தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் புதிய ‘சிக்கி - டிபிஎஸ்’ பங்காளித்துவம்

2 mins read
c2be808d-e069-40cc-858b-dc6d9b1755ba
அக்டோபர் 18ஆம் தேதி சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையில் நடைபெற்ற இந்த நிகழ்வு டிபிஎஸ் மற்றும் ‘சிக்கி’ இடையிலான பங்காளத்துவத்தைத் துவக்குகிறது.  - படம்: சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை
multi-img1 of 2

சிறிய, நடுத்தர உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவ எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் (Enterprise Singapore) ‘டிபிஎஸ்’ வங்கியுடன் இணைந்து தொடங்கிய ‘இஎஸ்ஜி’ தயார்நிலைத் திட்டம் ‘சிக்கி’ (SICCI) எனப்படும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

முக்கியமாக, உள்ளூர் நிறுவனங்களுக்கு நிலைத்தன்மையில் திறனை உருவாக்க அந்தத் தயார் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) நடைபெற்ற அந்த நிகழ்ச்சி டிபிஎஸ் மற்றும் ‘சிக்கி’ இடையிலான பங்காளித்துவத்தைத் துவக்குகிறது. 

அந்தத் திட்டத்தில் நீடித்த நிலைத்தன்மை குறித்த பயிற்சிகள், மற்ற நிறுவனங்களுடன் கலந்துரையாடும் வாய்ப்புகள், கார்பன் மதிப்பீடு மற்றும் உத்தி மேம்பாடு போன்ற அம்சங்களைப் புதிய நிறுவனங்கள் மேற்கொள்ளும். 

“பல புதிய உள்ளூர் நிறுவனங்கள் குறைந்த கரிம பொருளியலுக்குகு மாறுவது சற்று கடினமான ஒரு முயற்சியாக இருக்கும். இந்த நிறுவனங்களில் நீடித்த நிலைத்தன்மையை அறிமுகப்படுத்த தேவையான ஆதரவை வழங்க நாங்கள் உதவுகிறோம்,” என்று தெரிவித்தார் டிபிஎஸ் நிறுவனக் குழுத் தலைவர் கோ கார் சியோங். சில காலம் நீடித்த நிலைத்தன்மையைக் கடைப்பிடித்துவரும் நிறுவனங்களுக்கு, நிலையான நிதியுதவிக்கான அணுகல், கரிமத்தை அகற்றும் வழிகள் (decarbonization) மற்றும் வணிக மாற்றத்திற்கான சான்றிதழ் போன்ற அம்சங்கள் காத்திருக்கின்றன. 

“இவ்வாண்டு சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் நூற்றாண்டு வரலாற்றுப் பயணத்தை முன்னிட்டு ‘டிபிஎஸ்’ வங்கியுடன் இணைந்து  இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டது,” என்றார் ‘சிக்கி’ பொருளாளர் மாலதி பாலகிருஷ்ணன், 53. 

“எங்களது 500 உறுப்பினர்களில் சுமார் 60 விழுக்காட்டினர் சிறிய, நடுத்தர உள்ளூர் நிறுவன உரிமையாளர்கள். இந்தப் பங்களிப்பின் மூலம் வரும் கற்றல் அவர்களுக்கும் எதிர்கால உறுப்பினர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

‘இஎஸ்ஜி’ தயார்நிலைத் திட்டத்துக்குத் தகுதிபெற உள்ளூர் நிறுவனங்கள் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அத்துடன், அதில் குறைந்தபட்சம் 30% உள்ளூர் பங்குகளை சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் வைத்திருக்க வேண்டும்.

2022ஆம் ஆண்டு தொடங்கிய மின்னிலக்கமயமாதல், அனைத்துலகமயமாதல், நீடித்த நிலைத்தன்மை ஆகிய மூன்று தூண்கள் தொடர்ந்து ‘சிக்கி’ அமைப்புக்கு எதிர்காலத்தில் ஆதரவு அளிக்கும்.

குறிப்புச் சொற்கள்