ஜூலை 27ஆம் தேதி நடைபெற்ற தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தின் ஒளவையார் விழாவில், திருமதி புஷ்பலதா நாயுடுவின் சேவைகளையும் தமிழ்த் தொண்டினைப் போற்றி அவருக்கு இவ்வாண்டின் ஔவையார் விருது வழங்கப்பட்டது.
தமிழின் பெருமைகளையும் தமிழர்கள் தமிழ் பேச வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அடுத்த தலைமுறைக்குத் தமிழைக் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தையும் கழகத்தின் தலைவர் திரு ஹரிகிருஷ்ணன் முத்துசாமி தமது வரவேற்புரையில் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ரஸ்வானா பேகம் அப்துல் ரஹீம் உரை வழங்கினார். பின்னர், போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட மழலையர், பாலர் பள்ளி மாணவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.
ஜூலை 14ஆம் தேதி உமறுப்புலவர் அரங்கத்தில் மாணவர்க்கான போட்டிகள் நடத்தப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட செய்யுள்களையும் பாடல்களையும் சிறப்பாக வெளிப்படுத்திய சிறார்கள் பரிசுக்குத் தேர்வுபெற்றனர்.
தொடர்ந்து ஔவையார் விருதைப் பெற்ற திருமதி புஷ்பலதா நாயுடு உரை ஆற்றினார்.
சிறப்புப் பேச்சாளர் சுசித்ரா ஹரிகதா தமது சிறப்புரையில் தமிழின் பெருமையையும் தமிழ் ஒளவையாரின் உயர்வையும் எடுத்தியம்பினார். ஒவ்வொரு விளக்கத்திற்கும் ஒரு பாடல் எனப் பார்வையாளர்களை மகிழ்வித்தது இவருடைய திறன் வாய்ந்த பேச்சு.

