தமிழர்களையும் சிங்களர்களையும் ஒன்றிணைத்த புத்தாண்டுக் கொண்டாட்டம்

தமிழர்களையும் சிங்களர்களையும் ஒன்றிணைத்த புத்தாண்டுக் கொண்டாட்டம்

4 mins read
சமூகத்தினரை ஒன்றிணைத்த புத்தாண்டுக் கொண்டாட்டம்
bb424eac-a1ad-48d9-bd2e-3267b15a2b93
நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பாரம்பரிய உணவு வகைகளை பங்கேற்பாளர்கள் ரசித்து சாப்பிட்டனர். - படம்: சுந்தர நடராஜ்
multi-img1 of 2

பண்பாட்டு நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் விதமாக, பாலஸ்டியர் சாலையில் உள்ள சிலோன் விளையாட்டு மன்றத்தில் சனிக்கிழமை (மே 9) தமிழ், சிங்களப் புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

அனைத்துச் சமூகத்தினரையும் ஒன்றிணைக்கும் கோலாகலமான சந்திப்பாக இது அமைந்தது.

கிட்டத்தட்ட 120 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், பாலஸ்டியர் திடலின் வரலாற்றுச் சிறப்புமிக்க நான்கு மன்றங்களான சிங்கப்பூர் இந்தியர் சங்கம், சிங்கப்பூர் சீனர் விளையாட்டு மன்றம், சிங்கப்பூர் கல்சா சங்கம், சிலோன் விளையாட்டு மன்றம் ஆகியவற்றின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் லோ, இந்த வட்டாரத்தில் விளையாடிய தமது சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் லோ.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் லோ. - படம்: சுந்தர நடராஜ்

அந்தத் திடலில் உருவாகியுள்ள தனித்துவமான பிணைப்புகளைச் சுட்டிக்காட்டிய அவர், “நமது அனைத்து மன்றங்களையும் ஒன்றிணைக்கும் ஒற்றுமை பாலஸ்டியர் சாலை முழுவதுமே நிலவுகிறது,” என்று குறிப்பிட்டார்.

தமிழ், சிங்களச் சமூகங்களுக்கு இடையிலான பொதுவான பாரம்பரியங்கள் அந்த மாலையின் முக்கிய அம்சமாகத் திகழ்ந்தன. இலங்கையின் பல்வேறு உணவு முறைகளைப் பிரதிபலிக்கும் வகையில் சிறப்பான விருந்து படைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தின் தனித்துவமான கடலுணவு கலந்த பனங்கிழங்குக் கூழ், தமிழர்களாலும் சிங்களர்களாலும் விரும்பி உண்ணப்படும் டச்சு தாக்கத்துடன் கூடிய தேங்காய்ப்பால் பலகாரமான கொக்கிஸ், லவங்கப்பட்டை, ஏலக்காய் போன்ற உள்ளூர் நறுமணப் பொருள்கள் கலந்த மலாய் தாக்கத்துடன் கூடிய இனிப்பான வட்டலப்பம் ஆகியவை பரிமாறப்பட்டன.

நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பாரம்பரிய உணவு வகைகளை பங்கேற்பாளர்கள் ரசித்து சாப்பிட்டனர்.
நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பாரம்பரிய உணவு வகைகளை பங்கேற்பாளர்கள் ரசித்து சாப்பிட்டனர். - படம்: சுந்தர நடராஜ்

பலருக்கு இந்த மன்றம், தலைமுறைகளைத் தாண்டிய மற்றொரு வீடாக விளங்குகிறது. 1890களில் இலங்கையிலிருந்து சிங்கப்பூரில் குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்த மூன்றாம் தலைமுறை உறுப்பினரான லோகராணி அம்பலவாணர், 68, வீட்டில் செய்த வடை, கொழுக்கட்டை ஆகியவற்றுடன் தமது சிறுவயதில் அங்கு நடந்த ஒன்றுகூடல்களை நினைவுகூர்ந்தார்.

இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளின் அவசியத்தை வலியுறுத்தினார் அவர்.

“நாங்கள் சமூகத்தை ஒன்றிணைக்க முயற்சிக்கிறோம். இளையர்கள், முதியவர்கள் என அனைவரும் ஒன்றுகூடி மகிழ்கின்றனர்.

“உணவு என்பது அனைவரும் பேசக்கூடிய ஒரு பொதுவான மொழி. அதனால் அனைவரையும் ஒன்றிணைத்து, விருந்தளிக்கும் ஒரு பெரிய நிகழ்ச்சியாக இதனை நடத்துகிறோம்,” என்றார் திருவாட்டி லோகராணி.

கொவிட்-19 பெருந்தொற்றால் கடந்த சில ஆண்டுகளாகத் தொய்வடைந்திருந்த மன்றத்தில் பல்லினக் கொண்டாட்டங்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு சிறப்பான தொடக்கமாக அமைந்தது என அதன் துணைத் தலைவர் இந்திரா ஈஸ்வரன், 77, கூறினார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஒற்றுமைக் கிண்ண’ (Solidarity Cup) நட்புமுறை கிரிக்கெட் போட்டியின் மூலம் இந்த ஒற்றுமை உணர்வு மேலும் வலுப்பெற்றது.

ஏழு பேர் கொண்ட, ஐந்து ஓவர் கிரிக்கெட் போட்டியாக நடந்த போட்டியில் ‘டேப்ரோபன்’, ‘ஓல்ட் லயன்ஸ்’, ‘சன்லவ்’ ஆகிய மூன்று அணிகள் பங்கேற்றன. இதில் ‘சன்லவ்’ அணி முதலிடத்தைத் தட்டிச் சென்றது.

கடைசித் தருணத்தில் சிக்சர் அடித்து தமது அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த திரு நாகரத்தினம் இளங்கேஸ்வரன், 44, அந்த வெற்றியைத் தாம் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் சன்லவ் இல்லத்திற்கு அர்ப்பணித்தார்.

‘சன்லவ்’ அணியைச் சேர்ந்த திரு நாகரத்தினம் இளங்கேஸ்வரனுக்கு வெற்றி கோப்பையை வழங்கும் ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷோன் லோ. நடுவில் சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் கணேசனநாதன்.
‘சன்லவ்’ அணியைச் சேர்ந்த திரு நாகரத்தினம் இளங்கேஸ்வரனுக்கு வெற்றி கோப்பையை வழங்கும் ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷோன் லோ. நடுவில் சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் கணேசனநாதன். - படம்: சுந்தர நடராஜ்

இந்தப் போட்டி வழங்கிய கலாசாரப் பரிமாற்றம் தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்ததாகக் கூறிய அவர், “தமிழர்கள், சிங்களர்கள் என அனைவரும் ஒன்றாகக் கலந்து விளையாடியது, ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும் சிறப்பான வாய்ப்பை அமைத்துக் கொடுத்தது,” என்றார்.

ஓல்ட் லயன்ஸ் அணிக்காக விளையாடிய மன்றச் செயற்குழு உறுப்பினரும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகக் கணினியியல் துறையின் துணைத் தலைவருமான பேராசிரியர் சுரங்க நாணயக்காரா, தமது அணி தோற்றாலும் அங்கு நிலவிய உற்சாகமான சூழல் தமக்குப் பெருமகிழ்ச்சி அளித்ததாகக் கூறினார்.

புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்றது.
புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்றது. - படம்: சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப்

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஆரவாரக் குரல்கள் ஒலித்ததாக அவர் சொன்னார். “கிரிக்கெட் விளையாட்டின் மூலம் அனைவரையும் மகிழ்வித்து, சமூகங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற இப்போட்டியின் அடிப்படை நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்பட்டது,” என்றார் அவர்.

2028ல் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவுள்ள சிலோன் விளையாட்டு மன்றம், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு விளையாட்டு மையமாகத் திகழ வேண்டும் என்ற விரிவான இலக்கைக் கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டம் அமைந்தது.

சமூக நல்லிணக்கத்திற்காக விளையாட்டைப் பயன்படுத்தும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள மன்றம், வெளிநாட்டு ஊழியர்கள், இளையர்கள், பல்வேறு சமூகக் குழுக்கள் எனத் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களைக் கொண்ட பெண்கள் கிரிக்கெட் அணி ஒன்றையும் மன்றம் களமிறக்கியுள்ளது.

இந்தச் சிறப்பான பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மன்றம் தற்போது நிதி திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட மன்ற சட்டைகளை விற்பனை செய்வதன் மூலம் இம்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

திரட்டப்படும் நிதி, புதிய எல்லை வலைகள் (Boundary nets) அமைப்பதற்கும், இரவு நேர மின்விளக்குகள் பொருத்துவதற்கும், கிளப்பின் கட்டடத்தை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்