காதல் சொட்டும் மெல்லிசைப் பாடல்: உள்ளூர்க் கலைஞரின் புதிய வெளியீடு

காதல் சொட்டும் மெல்லிசைப் பாடல்: உள்ளூர்க் கலைஞரின் புதிய வெளியீடு

3 mins read
90ca07f1-40bd-41c0-8719-c7f3c1d50d25
‘நீனா’ பாடல் சுவரொட்டி. - படம்: பிரசாத் வரதராஜன்

தமிழ் இசைத்துறையில் வெற்றிக்கான படிக்கட்டுகளாகக் கடும் உழைப்பு, ரசனை பற்றிய புரிதல், தயாரிப்புக் களத்தில் தனிநபர்கள் உருவாக்கும் தொடர்பு வட்டம் என ஏராளமான அம்சங்கள் உள்ளன.

கனவு மெய்ப்பட ஒவ்வோர் அடியையும் சிரமப்பட்டு எடுத்துவைத்து, சில நேரங்களில் விழுந்து, எழுந்து, இறுதியில் தமது கலைப்பயணத்தின் முக்கிய மைல்கல்லைக் கடந்துள்ளார் உள்ளூர்க் கலைஞர் பிரசாத் ‘வாடஃப்ளோ’ (Wadaflow) வரதராஜன், 36.

நுட்பமிகு நடன அசைவுகளும் விறுவிறுப்பான ‘ராப்’ சொல்லாடலும் இவருக்கு அத்துபடி. என்றாலும் பாடல், நடிப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு அவர் தமது திறன்களை வளர்க்க முற்படுகிறார்.

பல்லாண்டுகளாக இத்துறையில் பாடுபட்டதன் பலனாக ‘நீனா’ என்ற பாடலை அவர் வெளியிட்டுள்ளார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்னதாக வெளிவந்த இந்தப் பாடல் காணொளி, இதுவரை 172,000க்குமேல் பார்க்கப்பட்டுள்ளது.

நடனம், ‘ராப்’, நடிப்பு, பாடல் எனப் பன்முகத்திறன் வாய்ந்த பிரசாத் வரதராஜன்.
நடனம், ‘ராப்’, நடிப்பு, பாடல் எனப் பன்முகத்திறன் வாய்ந்த பிரசாத் வரதராஜன். - படம்: பிரசாத் வரதராஜன்

பேருந்தில் வயதான இணையரைக் கண்டு, அவர்கள் இளமையில் எப்படி இருந்திருப்பார்கள் என்ற சிந்தனையிலிருந்து இந்தப் பாட்டுக்கான யோசனை உதித்ததாகப் பிரசாத் கூறினார்.

வங்கித் துறையில் நிர்வாகியாகப் பணியாற்றும் இவர், ‘காதலை முதலில் சொன்னது நானா, நீயா?’ என்ற வினாவே இந்தப் படைப்புக்கு வித்து என்று கூறினார்.

வானொலி அறிவிப்புப் பாணியிலான நகைச்சுவையான வசனங்களுடன் தொடங்கி, நீரோட்டம் போன்ற இதமான இசையுடன் பிரசாத்தின் இனிமையான குரல், காதலியைக் கொஞ்சிப் பாடுவதை ரசிகர்கள் கேட்க முடியும்.

தமிழ்த் திரைப்பாடலுடன் ‘ஆர்என்பி’ (R&B), ‘கே பாப்’ உள்ளிட்ட பாணிகளின் சாயலையும் கொண்டுள்ளது இந்தப் பாடல்.

ராம் வில்லன்ஸ் இயக்கிய பாடல் காணொளியில் பிரசாத்துடன் கேஷிகா இணைந்து நடித்துள்ளார்.  

சிலாங்கூரில் தளம் கொண்ட ‘மியூசிக் கிச்சன்’ (Music Kitchen) இசைத் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிய இந்தக் காணொளியில், கில்லபீஸ் (Killa Beez) நடனக் குழுவினரின் நடன அசைவுகளையும் காணலாம்.

பொறுமையுடன் கடந்த பாதை

பிரசாத் தனது எட்டு வயதில், நடன இயக்குநர் அரவிந்த் நாயுடுவின்கீழ் உள்ளூர்த் தொலைக்காட்சியில் ‘மகாராஷ்டிரா’ நடனக் குழுவில் நடனமாடத் தொடங்கினார்.

அதுமுதல் அவ்வப்போது ஆடவும் நடிக்கவும் சிற்சில வாய்ப்புகளைப் பெற்ற இவர், 18 வயதில் 2008ஆம் ஆண்டின் ‘தூள்’ நடனப் போட்டி நிகழ்ச்சியில் கில்லபீஸ் குழுவில் இடம்பெற்றார். பின்னோக்கி அவர் குட்டிக்கரணம் அடித்தது அப்போது பெரிதும் பாராட்டப்பட்டது.

அத்துடன், ‘நட்சத்திரம்’ திறன் தேடல் போட்டியில் அவர் ‘சிறந்த நடிகர்’ பட்டத்தையும் வென்றார். தொலைக்காட்சி நாடகங்களில் மேலும் நடிப்பதற்கும் இந்த வெற்றி வழிவகுத்தது.

இணையத்தில் பிரசாத்தின் ‘ராப்’ காணொளியை எதேச்சையாகக் கேட்ட புகழ்பெற்ற உள்ளூர் இசைக்கலைஞர் ஷபீர், தமது ஒளிப்பதிவு அரங்கிற்கு அழைத்துச் சில வரிகளைப் பதிவு செய்ததாகப் பிரசாத் குறிப்பிட்டார். “இதுவே என் பாடல் புனைவின் தொடக்கமாக இருந்தது,” என்றார் அவர்.

“கரைகடந்தும் கால்பதிக்க எண்ணி மலேசியாவுக்கு என் இசைப்படைப்புகளை எடுத்துச் சென்றேன். நிறைய கற்றுக்கொண்டேன். அங்குள்ள இசைத் தயாரிப்பாளர்கள் கூறிய விமர்சனங்கள் ஒவ்வொன்றும் உளிபோல என்னைச் செதுக்கியுள்ளதாகக் கருதுகிறேன்,” என்று அவர் கூறினார்.

வேலை, சொந்த வாழ்க்கை, இசை என எல்லாவற்றிலும் சம அளவில் கவனம் செலுத்துவது கடினம் என்றாலும், சிறந்த கலைஞராக வேண்டும் என்ற வேட்கை தம்மை விட்டுவிடவில்லை எனப் பிரசாத் கூறினார். “ஆனாலும் வேதனைப்படும் தருணங்களில் அன்புக்குரியவர்கள் நம்மைத் தாங்கிப் பிடிப்பதை உணர்கிறேன்,” என அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்