கலை, கலாசாரம் தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் காட்சிக்கூடம், கலை அரங்கம் எனப் பல்வேறு கலைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள ஏதுவான அம்சங்களை நிறுவவும் விவேகானந்தா கலாசார நிலையம் அறிமுகம் காணவுள்ளது.
பார்ட்லி ரோட்டில் செயல்படும் ராமகிருஷ்ண மிஷன் வரும் 2028ஆம் ஆண்டு தனது நூற்றாண்டைக் கொண்டாடவுள்ள நிலையில், பல்லின சமூகத்தில் அனைவரும் பயன்படுத்த ஏதுவான ஓர் இடத்தை அமைக்க முடிவெடுத்ததாகக் கூறினார் அதன் தலைவர் ஸ்ரீ சமச்சிதானந்தா.
“ராமகிருஷ்ண மிஷன் ஓர் இந்து சமய மையமாக அறியப்பட்டாலும், பாலர் பள்ளி, சிறுவர் இல்லம், ஆலோசனை நிலையம் எனச் சமூக நோக்குடன் அது செயல்பட்டு வருகிறது. ஆனாலும், புதிய திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் அண்மையில் தொடங்கப்படவில்லை. எனவே, கலை, கலாசார நடவடிக்கைகளுக்கான இடத்தை அனைவரும் அணுகும் வகையில், கட்டுப்படியான விலையுடன் அமைக்க விரும்பினோம்,” என்றார் அவர்.
அனைவரையும் உள்ளடக்கிய தளமாக அமைக்கும் முயற்சியின் முதற்படியாக இதனை முற்றிலும் சமயம் சாரா நிலையமாக அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார் ஸ்ரீ சமச்சிதானந்தா.
இந்நிலையத்தின் உயரிய சமூக நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, இதனை ஒரு கட்டுமானத் திட்டமாகக் கருதாமல் சமூகத் திட்டமாகக் கருதி தமது சேவையை அளிக்க முன்வந்துள்ளார் கட்டுமானத் துறை நிபுணரும், திட்ட மேலாளருமான திரு அஷ்வின்குமார் கன்டிலால்.
தமது ஈராண்டுகாலப் பயணத்தில் அவ்வப்போது இவ்வகையான மனத்துக்கு நெருக்கமான திட்டங்களைச் சந்திக்க நேரிடுவதாகக் குறிப்பிட்ட அவர், அப்படியோர் அழைப்பாகக் கருதி முழுமையான திட்டத்திற்கும் நிபுணத்துவ ஆலோசகராகத் துணைநிற்க முடிவெடுத்ததாகக் கூறினார்.
“கடந்த ஆண்டு மே மாதம் தான் முதன்முறையாக ராமகிருஷ்ண மிஷன் தலைவரைச் சந்தித்தேன். தொடர்ந்து அவர்கள் மேற்கொள்ளும் சமூக, அறச்செயல்கள் குறித்து அறிந்தேன்,” என்றார் அவர்.
தம்மைப்போன்ற ஒரு தொழில்முறை நிபுணரைத் திட்ட மேற்பார்வைக்குப் பணியமர்த்தினால் குறைந்தது 80 முதல் 120 ஆயிரம் வெள்ளி வரை செலவாகலாம் என்று கூறியதுடன், அந்தத் தொகை திட்டத்திற்கு வேறு வகையில் பயன்படுவது சிறப்பு என நினைத்ததையும் சுட்டினார் திரு அஷ்வின்.
இப்புதிய நிலையத்தின் பின்னணி குறித்து அறிந்தவுடன், சிங்கப்பூர்க் கட்டடக்கலைக் கழகத்தின் உதவியுடன் வடிவமைப்புப் போட்டியை நடத்தும்படி ஆலோசனை வழங்கியதாகவும் சொன்னார் அவர்.
வடிவமைப்புப் போட்டி
எண். 179 பார்ட்லி ரோட்டில் ஏறத்தாழ 2.4 ஹெக்டர் பரப்பளவில் கோவில், சிறுவர் இல்லம், நிர்வாகக் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் அமைந்துள்ள நிலையில், சாலையை நோக்கி அமைந்துள்ள காலியிடம் இந்நிலையக் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படவுள்ளது.
கிட்டத்தட்ட 2,000 முதல் 2,200 சதுர மீட்டர் வரையிலான பரப்பளவில் அமையும் இந்நிலையத்திற்கான வடிவமைப்புப் போட்டி 2025 நவம்பரில் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற 50 நிறுவனங்களில் ஆறு தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றிலிருந்து இறுதியாக வென்ற ‘யூமி ஆர்க்கிடெக்ட்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த ஜேசன் லிம், அசாமி தகாஹாஷி இணையர், “இந்நிலையத்தின் நோக்கமும், பயன்பாடும் எங்களைப் பெரிதும் ஈர்த்தன. பொதுவாகத் தனியார் திட்டங்களில் பணியாற்றும் எங்களுக்கு ஒரு பொதுப் பயன்பாட்டுக் கட்டடத்தை வடிவமைப்பது கூடுதல் மகிழ்ச்சி,” எனப் பகிர்ந்தனர்.
இந்த நிலையம் ஒரு கலாசாரத்தைச் சார்ந்து இல்லாவிட்டாலும், இந்தியக் கட்டடக்கலையின் சில கூறுகள் இதில் இணைந்துள்ளதை அவர்கள் சுட்டினர்.
இந்தியக் கட்டடக்கலை குறித்து மேலும் ஆழமாக அறிய, அதன் கோவில்கள், முகலாயர் காலத்துக் கட்டடங்கள், ‘ஜாலி’ எனப்படும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட சாளரங்கள் ஆகியன குறித்து அறிந்துகொண்டதாகக் குறிப்பிட்டனர் அவ்விருவரும்.
மேலும், அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள், ‘கிரிட்’ எனப்படும் கட்டடங்களை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு ஆகியவற்றையும் இதில் உள்ளடக்கியதைச் சுட்டினர்.
தன்னையறிதலும் ஒன்றிணைந்த நோக்கும்
இந்த நிலையத்தின் முக்கிய நோக்கங்களான தன்னையறிதலில் கவனம் செலுத்துதல், ஒன்றுபட்ட சேவைகளின் மீது கவனம் செலுத்துதல் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு வடிவமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிலையத்தின் முக்கிய இடங்களான கலையரங்கமும் மாநாட்டு மையமும் தனித்தனியாகச் செயல்படும் வகையில் அமைவதுடன் ஒரே கூரையின்கீழ் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், சாலையின் பக்கம் அதிக இரைச்சல் இருப்பதையும், கோவிலின் பக்கம் அமைதி நிலவுவதையும் கருத்தில் கொண்டு இடத்தின் உட்புறம் முக்கியக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது அந்தக் காலியிடத்தில் சாரதா பாலர் பள்ளிப் பிள்ளைகள் ஓடி விளையாடுவதைக் கவனித்ததாகக் குறிப்பிட்ட அசாமி தகாஹாஷி, தங்கள் வடிவமைப்பு அதனைக் குலைக்கும்படி அமையக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததாகக் கூறினார். ‘ட’ வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள இதில், விளையாடும் இடம் பாதிப்படையாது.
மேலும், அவ்விடத்தில் உள்ள பெரிய முக்கிய மரங்களைச் சிதைக்காமல் அமைந்துள்ளதும் இதன் சிறப்பம்சம்.
“இது கட்டுப்படியாகக் கூடிய விலையில் அமையவேண்டும் என்பதால், அதிக குளிரூட்டிகளைத் தவிர்க்கவேண்டும் என்பதும் முக்கியத் தேவையாக அமைந்தது ” என்றார் ஸ்ரீ சமச்சிதானந்தா.
அதற்கேற்ப, அதிக அளவு இயற்கை ஒளி, காற்றோட்டத்துடன் இவ்விடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றார் ஜேசன் லிம்.
நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, குறைந்த பொருட்செலவுடன், அழகிய சிவப்பு வண்ணத்தில் அமைந்த இவ்வடிவமைப்பு தம்மையும், குழுவினரையும் கவர்ந்ததாகக் குறிப்பிட்டார் திரு அஷ்வின்.
இது எளிமையாகவும் உணர்வுகளுடன் ஈடுபடும் வகையிலும் அமையும் என அவர் கூறினார்.
சிறிய இடம் தேவைப்படும் கலைஞர்களுக்கும் ஏற்றவாறு மாற்றக்கூடிய தன்மை இதன் சிறப்பு என்றும் தெரிவித்தார்.
சமூக நோக்கம்
“ராமகிருஷ்ண மிஷன் புதிதாக ஒரு முன்னெடுப்பைச் செய்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் கலாசார, பண்பாடு தொடர்பில் இந்த நிலையம் அமைக்க முன்வந்துள்ளோம்,” என்றார் இதன் தலைவர் ஸ்ரீசமச்சிதானந்தா.
இதனை மக்களுக்கு உதவியாகவும், அதேநேரத்தில் நிர்வாகத்திற்கு ஆதரவாகவும் அமைப்பது முக்கிய நோக்கம் என்றார் அவர்.
“இது பிற நிலையங்கள், கலைக்கூடங்களைவிட 40 முதல் 50 விழுக்காடு குறைவான விலையைக் கொண்டிருக்கும்,” என்று அவர் உறுதியளித்தார்.
எடுத்துக்காட்டாக, 200 நாற்காலிகள் கொண்ட ஓர் அரங்கத்தை, நடன அரங்கேற்றம் போன்ற நிகழ்ச்சிகளுக்காக முன்பதிவு செய்வோர் தற்போது $2,000 முதல் $3,000 செலவிட்டால், இந்நிலையம் அமைந்தபின் அது $700 முதல் $800 ஆகக் குறையும் என்றார் அவர்.
அனைத்தும் மின்னிலக்கமயமாகியுள்ள நிலையில், வலையொளிப் பதிவுகளுக்கான ‘ஸ்டூடியோ’ அமைக்கத் திட்டமிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரே நோக்குடைய அமைப்புகள் இதில் இணைந்து செயல்பட முன்வந்துள்ளதைச் சுட்டிய அவர், நிதி திரட்ட உதவும் அமைப்புகளுக்கு அடுத்த சில ஆண்டுகளுக்கு அரங்கம், கூடம் ஆகியவற்றைப் பயன்படுத்தும் வாய்ப்பும் வழங்க ஆலோசனை நடத்துவதாகச் சொன்னார்.
இதற்காகப் பல்வேறு வகையிலும் நிதி திரட்டப்படுவதைச் சுட்டிய அவர், “பொதுமக்கள், அமைப்புகளின் பங்காளித்துவத்தை வரவேற்கிறோம்,” என்றும் கூறினார்.
விவேகானந்தா கலாசார நிலையம் திறப்பு
ஏறத்தாழ 15 மில்லியன் வெள்ளி செலவில் உருவாகவுள்ள இந்த நிலையத்தின் கட்டுமானம் இவ்வாண்டின் இறுதியில் தொடங்கப்பட்டு, 2028 ஆகஸ்ட் 7ஆம் தேதி ராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழாவில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

