தனி ஒருவராகப் பேரக்குழந்தைகளை வளர்த்துவரும் நூர்ஜஹான்

தனி ஒருவராகப் பேரக்குழந்தைகளை வளர்த்துவரும் நூர்ஜஹான்

3 mins read
தாய்மையின் தியாகம்: நூர்ஜஹானின் அன்றாடப் போராட்டங்கள்
615a7b44-fce3-433d-9cfe-d7207abc9cb5
(இடமிருந்து) திருவாட்டி நூர்ஜஹான் பீபி சின்னதம்பி, அவரது பேரப்பிள்ளைகள், மகள் ஜரீனா பேகம். - படம்: திருவாட்டி நூர்ஜஹான் பீபி சின்னதம்பி

வாழ்க்கைப் போராட்டங்களில் ஒருபோதும் துவண்டு போகாமல் தம் பிள்ளைகளுக்காகத் தமது கனவுகளைத் தியாகம் செய்தார் நூர்ஜஹான் பீபி சின்னதம்பி, 61.

இன்று, ஓய்வெடுக்கவேண்டிய வயதில் மீண்டும் ஒரு தாயாகப் பொறுப்பேற்று தம் பேரப்பிள்ளைகளுக்குப் பாசம், பாதுகாப்பு, நல்வழிகாட்டுதலை வழங்கி வருகிறார்.

திருவாட்டி நூர்ஜஹானுக்கு ஒரு பேத்தியும் இரண்டு பேரன்களும் உள்ளனர். அவர்களுக்கு முறையே 10, 9, 7 வயதாகிறது.

பேரப்பிள்ளைகளைக் காலையில் பள்ளிக்கு அனுப்புவதிலிருந்து அவர்களின் நலனைக் காக்கும்வரை அனைத்தையுமே செவ்வனே செய்துவருகிறார் நூர்ஜஹான்.

தமக்கு நீரிழிவு நோய் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் பம்பரமாகச் சுழன்று பேரபிள்ளைகளுக்குத் தேவையானவற்றை எந்தக் குறையுமின்றி செய்துகொடுக்கிறார் அவர்.

அவரது மகள் ஜரீனா பேகமுக்கு 40 வயது. மகள் தம்முடன் இருந்தாலும் மற்றவர்களைப் போல அவரால் இயல்பாகச் செயல்பட முடியாது.

மேலும், விஷயங்களைப் புரிந்துகொள்வதிலும் வேலைகளைச் செய்வதிலும் அவருக்கு தாமதம் ஏற்படும்.

இதனால், நூர்ஜஹான் மகளையும் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்ள வேண்டும்.

“மகளுக்கு உடல்நலம் சரியில்லாமல் உள்ளது. அவரையும் நான் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து செல்லவேண்டும். வீட்டில் என்ன நடந்தாலும் அதற்குப் பொறுப்பேற்பதும் நானே,” என்றார் நூர்ஜஹான்.

தமது மகளின் குடும்ப வாழ்க்கையில் மணமுறிவு ஏற்பட்டு மகளும், மருமகனும் மணவிலக்குப் பெறவிருக்கும் நிலையில், மகளையும் பேரப்பிள்ளைகளையும் தம்முடன் வைத்துள்ளார் திருவாட்டி நூர்ஜஹான்.

கிச்சனர் சாலையில் அமைந்துள்ள ஓரறை வாடகை வீட்டில் அவர்கள் வசித்துவருகின்றனர்.

தமது இரு மகன்களின் ஆதரவு இருந்தாலும், தன்னிகரற்ற அவரது கதை தாய்மையின் உண்மையான அர்த்தத்தை உணர்த்துகிறது. உடல்நலம் காரணமாக வேலைக்குப் போகமுடியாத சூழலில் இருக்கும் நூர்ஜஹான், அரசாங்க உதவியை மட்டுமே நம்பி உள்ளார்.

சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம், சமூக மேம்பாட்டு மன்றம் போன்ற அமைப்புகள் அவருக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இருந்தாலும், செலவு செய்யும்போது சிக்கனமாக இருக்கவேண்டும் என்பதை எப்போதும் மனத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டிய சூழல் அவருக்கு.

மாதத்திற்குக் கிட்டத்தட்ட $2,000 நிதியுதவி பெறும் நூர்ஜஹான், வீடு, மருத்துவம், பேரப்பிள்ளைகளின் கல்விச் செலவுகள் எனக் குடும்பத்தை நிர்வகிக்க அதனைப் பயன்படுத்துகிறார்.

“என் பேத்தி நீண்ட நாளாகவே ஒரு பொருள் வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தாள். அரசாங்க நிதி கிடைத்தவுடன் அதை வாங்கிக் கொடுப்பதாக அவளிடம் சொன்னேன். என்னால் இயன்றவரை பிள்ளைகளுக்குப் பிடித்தவற்றைச் செய்து கொடுப்பேன்,” என்று நெகிழ்ந்தபடி சொன்னார் நூர்ஜஹான்.

அவருக்குத் தனி ஆளாக இருந்து குடும்பத்தை நடத்துவது புதிதன்று.

திருமண வாழ்க்கை ஒரு கட்டத்தைக் கடந்த பிறகு, தாமும் தமது கணவரும் மணவிலக்குப் பெற்றதாகத் தெரிவித்த அவர், அதன் பின்னர் பல இன்னல்களைக் கடக்க வேண்டியதாயிற்று என்றார்.

ஒற்றைப் பெற்றோராக மூன்று பிள்ளைகளை வளர்த்தது மட்டுமன்றி, மணமுறிவுக்குப் பிறகு வீடு கிடைக்க அவர் நிறைய அலையவேண்டியதாக இருந்தது.

பேரப்பிள்ளைகள் தம்மை ‘அம்மா’ என்று அழைப்பதாக உணர்ச்சிபொங்கக் கூறிய நூர்ஜஹான், தமக்குப் பிறகு பேரப்பிள்ளைகளை யார் கவனித்துக்கொள்வார் என்று நினைத்து வருந்தாத நாள்களே இல்லை.

இரு மகன்களும் பேரப்பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வர் என்ற நம்பிக்கையில் இருக்கும் அவர், பேரப்பிள்ளைகளுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்