என்யுஎஸ் மாணவர்களுக்குக் கட்டாய ‘ஏஐ’ கல்வி: வரவேற்பும் கவலைகளும்

என்யுஎஸ் மாணவர்களுக்குக் கட்டாய ‘ஏஐ’ கல்வி: வரவேற்பும் கவலைகளும்

4 mins read
4190dde3-0d95-4e0e-af82-63b96e7b3f99
உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர் ‘சேட்ஜிபிடி’ செயலியை ஆங்கிலப் பாடத்தில் பயன்படுத்துகிறார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் (என்யுஎஸ்) பயிலும் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பான பாடத்திட்டம் கட்டாயமாக்கப்படுவதாகவும், மாணவர்களுக்கு ‘சேட்ஜிபிடி எட்யூ’ (ChatGPT Edu) தளம் இலவசமாக வழங்கப்படும் என்றும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. 

இப்புதிய நடைமுறை குறித்துப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நிலையிலும் மாணவர்களிடையிலும் மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் ஏஐ தொழில்நுட்பம் அனைத்துத் துறைகளிலும் முக்கியப் பங்கு வகிக்க உள்ளதால், அதைத் திறம்படப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வது நல்லது என்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தெற்காசியக் கல்வித் துறையின் துணைத் தலைவர் டாக்டர் தாரிணி அழகிரிசாமி தெரிவித்தார்.

“மானுடவியல், சமூக அறிவியல் துறைகளில் நுணுக்கமான தகவல்களைக் கண்டறிவதில் அதிக கவனம் செலுத்துவதால், மைய வாதத்தை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்படும். ஏஐ தொழில்நுட்பம் அதை விரைவாகச் செய்ய உதவும்,” என்றார் அவர்.

இருப்பினும், தொழில்நுட்பப் பின்னணி இல்லாத பேராசிரியர்களுக்குத் தங்கள் பாடத்திட்டங்களில் ஏஐயைச் சேர்ப்பது பெரும் மன அழுத்தத்தைக் கொடுக்கும் என்று சுட்டிக்காட்டிய அவர், மாணவர்களின் சிந்தனைத்திறன் மழுங்கடிக்கப்படுவது குறித்தும் ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்தார்.

“எல்லாவற்றிற்கும் மேலாக, பிறர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல், பிறரின் வேறுபட்ட கருத்துகளையும் மதிப்பது போன்ற மனிதப் பண்புகளையும் ஏஐயிடம் ஒப்படைப்பது ஆபத்தானது. 

“ஏஐ சரியான பதிலைக் கொடுத்துவிடலாம்; ஆனால் மாற்று யோசனைகளையும் பிறர் கண்ணோட்டங்களையும் ஏன் மதிக்க வேண்டும் என்ற ஆழமான சிந்தனையை மாணவர்களிடம் அது உருவாக்காது,” என்று டாக்டர் தாரிணி எச்சரித்தார்.

மாணவர்களின் பார்வையில் ஏஐ 

டாக்டர் தாரிணி சுட்டிக்காட்டிய ஏஐ மீதான அளவுக்கதிகமான சார்பு என்ற அதே கவலையை மாணவர்களும் முன்வைத்தனர்.

ஏஐயைக் கல்வியில் ஒரு கருவியாக மட்டுமே பார்க்க வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக உள்ளனர்.

ஏஐ தொழில்நுட்பம் மனிதச் சிந்தனைக்கு மாற்றாக அமைவதற்குப் பதிலாக, பகுப்பாய்வுச் சிந்தனையை (critical thinking) மேம்படுத்தும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார் தாதியர் பட்டப்படிப்பு பயிலும் நான்காம் ஆண்டு மாணவி நிரஞ்சனா ராமசாமி (22).

“ஏஐயைப் பயன்படுத்துவது சில நேரங்களில் கல்வியை முறையற்ற விதத்தில் பயில்வதுபோல் எனக்குத் தோன்றியதுண்டு. 

“ஆனால், ஏஐயால் ஈடு செய்ய முடியாத திறன்களை வளர்ப்பதற்கு ஏற்ப நமது பாடத்திட்டங்கள் இன்னும் முழுமையடையவில்லை,” என்ற கருத்தை முன்வைத்த அவர், இத்தகைய புதிய பாடத்திட்டம் சரியான திசையை நோக்கிய நல்ல நகர்வு என்றும் கூறினார். 

நிரஞ்சனாவின் கருத்துடன் இணங்கும் வகையில், தரவு அறிவியல், ஏஐ பயன்பாடு (Data Science & Applied AI) பட்டப்படிப்பு பயிலும் முதலாமாண்டு மாணவி சாமிக்கண்ணு ராஜா மாதினி (19), இன்றைய கல்வி, வேலைச் சூழல்களில் ஏஐ தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரித்து வருவதால், இப்பாடத்திட்டத்தைக் கட்டாயமாக்கும் நோக்கைப் புரிந்துகொள்ளமுடிகிறது என்றார்.

“இலவச ‘சேட்ஜிபிடி எட்யூ’ வசதி சிறப்பானது என்றாலும், மாணவர்கள் அளவுக்கு அதிகமாக அதனைச் சார்ந்திருக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, மாணவர்கள் அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதில்தான் இத்திட்டத்தின் வெற்றி அடங்கியுள்ளது,” என்று அவர் கூறினார்.

ஒருபுறம் ஏஐ மீதான சார்பு குறித்த கவலைகள் இருந்தாலும், இந்தத் திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் மாணவர்களிடையே நிலவுகிறது.

இன்றைய ஏஐ சூழலுக்கு இத்தகைய தொடக்கம் அவசியமானது என்பதை ஏற்றுக்கொள்ளும் கணக்கியல் (Accountancy) மூன்றாமாண்டு மாணவி ஹரிஷ்மா பாலாஜி (22), அதற்காக வழங்கப்படும் பயிற்சிகளின் தரம் குறித்துக் கேள்வி எழுப்பினார்.

“மாணவர்கள் உண்மையாகவே கற்றுக்கொள்ள வேண்டுமானால், பாடங்கள் ஈடுபாடுடையதாகவும் மாணவர்களின் துறைக்கு ஏற்றதாகவும் அமைக்கப்பட்டிருக்கவேண்டும். மாறாக, ஆழமான கருத்துகள் அற்ற, பெயர் அளவிலான பாடமாக இப்புதிய பாடத்திட்டம் மாறிவிடக்கூடாது,” என்று ஹரிஷ்மா வலியுறுத்தினார்.

வேலை உலகிற்குத் தயார்ப்படுத்தும் முன்னெடுப்பு

இவ்வேளையில், பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று தற்போது பணியாற்றும் முன்னாள் மாணவர்களும் இந்த ஏஐ முன்னெடுப்பை வரவேற்கின்றனர்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான ராமசாமி ஷ்ரேயா (24), தனது வேலை இடத்திலும் இந்த மாற்றத்தைக் கண்கூடாகப் பார்ப்பதாகவும் ஊழியர்களின் பணி என்னவாக இருந்தாலும், அனைவரும் ஏஐ பயிற்சி பெறவேண்டும் என்ற உந்துதல் அங்கும் நிலவுகிறது என்றும் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகத்தின் இந்தப் புதிய திட்டம் குறித்துப் பேசிய அவர், “மாணவர்கள் வேலை உலகிற்குள் நுழைவதற்கு முன்பாகவே, ஏஐ தொழில்நுட்பத்தை முறையாகப் புரிந்துகொள்ளவும் அதனைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் வாய்ப்பு வழங்கப்படுவது சிறப்பானது. 

“ஏஐ தொழில்நுட்பம் வேலை செய்யும் முறைகளை எந்த அளவிற்கு மாற்றுகிறது என்பதைப் பார்த்து எதிர்காலத்தில் அவர்கள் திண்டாடுவதைவிட, இதுபோன்ற முன்னெடுப்புகள் மாணவர்களை ஏஐ திறன் கொண்டவர்களாகவும், மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக்கொள்ளக் கூடியவர்களாகவும் மாற்றப் பெரிதும் உதவும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்