உடலில் பச்சை, பல சடைகள் ஒன்றாகப் பின்னிய தலைமுடி கொண்ட விசித்திரமான தோற்றத்திற்காக தாதிமைத் துறையில் பட்டயப் படிப்பை முடித்த சிவச்சந்திரன் முருகேசுவின் வேலை விண்ணப்பங்களைப் பல மருத்துவமனைகள் நிராகரித்தன.
ஆனாலும், துவண்டு போகாமல் சொந்த மருத்துவ வண்டிச் சேவையை நடத்த முடிவெடுத்த 42 வயதாகும் சிவச்சந்திரன், கடந்த 16 ஆண்டுகளாக சுயதொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
“மருத்துவமனைகள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. அதை நினைத்து வருந்தாமல் என்னால் என்ன செய்ய முடியுமோ அதை என் நிறுவனத்தில் செய்ய விரும்பினேன்,” என்றார் சிவச்சந்திரன்.
சிவச்சந்திரனின் தோற்றத்தைப் பார்க்கும்போது, அவர் தாதியாகப் பணிபுரிபவரா என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம்.
ஆனால், அவரது சேவை மனப்பான்மை கொண்ட தாயுள்ளம், அவர் வழங்கும் மருத்துவச் சேவையில் தென்படுகிறது.
இளம் வயதிலிருந்தே ஒளிரும் விளக்குகள் கொண்ட வாகனங்களை ஓட்ட வேண்டுமென்ற ஆசை சிவச்சந்திரனுக்கு இருந்து வந்தது.
பதின்ம வயதில் மருத்துவ வண்டி ஓட்டுநராகப் பணிபுரியத் தொடங்கிய சிவச்சந்திரன், ஒரு நாள் வாகனத்தில் தான் ஏற்றிச்சென்ற நோயாளி திடீரென மயங்கி விழுந்தவுடன் செய்வதறியாமல் நின்றார்.
அன்று அவர் ஒரு தாதியாக முடிவெடுத்தார்.
தொடர்புடைய செய்திகள்
‘அபெல்லா ஏஜென்சி’ எனும் அவரது நிறுவனத்தில் பல சேவைகளை நோயாளிகள் நாடலாம்.
அவசரம்/அவசரமற்ற மருத்துவ வண்டிச் சேவை, தொலை மருத்துவம், இதய இயக்க சிகிச்சை, இதயத்துடிப்பைச் சீர்செய்யும் தானியங்கிக் கருவி சேவை, வான்வழி அவசர மருத்துவ உதவிச் சேவை ஆகியவற்றை வழங்குகிறார் சிவச்சந்திரன்.
மேலும், இவரது நிறுவனம் சிங்கப்பூர் குத்துச்சண்டை சம்மேளனத்தின் அதிகாரபூர்வ மருத்துவக் குழுவாகவும் செயல்படுகிறது.
வான்வழி அவசர மருத்துவ உதவிச் சேவை
பெரும்பாலான நேரங்களில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வான்வழி அவசர மருத்துவ உதவிச் சேவை வழங்குவதைப் பற்றி விளக்கிய சிவச்சந்திரன், நோயாளியை அவரது நாட்டில் இருக்கும் மருத்துவச் சேவைக் குழுவிடம் ஒப்படைக்கும்வரை அவர்களுடன் கூடவே இருக்க வேண்டுமென்று பகிர்ந்துகொண்டார்.
ஸ்பெயின், ஆஸ்திரேலியா, இந்தியா, சீனா, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளுக்குத் தாம் சென்றுள்ளதாகக் கூறிய அவர், இச்சேவை சவால்மிக்கது என்றார்.
“முழு மருத்துவக் கருவிகள், மருந்துகள், தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளியாக இருந்தால் காற்றோட்ட இயந்திரம் ஆகியவற்றை நாங்கள் கொண்டுசெல்ல வேண்டும். நாங்கள் பயணம் செய்யும்போது பெரும்பாலான நேரங்களில் இதர பயணிகள் ஏறும் விமானத்தில்தான் செல்வோம். நோயாளியால் கூடுதல் பணம் செலவு செய்ய முடிந்தால் தனியார் விமானம் பயன்படுத்தப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.
நோயாளியை விமானத்தில் ஏற்றிச் செல்லும்போது அந்தப் பயணம் எவ்வளவு நேரம் எடுத்தாலும் சிவச்சந்திரன் தூங்காமல் நோயாளியைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்ள வேண்டும்.
தொலை மருத்துவம்
சிங்கப்பூரில் கொவிட்-19 பெருந்தொற்றின்போது தொலை மருத்துவச் சேவைகள் பிரபலமாக வலம் வரத் தொடங்கின. கொவிட்-19 சிங்கப்பூரைப் புரட்டிப்போடும் முன்னே தனது நிறுவனத்தில் தொலை மருத்துவச் சேவையை வழங்கத் தொடங்கினார் சிவச்சந்திரன்.
இதற்கு முக்கியக் காரணம், அச்சேவை நேரத்தைப் பெரிதும் மிச்சப்படுத்துவதாகக் கூறிய அவர், சுகாதார அமைச்சு தனது நிறுவனத்தைப் பாராட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
“மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் கூட்டத்தைக் குறைக்கலாம். நோய் இல்லாமல் மருத்துவரை நாடிச் செல்பவர்களுக்குத் தொலை மருத்துவம் ஒரு சிறந்த தேர்வு,” என்றார் சிவச்சந்திரன்.
அண்மையில் தொலை மருத்துவச் சேவை வழங்கிய மருந்தகம் ஒன்று அந்தச் சேவையை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காக அவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்ட செய்தி பலரின் காதுகளை எட்டியிருக்கும்.
“மருத்துவர்களில் சிலர் எளிமையான வழிகளில் பணம் ஈட்ட தொலை மருத்துவச் சேவைகளை வழங்குகின்றனர். மேலும், வேலைக்குச் செல்லாமல் எளிய முறையில் மருத்துவச் சான்றிதழ் பெற விரும்புபவர்களுக்குத் தொலை மருத்துவம் கைகொடுக்கும். ஆனால், இது சரியான வழியல்ல. குறுக்கு வழிகளைத் தேடும்போது அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டும்,” என்று சிவச்சந்திரன் விளக்கினார்.
தொலை மருத்துவச் சேவைக்காக ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 50 அழைப்புகளைப் பெறும் சிவச்சந்திரன், அவற்றில் ஒன்றைக்கூட பொருட்படுத்துவதில்லை.
“பலர் வேண்டுமென்றே தொலை மருத்துவச் சேவையைப் பயன்படுத்துவதால் எனக்கு வரும் அழைப்புகளை நான் கண்டுகொள்ள மாட்டேன். இந்தச் சேவை முறை சரியாகப் பயன்படுத்தப்பட்டால் பல நன்மைகளைக் காணலாம்,” என்று சிவச்சந்திரன் சொன்னார்.
அளப்பரிய அளவில் சேவை
வளரும்போது பிறரைப் போல ஒரு குறிப்பிட்ட துறையில் வேலை செய்ய வேண்டுமென்ற கனவுக் கோட்டைகளைத் தான் கட்டவில்லை என்ற சிவச்சந்திரன், இப்பணி தன்னைப் பெரிதும் செதுக்கியதாகச் சொன்னார்.
“சிறு வயதிலிருந்தே நான் நண்பர்களின் தாக்கத்தால் வளர்ந்து வந்தவன். நன்றாப் படிக்க வேண்டும், ஒரு நல்ல வேலைக்குச் செல்லவேண்டும் என்ற சரியான பாதையில் நான் பயணிக்கவில்லை. தாதிமைப் பணி எனக்கு நன்கு புலப்பட்டது. இன்று நான் ஒரு நல்ல நிலையில் உள்ளேன்,” என்று பெருமிதத்துடன் சிவச்சந்திரன் கூறினார்.
சிண்டா எனும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தில் இளையர்களுக்குப் பணி வழிகாட்டியாகத் தொண்டூழியம் புரியும் சிவச்சந்திரன், வாழ்க்கை ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
பணியில் பல மணி நேரம் செலவிடுவதால் குடும்பத்தினருடன் அதிக நேரம் இருப்பதில்லை என வருந்திய சிவச்சந்திரன், எப்போதும் சேவைக்கு முதலிடம் அளிக்கிறார்.

