அரசாங்கத்தின் புதிய ஆதரவுத் திட்டங்களுக்கு வரவேற்பு

அரசாங்கத்தின் புதிய ஆதரவுத் திட்டங்களுக்கு வரவேற்பு

3 mins read
2dcc4547-77d0-480e-80f4-5bba26f62644
முஸ்லிம் சமூகத்திற்கு ‘எம்கியூப் பிளஸ்’ திட்டம்வழி அறிமுகம் காணவிருக்கும் புதிய முயற்சிகள் வரவேற்கத்தக்கவை என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக். - படம்: சுந்தர நடராஜ்
Google News Preferred Icon

தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிமுகப்படுத்திய பல்வேறு புதிய திட்டங்கள் சமூகத்தின் அடிநாதத்தைப் புரிந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சமூகத் தலைவர்கள் கருதுகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) தொழில்நுட்பக் கல்விக் கழக மத்திய வளாகத்தில் பிரதமர் வோங் ஆற்றிய உரையில், அதிகரிக்கும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு, இளையர்களிடையே சமூக ஊடகத் தாக்கம், இளம் குடும்பங்களுக்கும் பிள்ளைகளுக்குமான ஆதரவு, எதிர்காலத் தொழில்துறை, இடவசதித் திட்டங்கள் ஆகிய நான்கு அம்சங்களை மையமாகக் கொண்டு புதிய திட்டங்களை அறிவித்தார்.

இதற்கிடையே, பிரதமரின் மலாய் உரையில் இடம்பெற்ற மூத்தோர் பராமரிப்பை முதியவர்களுக்கு எளிதில் கொண்டுசேர்க்கும் முயற்சிகள் சிறப்பாக உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக் கூறினார்.

“முதியவர்கள் பள்ளிவாசல்கள், சமூக மன்றங்கள் போன்ற இடங்களுக்கு அதிகம் செல்கிறார்கள். அவர்களுக்குத் தேவைப்படும் மருத்துவ உதவியை ‘எம்கியூப் பிளஸ்’ திட்டத்தின்வழி அத்தகைய இடங்களுக்குக் கொண்டுசேர்க்க முனைவது சிறந்த முயற்சி,” என்று அவர் சொன்னார்.

மேலும், ‘எம்கியூப் பிளஸ்’ திட்டத்தின்கீழ் முஸ்லிம் இளையர்கள் தென்கிழக்காசிய வட்டார நாடுகளில் சென்று பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கவிருப்பது அவர்களின் முன்னேற்றத்திற்கு வித்திடும் என்று அவர் நம்புகிறார்.

இளம் குடும்பங்களை மையமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டங்கள் தம்மை மகிழ்விப்பதாக சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார் கூறினார்.

இளம் குடும்பங்களுக்கான திட்டங்கள் சிறப்பாக உள்ளதென சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார் கருதுகிறார்.
இளம் குடும்பங்களுக்கான திட்டங்கள் சிறப்பாக உள்ளதென சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார் கருதுகிறார். - படம்: சுந்தர நடராஜ்

பெற்றோர்க்குக் கூடுதல் குழந்தைப் பராமரிப்பு விடுப்பு வழங்கப்படுவதால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் நட்டத்தை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்வதென்பது சிறந்த முயற்சியென அவர் கருதுகிறார்.

“முதலாளிகள் இனி ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க முன்வருவர் என்று நம்புகிறேன். இதனால், இளம் பெற்றோர்க்கும் குழந்தை பெற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.

குடும்பங்கள் சார்ந்த புதிய திட்டங்கள் பெண்களின் வேலை வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருக்குமென தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவர் கே.தனலட்சிமி நம்புகிறார்.

புதிய திட்டங்கள் பெண்களின் வேலை வளர்ச்சிக்கும் குடும்ப வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும் என்றார் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவர் கே.தனலட்சிமி.
புதிய திட்டங்கள் பெண்களின் வேலை வளர்ச்சிக்கும் குடும்ப வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும் என்றார் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவர் கே.தனலட்சிமி. - படம்: சுந்தர நடராஜ்

“பெண்கள் பொதுவாக வேலையிலிருந்து ஓய்வெடுக்கும் கட்டாயம் ஏற்படுவது குடும்பம் தொடங்கும் காலகட்டத்தில் தான். இந்த புதிய திட்டங்கள்வழி அவர்கள் வேலையிலிருந்து முழுமையாக ஓய்வு பெறாமல், குழந்தை வளர்ப்பையும் வேலையையும் நேர்த்தியாகக் கையாள முடியுமென எண்ணுகிறேன்,” என்றார் அவர்.

மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு, இளையர்களின் சமூக ஊடகப் பயன்பாடு ஆகிய அம்சங்களையொட்டி பேசப்பட்ட கருத்துகள் தமக்கு சுவாரசியமாகத் தோன்றியதென நியமன நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு கூறினார்.

மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு, இளையர்களின் சமூக ஊடக பயன்பாடு ஆகிய திட்டங்களை வரவேற்றார் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு.
மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு, இளையர்களின் சமூக ஊடக பயன்பாடு ஆகிய திட்டங்களை வரவேற்றார் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு. - படம்: சுந்தர நடராஜ்

“மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு அதிகம் பயன்படுத்தப்படவிருப்பது ஓரளவிற்கு வரவேற்கத்தக்கது எனக் கருதுகிறேன். மருத்துவ ஊழியர்களுக்குச் சவாலாக அமையும் குறிப்பெடுத்தல் போன்ற சவால்களுக்கு அது நிச்சயம் கைகொடுக்கும்.

“ஆனால், அதன் பயன்பாட்டை நிதானமாக அமல்படுத்துவது அவசியம். ஊழியர்களுக்குத் துணையாக அதைப் பயன்படுத்தலாம். ஆனால், அவர்களின் வேலையை செயற்கை நுண்ணறிவால் செய்ய முடியும் என்று எண்ணிவிடக் கூடாது,” என்றார் அவர்.

அத்துடன் 13 வயதிற்குக் குறைவான மாணவர்கள் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் கூறியது பற்றியும் டாக்டர் ஹரேஷ் கருத்துரைத்தார்.

“அந்த வயது 16ஆக இருக்கலாம் என்பது என் கருத்து. மருத்துவத்தில் ‘கில்லிக் கொம்பிடன்ஸ்’ என்ற கூற்றின்படி 16 வயதிற்கு அதிகமானோருக்கே சுயமாக சில முடிவுகளை எடுக்கும் பக்குவம் உள்ளதென நம்பப்படுகிறது.

அதனால், சமூக ஊடகப் பயன்பாடும் 16 வயதிற்குக் கீழுள்ளவர்கள் பயன்படுத்தக் கூடாது என்ற வரையறையில் தொடங்கி, பின்னர் வயது வரம்பைக் காலப்போக்கில் குறைக்கலாம்,” என்று டாக்டர் ஹரேஷ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்