சிங்கப்பூர்வாழ் பரங்கிப்பேட்டை முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் புதிய சங்கம்

சிங்கப்பூர்வாழ் பரங்கிப்பேட்டை முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் புதிய சங்கம்

தமிழ்நாடு, பரங்கிப்பேட்டையின் வளமான வரலாற்றையும் வலுவான சமூகப் பங்களிப்பையும் கருத்தில்கொண்டு பரங்கிப்பேட்டை சங்கம் (சிங்கப்பூர்) நிறுவப்பட்டுள்ளது.
1 of 2
படம்: பரங்கிப்பேட்டை சங்கம் (சிங்கப்பூர்)
படம்: பரங்கிப்பேட்டை சங்கம் (சிங்கப்பூர்)

04 Oct 2026 - 5:15 am

5 mins read

சிங்கப்பூர்வாழ் பரங்கிப்பேட்டை முஸ்லிம்களுக்கான பரங்கிப்பேட்டை சங்கம் (சிங்கப்பூர்) அதிகாரபூர்வமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 350 பரங்கிப்பேட்டை (போர்டோ நோவோ) முஸ்லிம் குடும்பங்களும் அவ்வூரைச் சுற்றியுள்ள இதர ஊர்களிலிருந்து 150 முஸ்லிம் குடும்பங்களும் சிங்கப்பூரில் வாழ்ந்து வருகின்றன.

சங்கத்தின் இலக்கும் நோக்கும்

“சிங்கப்பூரிலுள்ள இந்தப் பரங்கிப்பேட்டை முஸ்லிம்களை ஒன்றிணைத்து, வலுவான சமூகத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்,” என்றார் சங்கத் தலைவர் எ.முஸ்தஃபா கமல்.

இதற்காக ஆண்டுதோறும் குடும்ப விழா, ரத்த நன்கொடை முகாம் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சமூகப் பிணைப்புகளை வளர்ப்பது சங்கத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று சங்கத்தின் தலைவர் எ.முஸ்தஃபா கமல் கூறினார்.
சமூகப் பிணைப்புகளை வளர்ப்பது சங்கத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று சங்கத்தின் தலைவர் எ.முஸ்தஃபா கமல் கூறினார். - படம்: பரங்கிப்பேட்டை சங்கம் (சிங்கப்பூர்)

முதியோர் இல்லங்களுக்கு உதவுதல், தமிழ் வகுப்புகள் வழி பண்பாட்டை ஊக்குவித்தல், இளையர் ஈடுபாடு, பாரம்பரியக் கல்வி, கடற்கரைத் தூய்மை போன்ற சுற்றுச்சூழல் திட்டங்கள் உள்ளதாக அவர் கூறினார்.

கல்வி, விளையாட்டு போன்றவற்றில் சிறக்கும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையும் அங்கீகாரமும் வழங்கச் சங்கம் திட்டமிடுகிறது.

திருமணச் சேவை, இஃப்தார் நோன்பு திறப்பு, மதராசா கல்வி ஆதரவு, விளையாட்டு எனப் பல சமூக முயற்சிகளையும் சங்கம் மேற்கொள்ளும்.

சிங்கப்பூரின் பன்முக கலாசாரத்திற்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிக்க முயல்வோம் எனச் சங்கச் செயலாளர் அப்துல் காதர் கூறினார்.

பரங்கிப்பேட்டை சங்கத்தின் (சிங்கப்பூர்) கௌரவத் தலைவர் எஸ்.எம்.அப்துல் ஜலீல் சங்கம் சிங்கப்பூர்வாழ் பரங்கிப்பேட்டை முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரியம், நட்பு, பங்களிப்பு போன்றவற்றைப் பறைசாற்றும் என்று உறுதியளித்தார்.
பரங்கிப்பேட்டை சங்கத்தின் (சிங்கப்பூர்) கௌரவத் தலைவர் எஸ்.எம்.அப்துல் ஜலீல் சங்கம் சிங்கப்பூர்வாழ் பரங்கிப்பேட்டை முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரியம், நட்பு, பங்களிப்பு போன்றவற்றைப் பறைசாற்றும் என்று உறுதியளித்தார். - படம்: பரங்கிப்பேட்டை சங்கம் (சிங்கப்பூர்)

சங்கத்தின் கௌரவத் தலைவர் எஸ்.எம்.அப்துல் ஜலீல், இச்சங்கம் பரங்கிப்பேட்டை முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரியம், நட்பு, பங்களிப்பைப் பறைசாற்றும் என உறுதியளித்தார்.

சிங்கப்பூரின் பன்முகக் கலாசாரதிற்கும் சமூகத்திற்கும் அர்த்தமுள்ள வகையில் பங்களிக்கச் சங்கம் முனையும் என்று சங்கத்தின் செயலாளர் அப்துல் காதர் கூறினார்.
சிங்கப்பூரின் பன்முகக் கலாசாரதிற்கும் சமூகத்திற்கும் அர்த்தமுள்ள வகையில் பங்களிக்கச் சங்கம் முனையும் என்று சங்கத்தின் செயலாளர் அப்துல் காதர் கூறினார். - படம்: பரங்கிப்பேட்டை சங்கம் (சிங்கப்பூர்)

சிங்கப்பூருக்கும் பரங்கிப்பேட்டைக்குமான தொடர்பு

பரங்கிப்பேட்டை பரபரப்பான துறைமுகமாக இருந்ததால், தமிழ் முஸ்லிம்கள், மரைக்காயர்கள், தென்னிந்திய வணிகர்கள் மலாயத் தீபகற்பத்திற்குப் புலம்பெயர்ந்தனர்.

கடல்சார் வணிகத்தில் ஈடுபட்ட பரங்கிப்பேட்டைக் குடும்பங்கள் 16ஆம் நூற்றாண்டிலேயே சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியாவில் குடியேறத் தொடங்கின.

கல்வி, விளையாட்டு, சமூகச் சேவை எனப் பல்வேறு வழிகளில் மக்களுக்குச் சேவையாற்றச் சங்கம் முற்படுகிறது.
கல்வி, விளையாட்டு, சமூகச் சேவை எனப் பல்வேறு வழிகளில் மக்களுக்குச் சேவையாற்றச் சங்கம் முற்படுகிறது. - படம்: பரங்கிப்பேட்டை சங்கம் (சிங்கப்பூர்)படம்: பரங்கிப்பேட்டை சங்கம் (சிங்கப்பூர்)

தொன்மையான நகரம்

கிட்டத்தட்ட 50,000 பேரைக் கொண்ட பரங்கிப்பேட்டை, தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில் முக்கியக் கடல் வணிக மையமாகத் திகழ்ந்தது.

சோழர் காலம் முதல் அரேபியர், டச்சுக்காரர், போர்த்துகீசியர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை இது துடிப்பான துறைமுகமாகச் செயல்பட்டது.

தமிழர்கள் ஐரோப்பியர்களை, குறிப்பாகப் போர்த்துகீசியர்களைப் ‘பரங்கி’ என்றழைத்தனர். அவர்கள் அதிகம் வாழ்ந்ததால் இவ்வூர் ‘பரங்கிப்பேட்டை’ என்றாகி, அதுவே தற்போதைய பெயரானது.

ஐரோப்பியர்கள் இந்தியக் கரைகளுக்கு வரும் முன்பே, போர்ட்டோ நோவோ மக்கள் தென்கிழக்காசியா, மத்திய கிழக்கு, எகிப்து, ஏமன் ஆகியவற்றுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.

சோழர் துறைமுகம்

முதலாம் ராஜராஜ சோழன் (கி.பி.985-1014), முதலாம் ராஜேந்திர சோழன் (கி.பி.1014-1044) ஆட்சியில், வங்காள விரிகுடா வழியாகத் தமிழகக் கடற்கரையை இலங்கையுடனும் தென்கிழக்காசியாவுடனும் இணைக்கும் கடல்வழிப் பாதைகள் உருவாயின.

வெள்ளாறும் வங்காள விரிகுடாவும் இணையுமிடத்திலிருந்த பரங்கிப்பேட்டை, சோழர்களின் கடல்வழியில் முக்கிய நகரமாக விளங்கியது.

கப்பல் சரக்குகள் படகுகள் மூலம் வெள்ளாற்றின் வழியே உட்புற மாவட்டங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் ஆனைமடுவு, கல்லாறு இணையும் இடத்தில் தொடங்கும் வெள்ளாறு, பெரியாறு, மஞ்சினியால் பலம்பெற்றுச் சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் வழியாகப் பாய்கிறது.

வழியில் சுவேதா நதியுடன் இணைந்து கிழக்கே பாய்ந்து, கடலூர் சமவெளியில் விருத்தாச்சலம் அருகே மணிமுத்தாற்றுடன் சங்கமிக்கிறது.

திட்டக்குடி, சேத்தியாத்தோப்பு, புவனகிரி வழியாகப் பாயும் 150 கி.மீ நீள வெள்ளாறு, பரங்கிப்பேட்டையில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

பழங்காலத்தில் இந்நகரம் ‘வருணபுரி’ என்றும் அழைக்கப்பட்டது.

போர்ட்டோ நோவோ

1590ஆம் ஆண்டு வாக்கில் போர்த்துகீசியர்கள் அங்கு ஒரு துறைமுகத்தை நிறுவி, ‘போர்ட்டோ நோவோ’ எனப் பெயரிட்டனர். போர்த்துக்கீசிய மொழியில் ‘போர்ட்டோ’ என்றால் துறைமுகம், ‘நோவோ’ என்றால் புதியது. அது அவர்களின் முக்கிய வணிக மையமாக உருவெடுத்தது.

பின்னர் இந்நகரம் டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. பிரிட்டனின் ஆட்சியில் மெட்ராஸ் மாகாணத்தின் முக்கியச் சுங்கத் துறைமுகமாக இயங்கியது.

சோழமண்டல முஸ்லிம் வணிகம் குறித்த வரலாற்று ஆய்வுகள், போர்ட்டோ நோவோவைச் சுறுசுறுப்பான கப்பல் கட்டும், பழுதுபார்க்கும் தளமாகச் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தியாவின் முதல் இரும்பு, எஃகு தொழிற்சாலை 1830ஆம் ஆண்டு போர்ட்டோ நோவோவில் நிறுவப்பட்டது.
இந்தியாவின் முதல் இரும்பு, எஃகு தொழிற்சாலை 1830ஆம் ஆண்டு போர்ட்டோ நோவோவில் நிறுவப்பட்டது. - படம்: பரங்கிப்பேட்டை சங்கம் (சிங்கப்பூர்)

முதல் எஃகுத் தொழிற்சாலை

இந்தியாவின் முதல் இரும்பு, எஃகுத் தொழிற்சாலை 1830ஆம் ஆண்டு போர்ட்டோ நோவோவில் நிறுவப்பட்டது.

பிரிட்டனின் மெனை, பிரிட்டானியா பாலங்கள் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டமைப்புத் திட்டங்களுக்கும், இந்தியா உட்பட பல்வேறு ஆங்கிலேய காலனிகள் முழுவதும் அமைந்த ரயில் கட்டமைப்புகளுக்கும் அங்கிருந்துதான் இரும்பும், எஃகும் சென்றுள்ளது.

போர்ட்டோ நோவோ நாணயம் (Porto Novo Pagoda)

ஆற்காடு நவாப்புகளால் அச்சிடப்பட்ட போர்ட்டோ நோவோ தங்க நாணயம், 17-19ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியா, இலங்கை, இந்தியப் பெருங்கடல் பாதைகளில் முக்கிய வணிக நாணயமாக இருந்தது.

நம்பகமான இந்நாணயத்தை டச்சு, ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவனங்கள் நகலெடுத்தன.

ஏறக்குறைய 3.4 கிராம் எடையும் 80 விழுக்காடு முதல் 86 விழுக்காடு வரை தங்கத் தூய்மையும் கொண்ட அந்த நாணயம், சோழமண்டலக் கடற்கரையில் வணிகத்தை ஊக்குவித்த முக்கியப் பொருளியல் காரணியாகும்.

17 முதல் 19ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்த போர்ட்டோ நோவோ வராகன்.
17 முதல் 19ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்த போர்ட்டோ நோவோ வராகன். - படம்: பரங்கிப்பேட்டை சங்கம் (சிங்கப்பூர்)

போர்ட்டோ நோவோ போர்

இரண்டாம் ஆங்கிலேய-மைசூர் போரின்போது, ஜெனரல் சர் அயர் கூட் தலைமையிலான ஆங்கிலேயப் படைகள் அப்போதைய மைசூரின் நடைமுறை ஆட்சியாளரும் திப்பு சுல்தானின் தந்தையுமான ஹைதர் அலியின் படையைத் தோற்கடித்தன.

காலனித்துவ ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஹைதர் அலி முக்கிய முன்னோடியாவார். இந்திய சுதந்திர இயக்கம் முறையான வடிவம் பெறுவதற்கு முன்பே போர்டோ நோவோவில் நடந்த போரைப் போன்ற பிற போராட்டங்கள் காலனித்துவ எதிர்ப்புக்கான ஆரம்பகால விதைகளை விதைத்தன.

போர்ட்டோ நோவோவில் மகாத்மா காந்தி

ஒத்துழையாமை இயக்கம், சுயசார்புக்கான சுதேசி சிந்தனையைப் பரப்புவதற்காக மகாத்மா காந்தி மேற்கொண்ட பயணத்தின் ஒரு பகுதியாக 1921ல் அவர் போர்ட்டோ நோவோவிற்குச் சென்றார்.

அவர் அங்கு சென்றபோது டென்மார்க்கைச் சேர்ந்த தொண்டூழியர் ஏனி மேரி பீட்டர்சனின் அழைப்பை ஏற்று ஒரு கல்வி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டி அதற்கு ‘சேவா மந்திர்’ (சேவை செய்யும் ஆலயம்) என்று பெயரிட்டார்.

அந்தப் பள்ளி, ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக இன்றளவும் பரங்கிப்பேட்டைச் சமூகத்திற்குத் தொடர்ந்து சேவையாற்றி வருகிறது.

அல்மதராசா-துல்-காதிரிய்யா

பரங்கிப்பேட்டை நீண்ட காலமாகவே கல்வி மையமாக, குறிப்பாக சமயக் கல்வியில் சிறப்புற்று விளங்குகிறது. அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களில் காதிரிய்யா மதராசாவும் ஒன்றாகும். அவ்வமைப்பு ஏறத்தாழ 150 ஆண்டுகள் பழமையான பாரம்பரியத்தைக் கொண்டது.

உள்ளூரிலிருந்தும் இலங்கை போன்ற வெளிநாடுகளிலிருந்தும் வந்த எண்ணற்ற மாணவர்கள் அங்கு சமயக்கல்வி பயின்றுள்ளனர். அவர்களில் பலர் பின்னாளில் போற்றத்தக்க இஸ்லாமிய சமய அறிஞர்களாக (ஆலிம்களாக) உருவெடுத்தனர்.

கீழக்கரையைச் சேர்ந்த சென்னை கிரசண்ட் பல்கலைக்கழக நிறுவனர் பி.எஸ்.அப்துர் ரஹ்மானின் சகோதரர் கே.டி.எம்.அப்துல் காதிர் (தைக்காவாப்பா) அவர்களுள் ஒருவர்.

பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ள 150 ஆண்டுகள் பழமையான அல்மதராசா-துல்-காதிரிய்யா சமயக் கல்விக்குப் பெயர் பெற்றதாகும். உள்ளூரிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வந்த எண்ணற்ற மாணவர்கள் அங்கு சமயக்கல்வி பயின்றுள்ளனர்.
பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ள 150 ஆண்டுகள் பழமையான அல்மதராசா-துல்-காதிரிய்யா சமயக் கல்விக்குப் பெயர் பெற்றதாகும். உள்ளூரிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வந்த எண்ணற்ற மாணவர்கள் அங்கு சமயக்கல்வி பயின்றுள்ளனர். - படம்: பரங்கிப்பேட்டை சங்கம் (சிங்கப்பூர்)

காப்பித்தான் கெலிங் பள்ளிவாசல் (Kapitan Keling Mosque)

பரங்கிப்பேட்டையில் பிறந்த தமிழ் முஸ்லிம்களான சூலியா சமூகத் தலைவர் காதர் மொஹைதீன் மரைக்காயரை (Cauder Mohudeen Merican), 1801ல் ஆங்கிலேய லெஃப்டினன்ட்-கவர்னர் சர் ஜார்ஜ் லீத் குற்றவியல் நடுவராகவும் நிர்வாகத் தொடர்பாளராகவும் நியமித்தார்.

அதே ஆண்டில், பினாங்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க கபித்தான் கெலிங் பள்ளிவாசலை ‘வக்ஃப்’ செய்ய, அரசிடமிருந்து 18 ஏக்கர் நிலத்தைப் பெற்றார்.

பினாங்கு ஜார்ஜ் டவுனின் மிகப் பெரிய, பழமையான அப்பள்ளிவாசல், யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களத்தின் முக்கியத் தூணாகவும் கலாசாரப் பரிமாற்றங்களின் குறியீடாகவும் திகழ்கிறது.

பரங்கிப்பேட்டையில் பிறந்த காதர் மொஹைதீன் மரைக்காயர் நிறுவிய கபித்தான் கெலிங் பள்ளிவாசல் இன்று பினாங்கின் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களத்தின் முக்கியத் தூணாக நிற்கிறது.
பரங்கிப்பேட்டையில் பிறந்த காதர் மொஹைதீன் மரைக்காயர் நிறுவிய கபித்தான் கெலிங் பள்ளிவாசல் இன்று பினாங்கின் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களத்தின் முக்கியத் தூணாக நிற்கிறது. - படம்: பரங்கிப்பேட்டை சங்கம் (சிங்கப்பூர்)
பரங்கிப்பேட்டையில் உள்ள 19 பள்ளிவாசல்களில் ஆகப் பழமையான கீழுர் நபி பள்ளிவாசல்.
பரங்கிப்பேட்டையில் உள்ள 19 பள்ளிவாசல்களில் ஆகப் பழமையான கீழுர் நபி பள்ளிவாசல். - படம்: பரங்கிப்பேட்டை சங்கம் (சிங்கப்பூர்)

பரங்கிப்பேட்டையின் 19 பள்ளிவாசல்களில் மிகப்பழமையானது கீழூர் நபி பள்ளிவாசல். இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர் ஹஸ்ரத் உக்காஷா இப்னு அல்-மிஹ்சன் (ரலி), அரபு வணிகர்களுடன் இறைத்தூதரின் வாழ்நாளிலேயே இங்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் இப்பள்ளிவாசல் அப்போதே நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. ஹஸ்ரத் உக்காஷா (ரலி) அங்கேயே வாழ்ந்து மறைந்தார் என்பதும் உள்ளூர் வரலாறாகும்.

மீரா பள்ளிவாசலின் 100 ஆண்டுகளுக்கு முந்தைய தோற்றம்.
மீரா பள்ளிவாசலின் 100 ஆண்டுகளுக்கு முந்தைய தோற்றம். - படம்: பரங்கிப்பேட்டை சங்கம் (சிங்கப்பூர்)
புதுப்பிக்கப்பட்ட மீரா பள்ளிவாசலின் தற்போதைய தோற்றம்.
புதுப்பிக்கப்பட்ட மீரா பள்ளிவாசலின் தற்போதைய தோற்றம். - படம்: பரங்கிப்பேட்டை சங்கம் (சிங்கப்பூர்)

மீரா பள்ளிவாசல் அவ்வூரின் புகழ்பெற்ற பள்ளிவாசல்களுள் ஒன்று. 400 ஆண்டுகள் பழமையான பரங்கிப்பேட்டை மீரா பள்ளிவாசலின் நிலம், ஆறாவது முகலாயப் பேரரசர் ஆலம்கீர் ஔரங்கசீப்பால் கொடையாய் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சங்கத்துடன் இணைய

மின்னஞ்சல்: portonovo.sg@gmail.com

ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம்: சிங்கப்பூர் போர்ட்டோ நோவோ சங்கம்

குறிப்புச் சொற்கள்