தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூக சேவையாளர்களை மையப்படுத்தும் தேசிய தினம் 2024

2 mins read
d77535e2-a323-4cec-a1b1-edca3e40ae30
தேசிய தின அணிவகுப்பில் “அக்கறையும் பரிவும்” குறும்படத்தில் இடம்பெறும் சமூக சேவையாளர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நெருங்கிய நண்பர் ஒருவர் தம் உயிரை மாய்த்துக் கொண்டார். இனி எவரும் இத்தகைய முடிவை எடுக்கக்கூடாது என உறுதிபூண்டார் ‘மெண்டல் ஆக்ட்’ இணை நிறுவனர் தேவானந்தன் தமிழ்செல்வி (தேவன்).

புற்றுநோயால் இறந்த 14 வயது சிறுவருக்கு அளித்த வாக்குறுதியால், ஆர்க் சிறுவர் நிலையத்தைத் தொடங்கினார் ரோனிடா பால், 72. இவரது முயற்சியில் கைகொடுத்தார் 66 வயது ஜெரல்டின் லீ. இருவரும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ‘2023ன் தலைசிறந்த சிங்கப்பூரர்’ (Singaporean of the Year) விருதை வென்றவர்கள்.

இவர்களும் சமூகத்திற்குச் சேவையாற்றிவரும் மற்ற சிலரும் இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பின் ஐந்தாவது பாகத்தில் திரையிடப்படவுள்ள “அக்கறையும் பரிவும்” என்ற குறும்படத்தில் இடம்பெறுவர்.

‘விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்’

‘மெண்டல் ஆக்ட்’ இணை நிறுவனர், நிர்வாக இயக்குநர் தேவானந்தன் தமிழ்செல்வி (தேவன்).
‘மெண்டல் ஆக்ட்’ இணை நிறுவனர், நிர்வாக இயக்குநர் தேவானந்தன் தமிழ்செல்வி (தேவன்). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“நானும் என் நெருங்கிய நண்பரும் மில்லெனியா கல்வி நிலையத்தில் ஒன்றாகத் தடகளப் பயிற்சிகளில் ஈடுபட்டோம். தேசிய சேவைக்காக புலாவ் தெக்கோங்கில் இருந்தேன். அந்த தொலைபேசி அழைப்பு வந்ததும் நான் அதிர்ச்சியில் உறைந்துபோனேன். அது தடுத்திருக்கக்கூடிய ஓர் இழப்பு. அப்போது யாரும் அதற்கான அறிகுறிகளை உணரவில்லை,” என்றார் தேவன்.

அதனால் தற்கொலைத் தடுப்புப் பயிற்சி மேற்கொண்டு பிறருக்கு அது தொடர்பான ஆதரவை வழங்க முனைந்தார்.

ஒருநாள் அதிகாலை நான்கு மணியளவில் அவருக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது.

“நான் என் வாழ்வை முடித்துக்கொள்ளப் போகிறேன். எனக்கு உதவ முடியுமா?” என அக்குரல் குமுறியது.

தேவன் உடனே தம் அன்பரை (இன்று அவரின் மனைவி) அழைத்துக்கொண்டு உதவி கோரியவரின் இருப்பிடத்திற்குச் சென்றார். இரண்டு மணி நேரம் அந்த நபர் கூறியதற்குச் செவிசாய்த்து அவரது மனதை இருவரும் மாற்றினர்.

“தெற்காசியர்களுக்கு உதவ ஏன் உங்களைப் போன்ற மேலும் அதிகமானோர் இல்லை?” என அன்று அவர் கேட்ட கேள்வியால் பிறந்தது ‘மெண்டல் ஆக்ட்’.

வார்த்தை தவறவில்லை

ஆர்க் சிறுவர் நிலைய நிறுவனர்கள் ரோனிடா பால் (இடம்), ஜெரல்டின் லீ.
ஆர்க் சிறுவர் நிலைய நிறுவனர்கள் ரோனிடா பால் (இடம்), ஜெரல்டின் லீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புற்றுநோய், மற்ற கடுமையான நோய்களோடு போராடும் சிறுவர்களுக்கான ஒரே பகல்நேரப் பராமரிப்பு நிலையம் ஆர்க் சிறுவர் நிலையம். அதன் உருவாக்கத்திற்கு வித்திட்டவர், புற்றுநோயால் இறந்துபோன 14 வயது ரஃபேல்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் ரோனிடா பால் தாதியாகவும் ஜெரல்டின் லீ தொண்டூழியர் ஒருங்கிணைப்பாளராகவும் அசிசி அந்திமகாலப் பராமரிப்பு இல்லத்தில் பணியாற்றியபோது ரஃபேல் அங்கு சேர்க்கப்பட்டார்.

தனது 14வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில், “ஏன் இதுபோன்ற நிலையம் சிறுவர்களுக்கு இல்லை?” என ரஃபேல் கேட்ட கேள்விக்கு ரோனிடா, “சரி, நாம் ஒன்றை அமைப்போம்,” எனப் பதிலளித்தார்.

சில மாதங்களில் ரஃபேல் இறந்தாலும் அவரது ஆசைக்கு உயிர்கொடுத்தனர் ரோனிடா, ஜெரல்டின். 2011ல் ஆர்க் சிறுவர் நிலையத்தை அவர்கள் தொடங்கினர்.

அவர்களது பராமரிப்பிலுள்ள சிறுவர்கள், குறும்படத்தில் இருவரும் இடம்பெறுவதைக் காண்பதற்காகவே தேசிய தினத்தன்று ஆர்க் நிலையத்திற்கு வந்து தொலைக்காட்சியைக் காணவுள்ளனர்.

“உதவி தேவைப்படும் சிறுவர்கள் யாரேனும் இருந்தால் தயவுசெய்து எங்களை அணுகுங்கள். எங்களால் இயன்ற வழியில் உதவுவோம்,” என்றார் ரோனிடா.

ரோனிடா பால், 72, ஜெரல்டின் லீ, 66 இருவரும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ‘2023ன் தலைசிறந்த சிங்கப்பூரர்’ (Singaporean of the Year) விருதை அதிபர் தர்மன் சண்முகரத்தினத்திடமிருந்து பெற்றனர்.
ரோனிடா பால், 72, ஜெரல்டின் லீ, 66 இருவரும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ‘2023ன் தலைசிறந்த சிங்கப்பூரர்’ (Singaporean of the Year) விருதை அதிபர் தர்மன் சண்முகரத்தினத்திடமிருந்து பெற்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்