தரத்தில் சமரசம் இல்லை: தாதியரின் தொழில் முனைவு

2 mins read
13ce6da6-9971-4b01-b90a-47234b6fa1a3
வீட்டில் தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய். - படம்: கோகோ அண்ட் டிவா
multi-img1 of 2

வீட்டிலிருந்தே சுத்தமான தேங்காய் எண்ணெய்யைத் தயாரித்து விற்று ஒரு சிறுதொழிலை நடத்தி வருகிறார் புவனேஸ்வரி செல்வம், 40.

தாதியராகப் பணிபுரிந்து வரும் அதே நேரத்தில், ‘கோகோ அண்ட் டிவா’ (COCOandDIVA) என்ற நிறுவனத்தின் மூலம் தன் எண்ணெய் வியாபாரத்தையும் வளர்த்து வருகிறார் இவர்.

ஒவ்வொரு தேங்காயையும் கவனமாக தேர்வு செய்வதிலிருந்து, எண்ணெய்யாகத் தயாரித்து, அதனை தனித்துவமான கண்ணாடிப் போத்தல்களில் நிரப்பும் வரை அனைத்து வேலைகளையும் தாமே செய்கிறார் புவனேஸ்வரி.

‘கோகோ அண்ட் டிவா’ நிறுவனத்தின் ஆரம்ப நாட்கள்

தன் பாட்டி, ஞாயனம்பாள், 87, கற்றுக் கொடுத்த செய்முறையைப் பின்பற்றி தேங்காய் எண்ணெய் தயாரித்து உபயோகித்தபோது தலைமுடியை நன்றாகப் பராமரிக்க முடிகிறது என்பதை உணர்ந்தார் புவனேஸ்வரி.

தான் அடையும் பயனை மற்றவர்களோடு பகிர்ந்து, தன் நண்பர்களுக்கும் எண்ணெய்யை தயாரித்து கொடுக்க முற்பட்ட நிலையில் தான், ‘கோகோ அண்ட் டிவா’ எண்ணெய் வியாபாரம் பிறந்தது.

2019ல் பல்துறைத் தொழிற்கல்லூரியில் பட்டயப் படிப்பை முடித்த பிறகு, 2020ல் இந்த வியாபாரத்தை முறையாகத் தொடங்கினார் புவனேஸ்வரி.

பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு படித்துக்கொண்டிருந்த நேரத்திலும், நண்பர்களின் உதவியோடு அவருக்கு இருந்த நேரத்தில் இத்தொழிலை வளர்த்து வந்தார்.

தேவைப்படும் கடின உழைப்பு

சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையின் உதவியுடன் பட்டப் படிப்பை முடித்து, கடந்த 3 ஆண்டுகளாக தாதியாகப் பணியாற்றி வருகிறார் புவனேஸ்வரி. மீதமிருக்கும் நேரத்தில், அனைத்து செயல்பாடுகளையும் இவர் தன்னிச்சையாக சமாளித்தும் வருகிறார்.

“தேங்காய்களை மொத்தமாக வாங்கும்போது தரம் இருப்பதில்லை என்பதால் ஒவ்வொரு தேங்காயையும் கவனமாகத் தேர்வு செய்து வாங்குவேன். தரமில்லாத தேங்காயில் தயாரிக்கப்படும், எண்ணெய் பழுப்பு நிறத்திற்கு மாறிவிடும்,” என்றார் புவனேஸ்வரி.

140ml எண்ணெயை தயாரிக்க, குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படாத கிட்டத்தட்ட 5 புதிய தேங்காய்கள் தேவைப்படுகின்றன. சுமார் எட்டு மணி நேரத்திற்கு, தண்ணீர் படாமல் பதமாகவும் கவனமாகவும் எண்ணெய்யை காய்ச்ச வேண்டும்.

வாடிக்கையாளர்களின் உளமார்ந்த ஆதரவு

“அதிக சோர்வு ஏற்படும் நேரங்களிலெல்லாம் என்னை தொடர்ந்து ஊக்குவிப்பது என் வாடிக்கையாளர்களின் கருத்துகள்தான்” என தன் தொடர் முயற்சிக்குப் பின் இருக்கும் காரணத்தை விவரித்தார் இவர்.

“இயற்கையான பொருள்களைக் கொண்டு சொந்தமாக வீட்டில் தயாரிக்கப்படும் எண்ணெய் என்பதால் எனக்கு இதில் நம்பகத்தன்மை அதிகம். இந்த தரமிக்க பொருளை நான் தொடர்ந்து உபயோகித்து வருகிறேன்” என்றார் பாரதி, 53.

தான் எதிர்கொண்ட சிகிச்சைக்குப் பிறகு, தன் தலைமுடியைப் பராமரிக்க ஓர் ஆண்டாக ‘கோகோ அண்ட் டிவா’ தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தி வருகிறார் அவர்.

தன் பேத்தி பிறந்ததிலிருந்து 3 ஆண்டுகளாக இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதாகக் கூறினார் குணசுந்தரி, 69.

“உடல் அரிப்புகள், கால் வலி, கொசுக் கடி, போன்ற சிக்கல்களுக்கும் இந்த எண்ணெய்யை மருந்தாக பயன்படுத்துவோம்,” என்றார் அவர்.

மேலும் வழிகாட்டுதலும் ஆதரவும் இருந்தால், வியாபாரத்தை விரிவுபடுத்தி தனியாக ஒரு கடையைத் திறக்க வேண்டும் என்பதே புவனேஸ்வரியின் விருப்பம்.

குறிப்புச் சொற்கள்