பூப்பந்துப் பக்கம் சிறகடிக்க வைத்த அந்தச் செய்தி

பூப்பந்துப் பக்கம் சிறகடிக்க வைத்த அந்தச் செய்தி

4 mins read
20 ஆண்டுகளுக்குப் பின் பூப்பந்து விளையாட்டுக்குத் திரும்பிய தர்மராஜா
f53d92be-e31b-4a12-8097-5f293bb11acd
தனக்குப் பதிலாக வேறொரு விளையாட்டாளர் போட்டிக்கு அனுப்பப்பட்டதால் ஏமாற்றமடைந்த தர்மராஜா கந்தையாவின் வாழ்க்கையை மாற்றியது 2004ல் வெளியான ஒரு செய்தி. - படம்: ரவி சிங்காரம்

நாளிதழில் வெளியான ஒரு செய்தியால் தன் வாழ்வே மாறியது என்கிறார் பூப்பந்துப் பயிற்றுவிப்பாளரும் முன்னாள் தேசியப் பூப்பந்து விளையாட்டாளருமான தர்மராஜா கந்தையா, 70.

தேசிய விளையாட்டாளராக இருந்தபோது தனக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்பு, கடைசி நிமிடத்தில் மற்றொருவருக்கு வழங்கப்பட்டதால் வருத்தத்தில் பூப்பந்து விளையாட்டிலிருந்து விலகியவர் திரு தர்மராஜா.

20 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பூப்பந்தில் தன் வாழ்க்கைப் பாதையை அமைக்கக் காரணமாக இருந்தது, 2004 ஜூலை 9ஆம் தேதி த நியூ பேப்பர் நாளிதழில் வெளியான ஒரு வாக்கியம்.

2004 ஜூலை 9ஆம் தேதி தி நியூ பேப்பர் நாளிதழில் வெளியான செய்தியில் திரு தர்மராஜா கந்தையா பெயர் குறிப்பிடப்பட்டார்.
2004 ஜூலை 9ஆம் தேதி தி நியூ பேப்பர் நாளிதழில் வெளியான செய்தியில் திரு தர்மராஜா கந்தையா பெயர் குறிப்பிடப்பட்டார். - படம்: தர்மராஜா

அந்த ஆண்டு, பூப்பந்தில் ஜூனியர் வெற்றியாளர் கைலாஷ் கலைமணி பற்றிய அச்செய்தியில், சிங்கப்பூரில் தேசிய அளவில் பூப்பந்து விளையாடியுள்ள மூன்று இந்தியர்களைப் பற்றிய ஒரு வாக்கியம் இடம்பெற்றிருந்தது. ‘1960களில் எஸ்.ஏ.துரை, 1970களில் க.தர்மராஜா, 1990களில் ஹமீது கான்’ என்பது அவ்வாக்கியம்.

“அவருடைய மைத்துனிதான் செய்தியை எங்களிடம் தெரிவித்தார். கேட்டதும் அவருக்கு உடனே பெருமகிழ்ச்சி,” என்றார் திரு தர்மராஜாவின் மனைவி செல்வராணி நாதன்.

“என் பெயரைச் செய்தித்தாளில் மறுபடியும் பார்த்ததும் நான் கண்ணீர் விட்டேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் என்னை அங்கீகரித்துள்ளனர் என மகிழ்ந்தேன்,” என்றார் திரு தர்மராஜா.

அப்போதுதான் முழுநேரப் பூப்பந்துப் பயிற்றுவிப்பாளராகும் ஆசை இவருக்கு மனத்தில் உதித்தது.

“இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டனவே…திரும்ப வரமுடியுமா?” எனத் தயங்கியபோது, மனைவி பக்கபலமாக இருந்தார்.

“உங்களுக்குப் பூப்பந்துதானே பிடித்த துறை. பரவாயில்லை…செய்துபாருங்கள்!” என உற்சாகப்படுத்தினார்.

திரு தர்மராஜா 24 மணி நேரத்திற்குள் வேலையிலிருந்து விலகி, சிங்கப்பூர் பூப்பந்துச் சங்கத்தின் அடிப்படைப் பயிற்றுவிப்பாளர் பயிற்சியில் இணைந்தார். மீண்டும் பூப்பந்து விளையாடத் தொடங்கினார்.

நாளடைவில் தேசியப் பயிற்றுவிப்பாளர் பதிவேட்டில் பதிவானதுடன், சிறுவர் மன உளவியல், மனவுளைச்சல் நிர்வாகம் போன்றவற்றிலும் பயிற்சி மேற்கொண்டார். இரண்டாம் தரநிலைப் பயிற்றுவிப்பாளர் எனும் நிலையை எட்டினார்.

திரு தர்மராஜாவும் மனைவியும், ‘அப்போலோ பேட்மின்டன் ஸ்போர்ட்ஸ் கிராஃப்ட்’ நிறுவனத்தைத் (https://www.facebook.com/ABSCBadminton/) தொடங்கினர். ஐந்து வயது முதல் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வரையிலான சிறுவர்களுக்குப் பூப்பந்துப் பயிற்சியுடன், பூப்பந்து மட்டை நூல் கோக்கும் சேவையையும் இவர்கள் வழங்குகின்றனர்.

ஹொங் கா, பைனியர், கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளிகள், குளோபல் இந்தியன் அனைத்துலகப் பள்ளி, ஃபிராண்டியர், ஸிங்னான், ரெட் ஸ்வஸ்திகா உள்ளிட்ட பள்ளி மாணவர்களுக்குத் திரு தர்மராஜா பயிற்சி வழங்கியுள்ளார்.

தற்போது தனியார்ப் பூப்பந்து பயிற்சியையும் வழங்கி வரும் இவர், எதிர்வரும் மார்ச் பள்ளி விடுமுறையின்போது பூப்பந்து முகாமையும் நடத்தவுள்ளார்.

அருந்திறனாளர்

ஏழு வயதிலிருந்து பூப்பந்து விளையாடிவரும் திரு தர்மராஜாவுக்கு 11 வயதாக இருந்தபோது, செம்பவாங் பொது விருதுப் போட்டியில் தன் முதல் வெற்றியைப் பெற்றார். தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிப் பூப்பந்து அணிகளிலும் பின்பு தேசிய விளையாட்டாளர்களை உருவாக்கியுள்ள எஃப்&என் பயிற்சித் திட்டத்திலும் சேர்ந்த இவர், ஒற்றையர் ஆட்டத்தில் கைதேர்ந்தவர்.

1973ல் 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சிங்கப்பூர் வெற்றியாளர், 1974ல் சிங்கப்பூர் ஜூனியர் ஒற்றையர் வெற்றியாளர், 1976ல் 21 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வெற்றியாளர், 1977ல் சிங்கப்பூர் ஆயுதப்படை வெற்றியாளர் எனப் பல வெற்றிகளை இவர் குவித்தார்.

கைநழுவிய வாய்ப்பும் எழுச்சியும்

ஆசியப் பூப்பந்துக் கூட்டமைப்புப் போட்டிகளுக்கான உள்ளூர்த் தேர்வுச் சுற்றுகளில் மூன்றாம் நிலையில் வந்து தகுதிபெற்றும், கடைசி நிமிடத்தில் தனக்குப் பதிலாக இரட்டையர் விளையாட்டாளர் ஒருவர் போட்டிக்கு அனுப்பப்பட்டதால் திரு தர்மராஜா பெரிதும் ஏமாற்றமடைந்தார்.

“முதல் நான்கு நிலைகளில் வருவோரே போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர் எனக் கூறியிருந்தனர். அவ்வளவு பயிற்சி செய்தும் தகுந்த பலன் கிடைக்கவில்லையே என ஏமாற்றமடைந்தேன். அதனால் பூப்பந்து விளையாட்டிலிருந்து விலகினேன்,” என்றார் இவர்.

பாதுகாவல் அதிகாரியாகவும் பின்னர் ‘கேட்டர்பில்லர்’ நிறுவனத்தின் விநியோகத் தொடரிலும் பணியாற்றி வந்தார் திரு தர்மராஜா. அப்படியே ஆண்டுகள் பறந்தோடின. நாளிதழில் தன்னைப் பற்றிய செய்தி வெளியானபோதுதான் பூப்பந்துமீது இவருக்கு மீண்டும் ஆர்வம் எழுந்தது.

“அந்தச் செய்தியாளரால் என் வாழ்வே மாறிவிட்டது. இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எட்டு ஆண்டுகளாக ஜூரோங் வெஸ்ட் தொடக்கப்பள்ளிக்கு நான் பயிற்றுவிப்பாளராக இருந்துள்ளேன். மூன்று ஆண்டுகளில், நான் மாணவர்களை மேற்கு வட்டார தேசியப் போட்டியில் வெற்றிக்கு இட்டுச் சென்றேன். அதுவே என் மிகப் பெரிய சாதனை,” என்றார் திரு தர்மராஜா.

மனைவி பக்கபலம்

அந்த 20 ஆண்டுகளில், இவரை மீண்டும் பூப்பந்து விளையாடும்படி மனைவி செல்வராணி பலமுறை தூண்டினார்.

கணவர் தர்மராஜா கந்தையாவுடன் திருவாட்டி செல்வராணி நாதன்.
கணவர் தர்மராஜா கந்தையாவுடன் திருவாட்டி செல்வராணி நாதன். - படம்: ரவி சிங்காரம்

“அவர் எவ்வளவு திறன்மிக்கவர் என நான் நிறைய கேள்விப்பட்டுள்ளேன்,” என்றார் திருவாட்டி செல்வராணி.

தன் கணவருக்கு மேலும் உந்துதலளிக்க, எஸ்பிஎச் ஊடக நிறுவனத்துக்குப் பலமுறை சென்று அவரைப் பற்றி வெளியான பழைய செய்திகளைத் திருவாட்டி செல்வராணி தேடி எடுத்தார்.

தன் கணவரின் ஒவ்வொரு பயிற்சிக்கும் தவறாமல் அவருடன் சென்று, சிறுவர்களைப் பார்த்துக்கொள்ளும் திருவாட்டி செல்வராணி, சொந்த வர்த்தகத்தையும் நிர்வகிக்கிறார்.

அதிகச் சிறகுப்பந்துகளை ஒரே நேரத்தில் கையில் ஏந்துவதற்கான உத்தியையும் தன் கணவருக்காக அவர் உருவாக்கியுள்ளார். “அவருக்கு 70 வயதானாலும் பூப்பந்து என்றால் உயிர். அவ்வளவு உற்சாகத்துடன் கற்பிப்பார். அவரது வயதைக் கருதி நான்தான் அவரைக் கட்டுப்படுத்தவேண்டும்,” என்றார் திருவாட்டி செல்வராணி.

குறிப்புச் சொற்கள்