செந்தோசா கம்பிவட வண்டி உள்சேவையின் 10ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடவும் சிங்கப்பூரின் 60ஆம் பிறந்தநாளைக் கொண்டாடவும் செந்தோசாவில் ‘பெரனாக்கன் ரிஇமாஜிண்ட்’ என்ற புதிய கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
செந்தோசா மேம்பாட்டு நிறுவனமும் மவுண்ட் ஃபேபர் பொழுதுபோக்குக் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சி செந்தோசா சென்சரிஸ்கேப்பில் மே 23 முதல் ஆகஸ்ட் 31 வரை இடம்பெறும்.
கண்காட்சியின் சிறப்பம்சமாக 7.2 மீட்டர் உயரம் கொண்ட ‘தி பெரனாக்கன் ஹவுஸ்’ கட்டமைப்பு எழுப்பப்பட்டுள்ளது. பெரனாக்கன் அலங்காரங்கள் நிறைந்த இக்கட்டமைப்பு பகலில் புகைப்படங்கள் எடுக்க உகந்த இடமாக விளங்கும்.
இரவில் 7.30 மணி முதல் 9.30 மணி வரை 15 நிமிட இடைவேளைகளில் ஒளிக்காட்சி ஒன்றும் இடம்பெறும்.
இக்கண்காட்சியில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர்களான கவிதா துளசிதாஸ், அடா கோஹ் போன்றோரின் கெபாயா ஆடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
மேலும், பார்வையாளர்கள் சென்சரிஸ்கேப்பில் அமைந்துள்ள செந்தோசா கடைக்குச் சென்று கெபாயா ஆடைகள், பாத்திக் சட்டைகள் போன்றவற்றை இரவல் பெற்று உடுத்தும் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செந்தோசாவின் கம்பிவட வண்டிகள், நிலையங்கள், செந்தோசா சென்சரிஸ்கேப் என பல இடங்களில் பெரனாக்கன் கலாசாரத்தைச் சார்ந்த அலங்காரங்களும் பொருட்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
வார இறுதிகளில் பார்வையாளர்களுக்காக சிலோசோ பாய்ன்ட் கம்பிவட வண்டி நிலையத்தில் களிமண்ணால் ஆன சிறு குவேக்கள் செய்வது, பூத்தையல் வேலைப்பாடு போன்ற பயிலரங்குகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இக்கொண்டாட்டத்தின் மற்றோர் அங்கமாக கம்பிவட வண்டி சேவைக்குச் சிறப்புச்சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
கண்காட்சி குறித்த மேல் விவரங்களுக்கு www.sentosa.com.sg/peranakan என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

