புதிய தலைவர்கள், புதிய கனவுகள்

புதிய தலைவர்கள், புதிய கனவுகள்

5 mins read
17f4b6ce-4d73-44d9-beae-0b7610358cf7
இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2025 டிசம்பர் மாதம் பொறுப்பேற்றார் திருவாட்டி சரோஜினி பத்மநாதன். - படம்: பே.கார்த்திகேயன்

இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து ஆலோசனை வாரியமும் சிங்கப்பூரில் இந்து சமய விவகாரங்களில் முக்கியப் பங்கு வகித்துவரும் நிலையில், அவற்றின் தலைவர்கள் பற்பல புதிய முயற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

பக்தர்களுக்கான மேம்பட்ட அனுபவம்

இந்து அறக்கட்டளை வாரியத்தில் தமது தலைமைத்துவ பயணத்தையும் குறிக்கோளையும் ‘அன்பு, அறிவு, அழகு’ என்ற மூன்று சொற்களில் சுருக்கமாகக் குறிப்பிட்டார் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சரோஜினி பத்மநாதன்.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அத்தலைமைத்துவப் பொறுப்பையேற்ற திருவாட்டி சரோஜினி, அன்புடன் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்குச் சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்பதை முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டுள்ளார்.

சிறப்பான சேவையை வழங்க அறிவார்ந்த வழிகளையும் தீர்வுகளையும் கண்டறிவது முக்கியமென அவர் கருதுகிறார்.

“தற்போது நம்மிடம் பலதரப்பட்ட தொழில்நுட்பங்களும் கருவிகளும் இருக்கின்றன. அவற்றைத் திறம்படப் பயன்படுத்தி பக்தர்களின் அனுபவத்தைச் செம்மைப்படுத்துவது எங்கள் கடமை,” என்று அவர் கூறினார்.

மனநிம்மதி தேடி ஆலயங்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கு அழகான, தூய்மையான வளாகத்தை வழங்குவதும் தமது முக்கிய குறிக்கோள்களில் ஒன்றென அவர் பகிர்ந்துகொண்டார்.

தலைமைத்துவப் பொறுப்பேற்ற கடந்த சில மாதங்களில் பக்தர்களுடனும் சமூகத்தினருடனுமான உரையாடல்கள்வழி அவர்களது எதிர்பார்ப்புகளை நன்கு புரிந்துகொள்ள முடிந்ததாகத் திருவாட்டி சரோஜினி சொன்னார்.

“நல்லதொரு அனுபவத்தைப் பெரும்பாலான பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள். அர்ச்சனைகள் விரைவாகச் செய்யப்படுவது, அன்னதான, பிரசாத பரிமாறுதல் சீராக நடைபெறுவது போன்றவை அவர்களுக்கு முக்கியமாக உள்ளன.

“அச்செயல்பாடுகளை, மேலும் மெருகேற்ற தொடர்ந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்,” என்றார் அவர்.

எதிர்காலத் திட்டங்களில் ஆலயச் செயல்முறைகளின் மேம்பாடு ஒருபுறம் இருக்க, அதிக இளையர்கள் தலைமைத்துவப் பொறுப்பு வகிப்பது மறுபுறம் இருக்கிறதென அவர் கூறினார்.

“அனுபவமிக்க தலைவர்கள் ஓர் அமைப்பிற்கு எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு இளைய தலைவர்களும் முக்கியம். அவர்களது பங்களிப்புகள் நிச்சயமாக நல்ல மாற்றங்களைக் கொண்டுவர உதவியாக இருக்கும்,” என்று அவர் விளக்கினார்.

புதிய முயற்சிகளும் திட்டங்களும்

இந்து அறக்கட்டளை வாரியத்தின் புதிய தலைவர் சேகரன் கிருஷ்ணன்.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் புதிய தலைவர் சேகரன் கிருஷ்ணன். - படம்: பே.கார்த்திகேயன்

இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவராக அண்மையில் பொறுப்பேற்ற திரு சேகரன் கிருஷ்ணனும் இளையர்களை அதிக பொறுப்புகளைக் கையிலெடுக்க ஊக்குவித்தார்.

“இளையர்கள் பலர் தொண்டூழிய பொறுப்புகளிலும் தலைமைத்துவப் பொறுப்புகளிலும் ஈடுபடுவது முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

விழாக் காலங்களில் இளையர்களுக்கு அதிகத் தொண்டூழியப் பொறுப்புகளை வழங்கி, பின்னர் அவர்களைத் தலைமைத்துவப் பொறுப்புகளுக்கு அறிமுகப்படுத்தும் திட்டங்கள் உள்ளதென அவர் தெரிவித்தார்.

அவ்வாறான முக்கிய விழாக்களில் ஒன்றாக விளங்குவது அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் 200ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டங்கள்.

கொண்டாட்டங்களின் முக்கிய அங்கமாக, ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்பைப் பறைசாற்றும் இரு கண்காட்சிகளும் ஒரு புத்தகமும் அடங்குமெனத் திரு சேகரன் பகிர்ந்துகொண்டார்.

இளைய தலைவர்கள் சிறப்பாகப் பங்களிக்கக் கூடிய கூறுகளில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதென்றும் அவர் சொன்னார்.

“சமூக ஊடகம்வழி எங்கள் சேவைகளையும் அவற்றைக் குறித்த விழிப்புணர்வையும் மக்களிடையே கொண்டுசேர்ப்பது போன்ற முயற்சிகளில் இளைய தலைவர்களின் பங்கு இன்றியமையாதது,” என்றார் அவர்.

இளைய தலைவர்களின் பங்கேற்பை அதிகரிப்பது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளிலும் கவனம் செலுத்தப்படுமென அவர் உறுதியளித்தார்.

“தற்போது பிஜிபி மண்டபத்தில் சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு ஸ்ரீ மாரியம்மன் கோயிலிலும் அவை பொருத்தப்படவுள்ளன.

“கோயில்களில் பயன்படுத்தப்படும் நெகிழி, ஸ்டைரோஃபோம் பொருள்களின் பயன்பாட்டைக் குறைத்து, மட்கும் தன்மை கொண்ட பொருள்களை அதிகம் பயன்படுத்தவுள்ளோம்,” என்று திரு சேகரன் விளக்கினார்.

அந்த முயற்சியின் காரணமாக செலவு மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கும் வாய்ப்பு இருந்தாலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருதி அது மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கோயில்களுக்கு வரும் பக்தர்கள் சில வேளைகளில் பொறுமை காத்தால் மிகவும் உதவிகரமாக இருக்குமென அவர் கூறினார்.

“கோயில்களில் பணிபுரியும் பெரும்பாலானோர் தொண்டூழியர்கள். தங்களால் முடிந்தவரை வேகமாகவும் சிறப்பாகவும் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்களது உழைப்பிற்கு மதிப்பளித்து பக்தர்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால் சிறப்பாக இருக்கும்,” என்று அவர் கோரினார்.

பக்தர்களின் அனுபவங்களை மேம்படுத்த இணைய, தொழில்நுட்ப தீர்வுகள் தொடர்ந்து ஆராயப்படுமென திரு சேகரன் கூறினார்.

மேம்பட்ட புரிந்துணர்வு

இந்து ஆலோசனை வாரியத்தின் புதிய தலைவர் செங்குட்டுவன் கன்னியப்பன்.
இந்து ஆலோசனை வாரியத்தின் புதிய தலைவர் செங்குட்டுவன் கன்னியப்பன். - படம்: பே. கார்த்திகேயன்

இந்து ஆலோசனை வாரியத்தில் தம் தலைவர் பணியைத் தொடர்கிறார் திரு செங்குட்டுவன் கன்னியப்பன்.

அரசாங்கத்திற்கும் இந்து அறக்கட்டளை வாரியத்திற்கும் இந்து சமயத்தைச் சார்ந்த விவகாரங்களில் ஆலோசனை வழங்கும் அவ்வமைப்பிற்குப் பொறுப்பேற்றதில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

“இந்து சமயத்தைக் குறித்த தகவல்கள் பலதரப்பட்ட மக்களுக்குச் சீராகச் சென்றடைவதை நான் என் தலைமைத்துவ காலத்தில் பார்க்க விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

சமயம் சார்ந்த பூசல்களும் சச்சரவுகளும் நிலவுவதற்கான முக்கிய காரணம் மக்களுக்குப் பிற சமயங்களைக் குறித்த போதுமான தகவல்கள் தெரியாமல் போவதே என்று அவர் கருதுகிறார்.

“துல்லியமான தகவல்களை நேர்த்தியான முறையில் அனைத்து மக்களுக்கும் கொண்டுசேர்ப்பதே எங்கள் குழுவின் முக்கிய நோக்கமாக உள்ளது. அதைச் செயல்முறையாக்க ‘வித்ய பீடம்’ என்ற புதிய கற்றல் தளத்தை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்தவுள்ளோம்,” என்று அவர் சொன்னார்.

அக்கற்றல் தளம்வழி இந்து சமய பாரம்பரியங்கள், வேதங்கள், தத்துவங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யப்பட்ட விரிவுரைகள் வழியாகவும் பல்வேறு காணொளிகள் வாயிலாகவும் மக்களுக்குக் கொண்டுசேர்க்க வாரியம் முனைகிறது.

சமூக ஊடகங்களையும் திறன்பேசிகளையும் பலர் இன்று முக்கிய தகவல் தளங்களாகப் பயன்படுத்துவதைத் தொடர்ந்து இம்முயற்சி எடுக்கப்படுவதாக அவர் விவரித்தார்.

“வேதங்களையும் சித்தாந்தங்களையும் நன்கு கற்றுத் தேர்ந்தோரே இந்த விளக்கக் காணொளிகளையும் விரிவுரைகளையும் வழங்குவர். ஆகையால், மக்கள் பிற தளங்களில் பொய்யான கருத்துகளைப் பார்த்து குழம்பாமல் இருக்க இவை உதவியாக இருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

வாரியத்தின் முயற்சிகளில் இளையர்களை ஒன்றிணைப்பதிலும் திரு செங்குட்டுவன் முக்கியக் கவனம் செலுத்தி வருகிறார்.

“இளையர்களிடம் படிப்படியாக கூடுதல் பொறுப்புகளை வழங்கி, அவர்களை எதிர்கால தலைமைத்துவத்திற்குத் தயார்ப்படுத்துவது என்னைப் போன்ற மூத்த தலைவர்களின் முக்கியப் பணி,” என்றார் அவர்.

இளைய தலைவர்களின் குரல்

இளவயது முதலே சமூக சேவையில் ஆர்வம் கொண்ட எம்.சினேகா, 23, தற்போது இந்து இளையர் அமைப்பின் இணைத் தலைவராகப் பொறுப்பில் உள்ளார்.

“என் வாழ்வில் இந்து சமயத்திற்கு எப்போதுமே பெரிய பங்குண்டு. சிறுவயது முதலே பல்வேறு சமய விழுமியங்கள், கதைகள், பாடங்கள் போன்றவற்றைக் கற்பிக்கும் வகுப்புகளுக்குச் சென்றதால் எனக்கு இளையர் அணியில் இணைவது இயல்பான ஒன்றாக அமைந்தது,” என்று அவர் கூறினார்.

“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கண்ணோட்டத்துடன்தான் இத்தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றேன்,” என்றார் குமாரி சினேகா.

ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரான பூஜா சுரேஷ், 24, மூத்த தலைவர்களிடமிருந்து கற்பதைச் சிறந்த வாய்ப்பாகப் பார்க்கிறார்.

“மூத்த தலைவர்கள் இளையர்களிடம் எதிர்பார்ப்பது, ஆழமாகச் சிந்தித்து பரிந்துரைக்கப்படும் யோசனைகளையும் தீர்வுகளையும்தான். அவற்றை வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம்,” என்றார் அவர்.

தம்மைப் போலவே இளவயதில் தொண்டூழிய பணிகளைத் தொடங்கும் இளையர்களுக்கு உறுதுணையாக இருக்க விரும்புகிறார் ரதி பாலகிருஷ்ணன், 37.

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தற்போது மேலாண்மைக் குழு உறுப்பினராக இருக்கும் அவர், தாம் தொடங்கியபோது வழிகாட்டிய மூத்தோரைப் போல் தாமும் உதவ வேண்டுமென விரும்புகிறார்.

குறிப்புச் சொற்கள்