மனைவியின் மறைவிலும் மனமுருக இறைப்பணி

5 mins read
எல்லாப் புகழும் மறைந்த மனைவிக்கே அர்ப்பணம்
b99770a6-4816-4213-b7ab-d1b957adcfcc
அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயத்துக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரதம் இழுத்துவரும் திரு ராஜாவுக்கு (இடம்), ஆலயத்தின் சார்பில் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் பிப்ரவரி 22ஆம் தேதி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 2

தம் மனைவி மல்லிகா மரணப் படுக்கையில் இருந்தபோதுகூட ரதம் இழுக்கச் சென்றார் ‘ராஜா’ என அழைக்கப்படும் ராஜேந்திரன் கிருஷ்ணசாமி, 66.

“2023ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதியன்று தீமிதிக்காக ரதம் இழுக்க வேண்டியிருந்தது. ஆனால், என் மனைவி மருத்துவமனையில் இருந்தார். இருந்தாலும், ரதம் இழுத்து முடித்துவிட்டுத் தன்னைப் பார்க்கவரச் சொன்னார்.

“ரதம் இழுக்கத் தொடங்கவிருந்தபோது என் மனைவி தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிர்க்காப்பு மருத்துவ ஆதரவுடன் இருப்பதாகச் செய்தி வந்தது. நான் மனமுடைந்துபோனேன். ஆனால், மனைவியின் ஆசைப்படி ரதம் இழுக்கும் பணியை முடித்துவிட்டு அவரைப் பின்னிரவு ஒரு மணிக்குப் பார்க்கச் சென்றேன்.

“அதுவரை அசைவின்றி இருந்த என் மனைவி, நான் வந்ததும் ‘ஆ’ என்று குரல் எழுப்பினார். எனக்காகக் காத்திருந்தவர் அதன்பின்பு உயிரை விட்டார்,” எனக் கண்ணீர் ததும்ப நினைவுகூர்ந்தார் திரு ராஜா.

தமக்கு இன்று கிடைக்கும் பாராட்டுகள் அனைத்தும் தம் மனைவிக்கே உரியவை என்று திரு ராஜா கூறினார்.

ஆக அதிகக் காலம் ரதம் இழுத்த பெருமை

1980களிலிருந்து ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரிலுள்ள இந்துக் கோயில்கள் பெரும்பாலானவற்றுக்கும் கிம் யாம் சாலை பெளத்த கோயிலுக்கும் தமது இழுவை வாகனத்தால் ரதம் இழுத்துவந்துள்ளார் திரு ராஜா.

சிங்கப்பூரிலேயே ஆக அதிகக் காலம் இத்தனை கோயில்களுக்கு வாகனத்தால் ரதம் இழுத்த பெருமை திரு ராஜாவைச் சேரும். அதற்கு அவருடைய மனைவியின் ஆதரவு இன்றியமையாததாக இருந்தது.

“தந்தை ரதம் இழுக்கும்போது ரதம் எங்கெல்லாம் செல்கிறதோ அம்மாவும் எங்களை வாகனத்தில் ஓட்டிச் செல்வார்,” என்றார் திரு ராஜாவின் மூத்த மகள் சரஸ்வதி, 40.

திரு ராஜா பற்றி 2010ல் வெளியான தமிழ் முரசு செய்தி.
திரு ராஜா பற்றி 2010ல் வெளியான தமிழ் முரசு செய்தி. - படம்: ரவி சிங்காரம்

திருமணத்திற்குப் பிறகு, திரு ராஜாவும் மனைவி மல்லிகாவும் ‘ராஜா டோவிங் சர்விசஸ்’, ‘ராஜா டெம்பிள் சர்விஸ்’ ஆகிய இரு நிறுவனங்களையும் இணைந்து தொடங்கினர்.

தொடக்கத்தில் திரு ராஜா வாகனம் ஓட்ட, திருவாட்டி மல்லிகா நிறுவனம் சார்ந்த அலுவலகப் பணிகளைப் பார்த்துக்கொண்டார். கணவர் அளித்த ஊக்கத்தில் மூன்றாம், நான்காம் வகுப்பு வாகனங்கள், டாக்சி ஓட்டும் உரிமங்களைப் பெற்ற திருவாட்டி மல்லிகா, 2000 முதல் 2022 வரை இழுவை வாகனப் பணியில் ஈடுபட்டார்; ரதத்தை இழுக்கும் அல்லது அதைப் பின்தொடரும் வாகனத்தையும் ஓட்டினார்.

இழுவை வாகனச் சேவை நிறுவனத்தைத் திரு ராஜாவுடன் இணைந்து நடத்திவந்த அவருடைய மனைவி மல்லிகா.
இழுவை வாகனச் சேவை நிறுவனத்தைத் திரு ராஜாவுடன் இணைந்து நடத்திவந்த அவருடைய மனைவி மல்லிகா. - படம்: ராஜா
மனைவி மல்லிகாவுடன் திரு ராஜா.
மனைவி மல்லிகாவுடன் திரு ராஜா. - படம்: சரஸ்வதி ராஜேந்திரன்
ஆண்களே பெரும்பாலும் ஈடுபடும் தொழிலில் பெண்களுக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த திருவாட்டி மல்லிகா பற்றி 2003ல் வெளியான ‘தமிழ் முரசு’ செய்தி.
ஆண்களே பெரும்பாலும் ஈடுபடும் தொழிலில் பெண்களுக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த திருவாட்டி மல்லிகா பற்றி 2003ல் வெளியான ‘தமிழ் முரசு’ செய்தி. - படம்: ரவி சிங்காரம்

நெடுநாள் பணிக்குத் தகுந்த அங்கீகாரம்

தமது செம்மையான கோயில் பணிக்காக ராஜா-மல்லிகா இணையர் பல பாராட்டுகளையும் பெற்றுள்ளனர்.

அவ்வகையில், சனிக்கிழமை பிப்ரவரி 22ஆம் தேதி அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்தர ரத ஊர்வலத்தில் 20 ஆண்டுகால கோயில் பணிக்காகத் திரு ராஜாவுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆலயத்தின் சார்பாக, மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் சான்றிதழை வழங்கினார்.

“திரு ராஜா ஒரு நல்ல மனிதர். பொதுத் தொண்டில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உள்ளது. அன்றிலிருந்து இன்றுவரை திரு ராஜா ஆண்டுதோறும் நம் கோயிலுக்காக ரதம் இழுத்துவந்துள்ளார்,” என்றார் ஆலயத்தின் செயலாளர் ஏ ஜெ ரவி.

அதே நாளன்று (பிப்ரவரி 22) அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில், தைப்பூசம் 2025 ஏற்பாட்டுக் குழு (செட்டியார்கள் கோயில் குழுமம், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், இந்து அறக்கட்டளை வாரியம்), இவ்வாண்டு தைப்பூசத் திருநாளுக்கு ஆற்றிய பணிக்காக திரு ராஜாவுக்குப் பாராட்டுக் கேடயம் ஒன்றை வழங்கியது.

தைப்பூசம் 2025 ஏற்பாட்டுக் குழு (செட்டியார்கள் கோயில் குழுமம், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், இந்து அறக்கட்டளை வாரியம்) சார்பாகத் திரு ராஜாவுக்குப் பாராட்டுக் கேடயத்தை வழங்குகிறார் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் தலைவர் செல்வம் (இடம்).
தைப்பூசம் 2025 ஏற்பாட்டுக் குழு (செட்டியார்கள் கோயில் குழுமம், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், இந்து அறக்கட்டளை வாரியம்) சார்பாகத் திரு ராஜாவுக்குப் பாராட்டுக் கேடயத்தை வழங்குகிறார் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் தலைவர் செல்வம் (இடம்). - படம்: லாவன்னியா ராஜேந்திரன்

சீரிய பணிக்கு வித்து

தாம் பின்னிரவில் வீடு திரும்பி அடுத்த நாள் அதிகாலையிலேயே ரதம் இழுக்கச் செல்ல வேண்டியிருந்த நாள்களில் தம் மனைவி தூங்காமல் தம்மை நேரத்தோடு எழுப்பியதை திரு ராஜா நினைவுகூர்ந்தார்.

“நான் அவ்வளவாகப் படிக்கவில்லை. என் மனைவி படித்தவர். அப்பொழுதெல்லாம் ஜிபிஎஸ் இல்லை. அவர்தான் புத்தகத்தைப் பார்த்து எனக்குச் சாலை வழிகளைச் சொல்வார். மீட்புப்பணிக்காக 10 காசு தொலைபேசியைப் பயன்படுத்த அவர் நெடுஞ்சாலையைக்கூடத் தாண்டி ஓடுவார்; அப்படியொரு தைரியசாலி,” என்றார் திரு ராஜா.

சில சமயம் திரு ராஜா களைப்பாக இருந்தபோது அவரின் மனைவி இழுவைப் பணிகளுக்குச் சென்றார். காலையில் சமைத்து, பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பணியிடத்திற்குக் காலையில் சென்று, மறுநாள் காலைவரை பணியாற்றினார்.

“இதுபோன்ற விழாக்களில் நான் அணியும் சட்டையைக்கூட என் மனைவிதான் தைத்துக் கொடுப்பார்,” என நினைவுகூர்ந்தார் திரு ராஜா.

இறுதிமூச்சுவரை...

திருவாட்டி மல்லிகாவின் இறுதிச் சடங்கின்போது மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் நேரில் வந்து திரு ராஜாவுக்கு ஆறுதல் கூறினார்.

“நான் கோயிலுக்காக ரதம் இழுக்கும் பணியை இனி தொடர்வேனா என அமைச்சர் டியோ கேட்டபோது, என் இறுதிமூச்சுவரை நான் கோயிலுக்காக ரதம் இழுப்பேன் எனக் கூறினேன்,” என்றார் திரு ராஜா.

அவரது கடமையுணர்ச்சி மூத்த அமைச்சர் டியோவைக் கவர்ந்து, அவருடன் நெருங்கிய பந்தத்தை ஏற்படுத்தியது.

“கோயில் திறந்து, ரத ஊர்வலங்கள் தொடங்கியதிலிருந்தே எனக்கு திரு ராஜாவைத் தெரியும். அவர் பரந்த மனம் படைத்தவர்,” என தமிழ் முரசிடம் கூறினார் அமைச்சர் டியோ.

‘வாகனமே குலதெய்வம்’

கிட்டத்தட்ட 41 ஆண்டுகளாகக் கோயில் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் தமது இழுவை வாகனத்துடன் திரு ராஜா.
கிட்டத்தட்ட 41 ஆண்டுகளாகக் கோயில் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் தமது இழுவை வாகனத்துடன் திரு ராஜா. - படம்: சரஸ்வதி ராஜேந்திரன்

தாம் முதன்முதலில் ரதம் இழுக்கப் பயன்படுத்திய இழுவை வாகனத்தையே இன்றுவரை பயன்படுத்தி வருகிறார் திரு ராஜா.

“அது என் குலதெய்வம். 41 ஆண்டுகளாகக் கோயில் பணிகளுக்காக உழைத்துள்ளது,” என்றார் அவர். அன்று ரதம் இழுக்கச் சிரமப்பட்ட மாடுகளைக் கண்டு மனமிரங்கிய திரு ராஜா, தமது வாகனத்தின் மூலம் மாற்றத்தை உண்டாக்கினார்.

பிள்ளைகளின் துணையுடன் தொடரும் பணி

ராஜா-மல்லிகா இணையரின் கோயில் பணிக்கு அவர்களுடைய நான்கு பிள்ளைகள் சிறுவயதிலிருந்து உறுதுணையாக இருந்துள்ளனர். வாகனங்களைக் கழுவுவதிலும் ரதப் பணிக்குத் தயார்ப்படுத்துவதிலும் உதவிவந்த அவர்கள், வளர்ந்ததும் கூடுதல் பொறுப்புகளை ஏற்றனர்.

திரு ராஜா தேர் இழுக்கும்போது பிள்ளைகள் கூடவே சென்று ஆதரிக்கின்றனர். திரு ராஜாவுக்கு வயதாவதால், தற்போது பல சமயங்களில் ரதம் இழுக்கும் வாகனத்தை அவருடைய மகன் கணே‌ஷ், 35, ஓட்டுகிறார்.

“என் பெற்றோர் நேர்மையாகப் பணியாற்றுபவர்கள். அவர்களுடைய உழைப்பை அங்கீகரித்துக் கோயில்கள் விருதுகளை வழங்குவதைக் காணும்போது மனநிறைவாக உள்ளது,” என்றார் மகள் சரஸ்வதி.

முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதனின் அறிவுரை

“நமது முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதன் வீட்டிற்கு ஒருமுறை சென்றபோது அவர் ‘எதையும் எதிர்பார்த்துச் செய்யாதே’ என்ற அறிவுரையை எனக்குக் கூறினார். அதை இன்றுவரை நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம்,” என்றார் திரு ராஜா.

பலரும் தமக்குப் பலனை எதிர்பார்க்காமல் உதவியுள்ளதாக அவர் கூறினார்.

“எனக்கு முதன்முதலில் ரதம் இழுக்கும் வாய்ப்பளித்தது ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில். தொடர்ந்து மற்ற கோயில்களும் எனக்கு வாய்ப்புகள் வழங்கிவந்துள்ளன. என் வர்த்தகத்தைத் தொடங்க என் முதலாளியே கைகொடுத்தார். பல நண்பர்களும் ரதப் பணியில் உதவியுள்ளனர்,”என்று கூறியபோது, அவரது நன்றி மறவாக் குணம் வெளிப்பட்டது.

1990களில் திரு ராஜா பயன்படுத்திய வாகனங்களில் ஒன்று.
1990களில் திரு ராஜா பயன்படுத்திய வாகனங்களில் ஒன்று. - படம்: சரஸ்வதி ராஜேந்திரன்
ரதம் இழுக்கும் அக்கால நினைவுகளை நினைவுகூர்ந்த திரு ராஜா.
ரதம் இழுக்கும் அக்கால நினைவுகளை நினைவுகூர்ந்த திரு ராஜா. - படம்: ரவி சிங்காரம்
நான் அவ்வளவாகப் படிக்கவில்லை. என் மனைவி படித்தவர். அப்பொழுதெல்லாம் ஜிபிஎஸ் இல்லை. அவர்தான் புத்தகத்தைப் பார்த்து எனக்குச் சாலை வழிகளைச் சொல்வார். மீட்புப்பணிக்காக 10 காசு தொலைபேசியைப் பயன்படுத்த அவர் நெடுஞ்சாலையைக்கூடத் தாண்டி ஓடுவார்; அப்படியொரு தைரியசாலி.
ராஜேந்திரன் கிருஷ்ணசாமி, 66
குறிப்புச் சொற்கள்
ஆலயம்வெள்ளி ரதம்மனைவி