 வகை படுக்கை அமைப்பு.
6-3-3 வகை படுக்கை அமைப்பு. - படம்: த கவி

இந்த நவீனமுறை ‘லாஃப்ட்’, கீழுள்ளவர் படுக்கையில் புரண்டு படுக்கும்போது மேலே இருப்பவர்க்கும், மேலே ஒருவர் ஏறும்போது கீழிருப்பவர்க்கும் இடையூறு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு படுக்கைக்கும் பொருள்கள் வைத்துக்கொள்ளத் தேவையான அளவு அலமாரிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டினார்.

உணவு, சமையல் வசதிகள்

இதுவரை நான்கு விடுதிகளில் தங்கிய அனுபவம் உள்ள ஊழியரான கணேசன் வெங்கடே‌ஷ், “பொதுவாக தங்குவிடுதி அறைகளில் முக்கியப் பிரச்சினையாக எப்போதும் இருப்பது வெளிச்சமும் காற்றோட்டமும்தான்,” என்றார்.

“இவ்விடுதியில் அந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டு, போதுமான சூரிய ஒளியும் இயற்கையான காற்றோட்டமும் கிடைக்கும் வகையில் வடக்கு - தெற்கு நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்குப் புத்துணர்ச்சியளிக்கிறது,” என்றார் அவர்.

அறைகளில் சமைப்பதைத் தவிர்க்கவும், சுகாதாரத்தைப் பேணவும் ஏதுவாக ஒவ்வொரு தளத்திலும் சமையல் கூடமும் பொதுவான உணவு உண்ணும் இடங்களும் (Communal Dining Areas) உள்ளன.

ஒவ்வோர் அறைக்கும் இரண்டு அடுப்புகள், ஒரு கழுவுத் தொட்டி கொண்ட வசதியான சமையலறை, பொது சாப்பாட்டுக் கூடம், சலவை இயந்திரம்.
ஒவ்வோர் அறைக்கும் இரண்டு அடுப்புகள், ஒரு கழுவுத் தொட்டி கொண்ட வசதியான சமையலறை, பொது சாப்பாட்டுக் கூடம், சலவை இயந்திரம். - படம்: த கவி

சற்றே பெரியதாக அமைந்துள்ள இக்கூடத்தில், ஊழியர்கள் தங்கள் விருப்பப்படி சமைக்க, ஒவ்வோர் அறைக்கும் cடி உள்ளன. ஒவ்வோர் அறைக்கும் ஒரு ‘ரைஸ் குக்கர்’ வைத்துக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் பலர் அமர்ந்து உணவருந்தும் வகையில் மேசைகளும் இருக்கைகளும் போடப்பட்டுள்ளன. இது உரையாடல்களையும், சமூகப் பிணைப்பையும் வலுப்படுத்துகிறது.

தானியங்கி உணவு இயந்திரங்கள்.
தானியங்கி உணவு இயந்திரங்கள். - படம்: த கவி

இவை தவிர, பல உணவுத் தெரிவுகளுடன் கூடிய உணவங்காடியும், தானியங்கி உணவு வழங்கும் இயந்திரங்களும் அங்கு உள்ளன.

அவை, களைப்புடன் வரும் ஊழியர்களுக்குக் கைகொடுக்கும் என்றார் மற்றோர் ஊழியரான குருசாமி அங்குப்பாண்டி.

‘லிஷா’, ‘டேஸ்ட் ஏசியா’ ஆகியவற்றுடன் இணைந்து தென்னிந்திய, பங்ளாதேஷ் உணவு வகைகள் அந்த இயந்திரங்களில் வழங்கப்படுகின்றன.

விடுதி வளாகத்திலேயே, மளிகைக் கடை ஒன்றும் இருக்கிறது.

இந்தியச் சமையல் பொருள்கள் கொண்ட பல்பொருள் அங்காடி.
இந்தியச் சமையல் பொருள்கள் கொண்ட பல்பொருள் அங்காடி. - படம்: த கவி
விடுதியில் முடிதிருத்தகமும் உண்டு.
விடுதியில் முடிதிருத்தகமும் உண்டு. - படம்: த கவி

“சொல்லப்போனால், ஒரு ‘சிறு லிட்டில் இந்தியாவையே இங்கு அமைத்துள்ளோம்,” என்றார் திரு தெங் சீ மெங்.

பசுமைச் சூழல்

தேசிய பூங்காக் கழகத்தின் ஆதரவுடன், செடி, கொடிகளுடன் கூடிய பசுமையான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

செடி, கொடிகளுடன் கூடிய பசுமையான சூழல்.
செடி, கொடிகளுடன் கூடிய பசுமையான சூழல். - படம்: த கவி

“இங்கு ஊழியர்கள் அவர்களுக்குத் தேவையான, பிடித்த காய்கறிச் செடிகளையும் வளர்க்கலாம்,” என்றார் திரு தெங் சீ மெங்.

சுகாதார, தொற்றுநோய்த் தடுப்பு

எதிர்காலத் தொற்றுநோய்களைக் கருத்தில்கொண்டு விடுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊழியர்களைப் பாதுகாப்பாகப் பிரிப்பதற்கும் (Segregation) நெரிசலைக் குறைப்பதற்கும் வெவ்வேறு நிறங்களில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விடுதியின் வாகன நிறுத்துமிடங்களும், திறந்தவெளி வளாகங்களும் அவசர காலங்களில் மருத்துவச் சிகிச்சை மையங்களாக மாற்றத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்