தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை

5 mins read
70f0ec2d-9a5f-47ce-b2bd-c82c6146f3bf
இலக்கை எட்ட எந்தக் குறைபாடும் தடையன்று என்பதைத் தொடர்ந்து நிரூபித்துவரும் நாடகக் கலைஞர் ரமே‌ஷ் மெய்யப்பன். - படம்: ஆர்ட்ஸ் ஹவுஸ் லிமிட்டெட்

மேடை நாடகங்கள் அனைவருக்குமானதாக மாறி வந்தாலும், 2025ஆம் ஆண்டில்கூட செவித்திறன் குறைபாடு ஒரு சிக்கலாகப் பார்க்கப்படுவது வேதனை அளிப்பதாகக் கூறுகிறார் நாடக இயக்குநரும் கலைஞருமான திரு ரமே‌ஷ் மெய்யப்பன்.

செவித்திறன் குறைபாடு உடையவரும் வாய் பேச இயலாதவருமான ரமே‌ஷ் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாடக உலகில் இயங்கி வருகிறார். பெரும்பாலும் காட்சிக்கூறுகள் வழியே கதை சொல்லும் பாணியை அவர் கடைப்பிடிக்கிறார்.

“நாடகந்தான் என் தொழில் என நான் சிந்தித்து முடிவெடுக்கவில்லை. சிறு வயதிலிருந்தே நான் செய்ததெல்லாம் நாடகம் தொடர்பானதுதான். காலப்போக்கில் நாடகம் என் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்டது,” என்கிறார் ரமே‌ஷ்.

சிறு வயதிலேயே ‘ஹாய் தியேட்டர்’, ‘டிராமா பிளஸ் ஆர்ட்ஸ்’ உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டதாகக் கூறிய இவர், தனது திறமையை மெருகேற்றவும் மேம்படுத்திக் கொள்ளவும் நாடகக் கலையில் இளங்கலைப் படிப்பில் சேர்ந்தார்.

தொடர்ந்து, தேசியக் கலை மன்றத்தின் ஆதரவுடன் (Shell/ NAC Scholarship) லிவர்பூல் நிகழ்த்துகலைக் கழகத்தில் (Liverpool Institute for Performing Arts) சேர்ந்து மேற்படிப்பை முடித்தார்.

ஏறத்தாழ 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று வெவ்வேறு கதைகளைப் படைத்துள்ள இவர், பொம்மலாட்டம், மாயத்தோற்றம், கோணங்கிக் கூத்து (Buffoon) ஆகிய காட்சிக்கூறுகளைத் தமது நாடகத்தில் பயன்படுத்துகிறார்.

“அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தின் தேவையை நான் நன்கறிவேன். அதனாலேயே என் நாடகத்தில் காது கேளாதோர் மட்டுமன்றி, அனைவருக்கும் புரியும் வகையில் அமைந்த காட்‌சிகளைப் பயன்படுத்தி வந்தேன்,” என்று ரமேஷ் சொன்னார்.

“எல்லாத் தரப்புப் பார்வையாளர்களுக்குமான நாடகமொழியை உருவாக்க வாய்ப்பு கிடைத்தது நல்ல அனுபவம். ஆனால், ஒரு கட்டத்தில் எனது முதன்மை மொழியான சைகைமொழிக்கு நானே முக்கியத்துவம் தராததை உணர்ந்தேன்,” என்றார் இவர்.

அதனால், இப்போதெல்லாம் தமது நாடகங்களில் சைகைமொழிக்கும் இவர் இடமளித்து வருகிறார்.

“எனது நாடகங்களான ‘லவ் பியாண்ட்’, ‘லியர்’ ஆகியவற்றில் ஒலி வசனங்களும், சைகைமொழி வசனங்களும் கலந்திருக்கும். பொதுவாக செவித்திறன் குறைபாடுள்ளோர் மேடைச் சூழல், அமைப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு வசனங்களைப் புரிந்துகொள்வர். அதேபோல சைகை மொழி புரியாதோர் மேடைச் சூழலின் உதவியுடன் புரிந்துகொள்ளலாம்,” என்று தெரிவித்தார்.

மேலும், தொழில்நுட்பம் வள்ர்ந்து வரும் சூழலில், மேடை நாடகங்களை எல்லார்க்கும் ஏற்றதாக்கும் வழிகள் ஆராயப்பட வேண்டும் என்று ரமேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

“விளக்கவரி மட்டுமிமன்றி, பல புத்தாக்கங்களையும் புகுத்த முடியும். கேட்க முடியாத ஒலிகளைக்கூட உணர வைக்கும் தொழில்நுட்பங்களைச் சில ஒலிக்கலைப் பொறிஞர்கள் உருவாக்கத் தொடங்கியுள்ளனர்,” என்றும் சுட்டிக்காட்டினார்.

உலக அளவில் கலைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்து வருவதாகக் கூறும் இவர், “வாய்ப்புகளை யாரும் உருவாக்கித் தருவதில்லை. செவித்திறன் குறைபாடு கொண்ட சிங்கப்பூர் இந்தியக் கலைஞர்களுக்கு என தனிப்பட்ட வாய்ப்புகள் இருக்கவில்லை. எனக்கான வாய்ப்புகளை நானே உருவாக்கிக்கொண்டேன்,” என்றும் சொன்னார்.

தற்போது ஸ்காட்லாந்தில் வசித்துவரும் ரமேஷ், சிங்கப்பூர், ஸ்காட்லாந்து என இரு நாடுகளிலும் தமக்குத் தேவையான ஆதரவுகள் கிடைத்தது பெரும்பேறு என்றார்.

குறைந்த பிரதிநிதித்துவம் கொண்ட சமூகத்திலிருந்து வரும் கலைஞர்கள் சந்திக்கும் சவால்கள் அதிகம் என்றும் ஆனால், விடாமுயற்சியுடன் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதே தமது அறிவுரையாக இருக்கும் என்றும் சொன்னார் ரமே‌ஷ்.

ஷேக்ஸ்பியரின் பிரபல நாடகமான ‘கிங் லியரின்’ சமகால மறுகற்பனை நாடகமான ‘லியர்’ எனும் மேடை நாடகத்தைச் சிங்கப்பூரில் இவர் அரங்கேற்றவிருக்கிறார்.

சிங்கப்பூர் அனைத்துலகக் கலைத் திருவிழாவையொட்டி, இவ்வாண்டு மே 23, 24, 25ஆம் தேதிகளில் சிங்கப்பூர்க் கலைப் பள்ளியில் (சோட்டா) இந்நாடகம் நடைபெற உள்ளது.

“என் படைப்புகளைச் சிங்கப்பூர்ப் பார்வையாளர்கள்முன் படைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. அவர்கள் எப்போதும் என்னை வரவேற்பதாகவே உணர்கிறேன்,” என்று மலர்ந்த முகத்துடன் கூறினார் ரமே‌ஷ்.

ஒன்றிணைவும் ஒத்துழைப்பும் நிகழ்த்தும் விந்தைகள்

ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கலைஞர் ரமே‌ஷ் பணிக்கர்.
ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கலைஞர் ரமே‌ஷ் பணிக்கர். - படம்: ஆர்ட்ஸ் ஹவுஸ் லிமிட்டெட்

பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் சேர்ந்தால் விளையும் நன்மைகளுக்கு அளவில்லை என நம்புகிறார் கலைஞர் ரமே‌ஷ் பணிக்கர்.

மேடை நாடக நடிப்பு, எழுத்து, நடனத் தயாரிப்பு என தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகத் துறையில் இயங்கிவரும் இவர், சிங்கப்பூர் அனைத்துலகக் கலைத் திருவிழாவில் ‘காலனி’ எனும் நடன நாடகத்தை வழங்கவுள்ளார்.

எறும்புக் காலனியின் அமைப்பை மையமாகக் கொண்டு இந்நாடகத்தை உருவாக்கியதாகக் கூறிய அவர், நடனம், இசை, திரைக்காட்சி என மூன்று கூறுகள் மூலம் கருத்துகளை முன்வைக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

“எறும்புகள் ஒரு படையாக வாழும். அவற்றில் எதற்கும் குறிப்பிட்ட பாத்திரம் மட்டும் கிடையாது. தேவைக்கேற்றவாறு பணியாற்றும். ஓர் ஊழியர் எறும்பு, தேவை ஏற்பட்டால் சிப்பாய் எறும்பாக மாறும். இதனைச் சமூகத்தின் பார்வைக்கு எடுத்துச் செல்ல விரும்பினோம்,” என்றார் ரமேஷ் பணிக்கர்.

“அதேபோல, ஓர் ஆற்றைக் கடக்கவேண்டியிருந்தால் எறும்புகள் பாலம் அமைத்து பிற எறும்புகள் செல்ல வழியமைக்கும். அவற்றில் சில அந்நேரத்தில் உயிரிழக்க நேரிடுவதும் உண்டு,” என்றும் இவர் சொன்னார்.

மனிதருள் ஒருவரைவிட ஒருவர் எவ்வகையிலும் உயர்ந்தவர் இல்லை என்பதற்கும் எறும்புக் காலனிகள் சான்றாக விளங்குகின்றன என்றும் இவர் குறிப்பிட்டார்.

கடந்த 1974ஆம் ஆண்டு உயர்நிலை இரண்டாம் வகுப்பில் பயின்றபோது தொடங்கிய மேடைப் பயணம், படிமலர்ச்சி (evolution) பெற்று இப்போதும் தொடர்வதாகச் சொன்ன ரமேஷ் பணிக்கர், நாடக உலகம் கடந்த 50 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளதையும் சுட்டினார்.

“கலைத்துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைவு என்று பலரும் சொல்வதுண்டு. ஆனால், கலைஞர்கள் தங்களால் இயன்றவற்றைச் சிறப்பாகச் செய்துவிட்டு, பின்னர் சார்புடைய அமைப்புகள், தனிமனிதர்கள், புரவலர்களை நாடவேண்டும். அப்போதுதான் இது ஒரு சமூகப் பங்களிப்பாக மாறும்,” என்றும் இவர் வலியுறுத்தினார்.

படைப்பாளிகளின் தொழில்நுட்பப் பயன்பாடுகள் குறித்துப் பேசிய ரமேஷ் பணிக்கர், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தீ போன்றது - ஒரு நல்ல ஊழியர், மோசமான முதலாளி - என்றும் கருத்துரைத்தார்.

“நல்ல படைப்பாற்றல்மிக்க ஒருவர் தமது பணியை விரைவாகச் செய்யவும், பிற ஆதரவுக்கும் செயற்கை நுண்ணறிவை நாடுவது பயனுள்ளதாக இருக்கும். முற்றிலும் தொழில்நுட்பத்தாலேயே படைப்பது சாத்தியமன்று. அப்படியே சாத்தியப்பட்டாலும் சிறப்பாக அமையாது,” என்கிறார் இவர்.

நாடக உலகில் மற்றுமொரு பாணியான நடன நாடகத்தை முதன்முறையாகப் படைக்கும் இவர், மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

அனைத்துலக அளவிலிருந்து 13 நடனக் கலைஞர்கள் இணைந்து மே 30ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை இந்நாடகத்தைப் படைக்கவுள்ளனர்.

சிங்கப்பூர் அனைத்துலகக் கலைத் திருவிழா

சிங்கப்பூர் அனைத்துலகக் கலைத் திருவிழாவின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள்.
சிங்கப்பூர் அனைத்துலகக் கலைத் திருவிழாவின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள். - படம்: ஆர்ட்ஸ் ஹவுஸ் லிமிட்டெட்

ஆறு தலைப்புகளின்கீழ் பதினைந்து உள்ளூர்க் கலைஞர்களின் கைவண்ணத்தில் அமைந்த கலைப்படைப்புகளைக் காட்‌சிப்படுத்த உள்ளது சிங்கப்பூர் அனைத்துலகக் கலைத் திருவிழா.

தேசியக் கலை மன்றத்தின் சார்பில் ஆர்ட்ஸ் ஹவுஸ் லிமிட்டெட் ஏற்பாடு செய்துள்ள இக்கலைத் திருவிழா ‘முன்னெப்போதும் இல்லாத அளவு’ (More Than Ever) எனும் கருப்பொருளில் மே 16ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

சிங்கப்பூரின் பல்வேறு தரப்பினருக்கும் கலைப் படைப்புகளைக் கொண்டுசேர்க்கும் வகையில் பிடோக் டவுன் சதுக்கத்தில் இவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. இவ்வாண்டு ‘லிட்டில் சிஃபா’ எனும் குடும்பம், குழந்தைகள் ரசிக்கும் வண்ணம் அமைந்த நிறுவல்கள் மீண்டும் இடம்பெறவுள்ளன. இது சிறு குழந்தைகளிடையே கலைகளின் மீதான ரசிப்புத்தன்மையைத் தூண்ட உதவும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.

குறிப்புச் சொற்கள்