இரண்டு கால்களும் நெளிந்திருந்த வயதான துப்புரவாளர் ஒருவர் தம்மைக் காண வந்ததை டாக்டர் ஹரிஷ் சிவசுப்பிரமணியன் நினைவுகூர்ந்தார்.
“கீழே சென்று உணவு வாங்குவதற்குக்கூட அந்த மாது தம் மகனைச் சார்ந்திருந்தார். நீண்ட நேரம் அவரால் நிற்கமுடியவில்லை. அவருக்கு மூட்டுப் பிரச்சினை (ஆர்த்ரைட்டிஸ்) இறுதிக்கட்டத்தில் இருப்பது தெரியவந்தது.
“அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு இன்று அவரால் வலியின்றி, கைத்தடியை வைத்து நடக்க முடிகிறது. அது அவரது வாழ்வில் பெரும் மாற்றம் ஏற்படுத்தியது,” என்றார் டாக்டர் ஹரிஷ்.
பிறரது வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த முடிவதால் கிடைக்கும் மனநிறைவே, டாக்டர் ஹரிஷ் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் பணியாற்றுவதற்கு வித்திட்டுள்ளது.
தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையிலும் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையிலும் எலும்பியல் ஆலோசகராகவும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பகுதிநேரத் துணைப் பேராசிரியராகவும் இவர் பணியாற்றுகிறார்.
முட்டி மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவதற்காக ஃபாஸ்ட்-டிகேஆர் (FAST-TKR/Focused Accelerated Surgical Treatment - Total Knee Replacement) எனும் வழிமுறையையும் இவர் தலைமையிலான குழு உருவாக்கி, ஜூலை 2024 முதல் செயலாக்கி வந்துள்ளது.
இவ்வழிமுறையில், அறுவை சிகிச்சைக்குப் பின் மேற்கொள்ளவேண்டிய பராமரிப்பு குறித்து முன்கூட்டியே திட்டமிடப்படும்.
இதனால் அறுவை சிகிச்சைக்குப் பின் சமூக மருத்துவமனை, மறுவாழ்வு நிலையம் அல்லது வீட்டிலேயே பராமரிப்பு பெற்று குணமடையலாம். இது தொடர்பில் தாதிகளுக்கும் இயன்முறை மருத்துவர்களுக்கும் தகுந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளும் தரப்படுத்தப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
“ஃபாஸ்ட்-டிகேஆர் செயலாக்கப்பட்டபின் நோயாளிகளால் கிட்டத்தட்ட 45 விழுக்காடு விரைவாக மருத்துவமனையிலிருந்து வசிப்பிடம் திரும்ப முடிகிறது. அதே நாள் எழுந்து நடக்கவும் அவர்களுக்கு ஊக்கமளிக்கிறோம். முன்னதாகவே வெளியேறினாலும், மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் விகிதம் அதிகரிக்கவில்லை. நோயாளிகள் இன்னும் சிறப்பாகக் குணமடைவதாகவும் தெரிகிறது,” என்றார் டாக்டர் ஹரிஷ்.
டாக்டர் ஹரிஷிடம் முட்டி மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட திரு திலீப் நாயர், மருத்துவமனையில் ஓர் இரவுதான் இருந்தார். “இரண்டாவது வாரத்துக்குள் உதவியின்றி நடக்கமுடிந்தது. இன்று, நான் வாகனம் ஓட்டுகிறேன். உடற்பயிற்சிக்கூடத்துக்குக்கூடச் சென்று லேசான உடற்பயிற்சி செய்கிறேன். டாக்டர் ஹரிஷின் சிகிச்சைமுறை என்னைப் போன்ற 75 வயதினருக்கு புதுவாழ்வு அளிக்கிறது,” என்றார் திரு நாயர்.
இவ்வழிமுறையால், மீண்டும் மீண்டும் ‘என்யுஹெச்’சுக்கு வர இயலாத முதியோருக்கு வசதியாக உள்ளது; நோயாளிக்கும் மருத்துவமனைக்கும் செலவுகள் குறைகின்றன; மருத்துவமனையின் வளங்களும் அதிக தேவையுடையோருக்கு ஒதுக்கப்படலாம், என்றார் டாக்டர் ஹரிஷ்.
இனி, இங் டெங் ஃபோங், அலெக்சாண்ட்ரா மருத்துவமனைகளிலும் இவ்வழிமுறையை ‘என்யுஹெச்எஸ்’ அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் கூறினார்.
டாக்டர் ஹரிஷின் பணி மருத்துவமனையோடு நின்றுவிடவில்லை. சமூகத்திலும் சுகாதாரப் பரிசோதனைகள் அடங்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆண்டுக்கு ஒருமுறையாவது இவர் ஏற்பாடு செய்கிறார். சென்ற ஆண்டு தாமான் ஜூரோங்கிலும் சென்ற மாதம் பூன் லேயிலும் இவர் ஏற்பாடு செய்தார்.
இந்நிகழ்ச்சிகளைக் கூடுதலான தொகுதிகளில் நடத்தவும் இவர் விரும்புகிறார்.
“விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம். உதாரணத்துக்கு, இந்தியர்களிடையே இதய நோய், நீரிழிவு நோய் போன்றவற்றின் பரவல் அதிகம். அவைகுறித்தப் பகிர்வுகள் அதிகம் தேவை. நாம் நம் அண்டைவீட்டாரின் உடல்நலத்திலும் அக்கறைக் கொள்ள வேண்டும்,” என்றார் டாக்டர் ஹரிஷ்.
மூட்டுவலியைப் தடுப்பதும் குறைப்பதும் குறித்துப் பேசிய டாக்டர் ஹரிஷ், ஆரோக்கியமான உடல் எடை முழங்காலில் குறைந்த அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றார்.
“மூட்டுப் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடற்பயிற்சி செய்யக்கூடாது என சிலருக்குத் தவறான புரிதல் உள்ளது. நீச்சல் போன்ற நீர் விளையாட்டுகள், மெதுவோட்டம், சமமான தரையில் ஓட்டம் போன்றவற்றைச் செய்வதன்மூலம் தசைகள் வலுப்பெற்று, உடல் எடைக் குறைவதால் மூட்டில் வலி குறையும். இயன்முறை மருத்துவம் மூலம் முழங்காலைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்துவதும் வலியைக் குறைக்கும்,” என்றார் டாக்டர் ஹரிஷ்.
“முழங்காலுக்கு அடிபட்டாலோ குடும்ப வரலாற்றில் மூட்டுவலி இருந்தாலோ பிற்காலத்தில் மூட்டுவலி வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இதுவரை எவ்வித ஊட்டச்சத்தாலும் ஆர்த்ரைட்டிஸ் வருவதைத் தடுக்க முடியும் என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை,” என்றார் அவர்.
இயன்முறை மருத்துவம், எடைகுறைப்பு ஊசி, ஸ்டெராய்ட் ஊசி போன்றவை நடுத்தர அளவு மூட்டுவலி கொண்டிருப்போருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள். நோயாளியின் ரத்தத்தை எடுத்து, ஜவ்வு தேய்ந்த இடத்தில் அதைச் செலுத்தினால் (Platelet-rich plasma injection) மூட்டுவலி குறையக்கூடும் என்பதையும் அண்மைய ஆய்வுகள் காட்டுவதை டாக்டர் ஹரிஷ் சுட்டினார்.

