குடும்பப் பிணைப்பைக் கொண்டாடிய இரவு விருந்து நிகழ்ச்சி

குடும்பப் பிணைப்பைக் கொண்டாடிய இரவு விருந்து நிகழ்ச்சி

3 mins read
599561c9-dfe8-4005-a607-309253700906
மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவும் சிங்கப்பூர்ப் பொதுமக்கள் சங்கமும் இணைந்து ‘நம்ம குடும்பம்’ குடும்ப தின விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. - படம்: மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு

குடும்ப உறவுகளின் பலத்தைக் கொண்டாடும் விதமாக ஒரு சிறப்பு இரவு விருந்து நிகழ்ச்சிக்கு அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவும் சிங்கப்பூர்ப் பொதுமக்கள் சங்கமும் (CAS) இணைந்து ஏற்பாடு செய்த ‘நம்ம குடும்பம்’ குடும்ப தின விருந்து சனிக்கிழமை (ஜூலை 18) விமரிசையாக நடைபெற்றது.

சாஃப்ரா சுவா சூ காங்கில் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 400 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினராக பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா கலந்துகொண்டார்.

‘நம்ம குடும்பம்’ குடும்ப தின விருந்து நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 400 பேர் கலந்துகொண்டனர்.
‘நம்ம குடும்பம்’ குடும்ப தின விருந்து நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 400 பேர் கலந்துகொண்டனர். - படம்: மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு

அன்பு, மகிழ்வு, இணக்கம் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு அமைந்த இந்த இரவு நேர விருந்து, குடும்பத்தினரை ஒன்றிணைக்கும் தளமாக விளங்கியது.

தலைமுறைகளைக் கடந்து குடும்பங்களை ஒன்றிணைக்கும் உன்னத நோக்கத்துடன் சிங்கப்பூர்ப் பொதுமக்கள் சங்கம் கடந்த 20 ஆண்டுகளாக நடத்திவரும் குடும்ப தின நிகழ்ச்சிகளின் 20ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும் இந்தக் கொண்டாட்டம் அமைந்தது.

குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்குச் சமூகக் குழுக்கள், பணியிடங்கள், பங்காளிகள், தனிமனிதர்கள் என அனைவரின் கூட்டு முயற்சி தேவை என்று தமது சிறப்புரையில் குமாரி இந்திராணி குறிப்பிட்டார்.

சிறப்பு விருந்தினராகப் பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினராகப் பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா கலந்துகொண்டார். - படம்: மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு

“குடும்பங்கள் தொடர்ந்து செழிக்கக்கூடிய சூழலை உருவாக்குவதில் ஒவ்வொருவரும் தங்களது பங்கை ஆற்ற வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

வாழ்க்கை மிகவும் பரபரப்பாக இயங்கும் தற்போதைய காலகட்டத்தில், ஒன்றாக அமர்ந்து உண்பது, விளையாடுவது, மனம்விட்டுப் பேசுவது ஆகியவை குடும்பப் பிணைப்பை வலுப்படுத்த மிகவும் அவசியமானவை என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“எங்கள் செய்திப் பிரிவின் பணிகள் நாங்கள் சேவை செய்யும் சமூகத்தில் வேரூன்றியுள்ளன. செய்திகளின்வழி நேயர்களின் கதைகளையும் அக்கறைகளையும் எதிர்பார்ப்புகளையும் நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம்,” என்றார் மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவுத் தலைவர் ந.குணாளன்.

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவுத் தலைவர் ந.குணாளன்.
மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவுத் தலைவர் ந.குணாளன். - படம்: மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு

அதையும் தாண்டி, குடும்பங்களை நேரடியாக ஈடுபடுத்த ‘நம்ம குடும்பம்’ நிகழ்ச்சி தங்களுக்கு ஒரு சிறப்பான வாய்ப்பை அளித்துள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

“பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த குடும்பங்கள் தங்களது ஒற்றுமையையும் பிணைப்பையும் வலுப்படுத்திக்கொள்ளும் ஒரு வருடாந்தர ஒன்றுகூடலாகவே இந்தக் குடும்ப தின நிகழ்ச்சி திகழ்கிறது,” என்று சிங்கப்பூர்ப் பொதுமக்கள் சங்கத்தின் தலைவர் எம்.பி.செல்வம் கூறினார்.

சிங்கப்பூர் பொதுமக்கள் சங்கத்தின் தலைவர் எம்.பி. செல்வம்.
சிங்கப்பூர் பொதுமக்கள் சங்கத்தின் தலைவர் எம்.பி. செல்வம். - படம்: மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு

விருந்தினர்களைப் பரவசப்படுத்தும் வகையில் பல அங்கங்களுடன் நிகழ்ச்சி களைகட்டியது. உள்ளூர் இசைக்குழுவான ‘ரீ இன்கார்னேஷன்’ படைத்த நேரடி இசை நிகழ்ச்சியும் காயத்ரி நடனப் பள்ளியின் நடனப் படைப்புகளும் அனைவரையும் கவர்ந்தன.

விருந்தினர்களுக்குச் சுவையான உணவுகளுடன் அதிர்ஷ்டக் குலுக்கில் பல பரிசுகளும் காத்திருந்தன. உள்ளூர்க் கலைஞர் தவநேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

“நாங்கள் 14 பேர் புக்கிட் மேராவிலிருந்து இந்த நிகழ்ச்சியைக் கொண்டாட ஒன்றாக வந்தோம். எங்களுக்கு இந்த வருடாந்தர நிகழ்ச்சி மிகவும் பிடிக்கும். இசை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் அனைத்தையும் ரசித்து மகிழ்ந்தோம்,” என்று விருந்தினர்களில் ஒருவரான திருவாட்டி ராஜேஸ்வரி கூறினார்.

“இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் என் நண்பர் குழுவோடு இணைந்து ஆதரவு கொடுப்பேன். இங்கு நான் சந்திப்பவர்கள் எல்லாரும் என்னுடைய பழைய நண்பர்கள். ஒரே இடத்தில் குடியிருந்த அவர்களை மீண்டும் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று மற்றொரு விருந்தினரான திரு ராஜா குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்