தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிகரத்தை சிரமமின்றி எட்டிய மாணவர்கள்

2 mins read
6cb9629c-87e0-4616-b26c-d18a59f92f8e
கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி மாணவர் நிதிஷ் சுரேஷ், 16 (இடது), கோ சுவான் பிரஸ்பெட்டேரியன் உயர்நிலைப் பள்ளி மாணவி காம் பாஸ்ரியா நஸ்ரின், 16.  - படங்கள்: கீர்த்திகா ரவீந்திரன் 
multi-img1 of 2

பொதுக் கல்­விச் சான்­றி­தழ் சாதா­ர­ண நி­லைத் (ஜிசிஇ ‘ஓ’ நிலை) தேர்வுகளை நோக்கி தனது வாழ்க்கைமுறையை மாற்றியமைத்தார் மாணவர் நிதிஷ் சுரேஷ், 16. 

விளையாட்டு, கைப்பேசி பயன்பாட்டினைக் குறைத்துக் கொண்டு சுமார் எட்டு மாதங்களுக்குப் படிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கத் தொடங்கினார் நிதிஷ். சாதா­ர­ண நி­லைத் தேர்வுகளுக்கு தன்னை மனதளவில் தயார் படுத்திக்கொள்ள ஓய்வு நேரங்களைத் தன் பெற்றோருடன் செலவிட்டதாகப் பகிர்ந்தார். 

“தேர்வுகளுக்குத் தயாராகும் நாள்கள், அதை எழுதிய அனுபவம் மிக சவாலான ஒன்றாக அமைந்தது. இருப்பினும் என் நண்பர்கள், ஆசிரியர்களின் உதவியுடன் வெற்றிகரமாக இந்த பயணத்தை முடித்தேன்,” என்றார் கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி மாணவரான நிதிஷ். 

கணிதம் தனக்கு மிகவும் பிடித்த பாடம் என்றார் நிதிஷ். அதில் சிறந்த தேர்ச்சி பெற்று உயர்நிலை நான்காம் நிலையில் அவர் முதலிடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 

சாதா­ர­ண நி­லைத் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்று ஒரு தொடக்கக் கல்லூரியில் புவியியல் பாடம் படிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். 

“எதிர்காலத்தில் ஒரு பொறியாளர் ஆக விரும்புகிறேன்,” என்றார் நிதிஷ். 

நிதிஷ் சந்தித்த சவால்கள் கோ சுவான் பிரஸ்பெட்டேரியன் உயர்நிலைப் பள்ளி மாணவி காம் பாஸ்ரியா நஸ்ரினையும் விட்டுவைக்கவில்லை.  

தொடக்கநிலை இறுதி ஆண்டுத் தேர்வுகளை விட உயர்நிலை  சாதா­ர­ண நி­லைத் தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் கடினமாக இருந்தன என்று பகிர்ந்தார் பாஸ்ரியா, 16. 

“என் நண்பர்களைப் போல அயராது உழைக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் நான் கட்டுப்பாட்டுடன் தேர்வுகளுக்குப் படிக்கத் தொடங்கினேன்,” என்று கூறினார் பாஸ்ரியா. 

கால அட்டவணைகள், இணையம்வழி நேரத்தை வகுக்கும் கருவிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி பாஸ்ரியா சுமார் மூன்று மாதங்கள் விடாமுயற்சி, தீவிர கவனத்துடன் தேர்வுகளுக்குத் தயாரானார். 

அதுமட்டுமின்றி, நண்பர்களுடன் படிப்பதால் தனக்கு அதிக பயன் என்று உணர்ந்த பாஸ்ரியா, பள்ளி நேரங்கள் அல்லாது தன் சக நண்பர்களுடன் பொது இடங்களில் படித்தார். 

“தேர்வுகளை நோக்கி செய்த ஏற்பாடுகள் தேர்வு நாள்களை விட சுவாரசியமாக இருந்தன,” என்று புன்னகைத்தார் பாஸ்ரியா. 

கணிதப் பாடத்தில் அதிக ஈடுபாடு காட்டினார் பாஸ்ரியா. கணிதப் பாடங்கள் அளிக்கும் சவால், அதனை செய்து முடிக்கும் திருப்தி அனைத்தும் அவருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது என்றும் கூறினார். 

தொடக்கக் கல்லூரியில் உயர்கல்வி பயில வேண்டும் என்று பாஸ்ரியா முடிவு செய்துள்ளார். 

“எதிர்காலத்தில் அரசியல் அறிவியல், சட்டம் போன்ற பட்டக்கல்வி மேற்கொள்ள எனக்கு ஆசை,” என்று தெரிவித்தார் பாஸ்ரியா. 

இவ்வாண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் சாதா­ர­ண நி­லைத் (ஜிசிஇ ‘ஓ’ நிலை) தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளை வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) பெற்றுக்கொண்டனர். 

தொடக்கக்கல்லூரி, மில்லெனியா கல்விநிலையம், பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழக உயர்கல்வி படிப்புகளுக்கு மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். 

ஜனவரி 10 மாலை 4 மணியிலிருந்து ஜனவரி 15 மாலை 4 மணி வரை மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்புகளை www.moe.gov.sg/jae என்ற ‘ஜேஏஇ’ (JAE) இணையத்தளத்தில் பதிவுசெய்துகொள்ளலாம். 

குறிப்புச் சொற்கள்