வடமேற்கு வட்டாரத்தில் சேவை வாரம்

3 mins read
8719d1e4-2b3e-4a91-b35e-4366d206a4bf
மக்களுக்கு உணவு, வீட்டுப் பொருள்களை விநியோகிக்கும் பிஎஸ்ஏ கிரெசண்ட் சிங்கப்பூர் முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள். படத்தில், பொருள்களைத் தேர்ந்தெடுக்கும் 65 வயது பிரேமா (பின்னால்). - படம்: ரவி சிங்காரம்

வாடகை வீடுகளில் தங்கும் குடும்பங்களுக்கு விலைவாசி உயர்வைச் சமாளிக்க உதவும் நோக்கத்தில், ஒவ்வொரு காலாண்டிலும் ஒருமுறை வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் ‘சேவை வாரங்கள்’ எனும் முயற்சியை நடத்திவருகிறது.

இதன்வழி, வடமேற்கு வட்டாரத்தின் வெவ்வேறு தொகுதிகளில் உணவு, சமையல், வீட்டுப் பொருள்கள் ஆகியவற்றுக்கு உதவி தேவைப்படுவோர்க்கு விநியோகிக்கப்படும். ஒவ்வொரு குடும்பமும் அதிகபட்சம் 12 பொருள்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

அவ்வகையில், ஜூன் 22ஆம் தேதியன்று ஈசூன் வட்டாரத்தைச் சேர்ந்த மொத்தம் 300 குடும்பங்களுக்கு உணவு விநியோகம் நடைபெற்றது.

ஈசூன் அவென்யூ 6ல் புளோக் 461ஏ, 461பி ஆகியவற்றில் வசிப்போர், ‘கோம்கேர்’ மூலம் உதவி பெறுவோர், ஆகியோர் உணவுப் பொருள்களைப் பெற்றனர்.

பி எஸ் அப்துல் ரகுமான் (பிஎஸ்ஏ) கிரெசண்ட் முன்னாள் மாணவர் சங்கத்தினரும் (சிங்கப்பூர்ப் பிரிவு) அவர்களுடைய குடும்பத்தினரும் இரண்டாவது முறையாக இவ்விநியோகத்தை நடத்தியுள்ளனர்.

விநியோகத்தில் கலந்துகொண்ட பிஎஸ்ஏ கிரெசண்ட் முன்னாள் மாணவர் சங்க (சிங்கப்பூர்) உறுப்பினர்கள், அவர்களின் குடும்பத்தினர்.
விநியோகத்தில் கலந்துகொண்ட பிஎஸ்ஏ கிரெசண்ட் முன்னாள் மாணவர் சங்க (சிங்கப்பூர்) உறுப்பினர்கள், அவர்களின் குடும்பத்தினர். - படம்: பிஎஸ்ஏ கிரெசண்ட் முன்னாள் மாணவர் சங்கம் (சிங்கப்பூர்)

இந்த உணவு விநியோகம் தங்களுக்கு நல்ல பயனை அளித்திருப்பதாக உணவு பெற்ற குடும்பங்கள் தெரிவித்தன. 

மகன், மகளுடன் கடந்த ஐந்தாண்டுகளாக ஈரறை வீட்டில் வசிக்கும் திருவாட்டி பு‌ஷ்பா, 62, இந்த உணவுப் பொருள்கள் அவசர காலத்துக்கு உதவும் எனக் கூறினார்.

பாலர் பள்ளி ஆசிரியராக 25 ஆண்டுகள் பணியாற்றிவந்த அவர், உடல்நலம் குன்றியபின் ஓய்வுபெற்றார். வாரத்திற்கு மூன்று நாள்கள் ரத்தச் சுத்திகரிப்புக்கு அவர் செல்லவேண்டியுள்ளது.

திருவாட்டி புஷ்பாவின் கணவர், 11 ஆண்டுகளுக்கு முன்னதாக நுரையீரல் புற்றுநோயால் உயிர் இழந்ததை அடுத்து, அவரது குடும்பம் நான்கறை வீட்டிலிருந்து ஈரறை வீட்டுக்கு மாறும் கட்டாயத்திற்கு உள்ளானது.

“வீட்டு வாடகைக்காக மாதம் $400க்கும் மேல் செலவாகிறது. நான் வேலைக்கும் செல்லாததால் இத்தகைய விநியோகங்கள் உதவியாக உள்ளன. இவற்றை வைத்து நான் என் பிள்ளைகளுடன் சுவையான கறி சமைப்பேன்,” என்று திருவாட்டி பு‌ஷ்பா கூறினார்.

வீட்டில் இருந்தபடியே பகுதிநேர வேலையைச் செய்ய திருவாட்டி பு‌ஷ்பா  விரும்புகிறார்.

ஓரறை வீட்டில் தம் கணவருடன் வசித்துவரும் மோன லிசா, 29, இன்னும் அடிக்கடி இத்தகைய விநியோகங்கள் நடைபெற்றால் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க உதவும் என்றார். “இந்த உணவு ஒரு வாரத்துக்குள் தீர்ந்துவிடும்,” என்றார்.

மோன லிசாவைப் போலவே ஓரறை வீட்டில் வசிக்கும் 65 வயது 7-11 கடை ஊழியர் பிரேமா, “சென்ற ஆண்டு வாடகை உயர்ந்தது. இப்போது மொத்தமாகவே விலைவாசி உயர்ந்துவிட்டது. இந்நேரத்தில் இத்தகைய விநியோகம் உதவுகிறது,” என்றார்.

“ஜாமியா ஆதரவற்றோர் இல்லத்துக்கு இஃப்தாருக்காகவும், நாராயண மி‌‌ஷன் முதியோர் இல்லத்துக்குத் தீபாவளிக்காகவும் நாங்கள் ஆண்டுதோரும் பல்லாண்டுகளாக உணவு ஆதரவு வழங்கிவருகிறோம்,” என்றார் பிஎஸ்ஏ கிரெசண்ட் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம் (சிங்கப்பூர்) நிர்வாக உறுப்பினர் கணே‌ஷ்.

வடமேற்கு வட்டாரத்தின் இளம் தூதர் திட்டம்வழி சில இளையர்கள் தொண்டூழியர்களாக உணவு விநியோகத்திற்கு உதவினர். அவர்களில் ஒருவர், ரீஜண்ட் உயர்நிலைப் பள்ளியைச் சார்ந்த ‌‌ஷர்வில் சொஹொனி, 15. ஒவ்வொரு வார இறுதியிலும் அவர் சேவையாற்றுகிறார்.

உதவி தேவைப்படுவோருக்கு உதவுவது, முதியோரின் வீட்டில் சாயம் பூசி அலங்கரிப்பது, தூய்மைப்படுத்துவது போன்ற பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். “எப்படிப் பரிவாக நடந்துகொள்வது, உதவி தேவைப்படுவோரை அடையாளங்காண்பது எனக் கற்றுக்கொண்டேன்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்