சிங்கப்பூரின் கலாசார அடையாளத்தைப் பறைசாற்றும் வகையில், ‘நம் மரபு 2026’ தொடரின் இரண்டாம் பகுதி ‘நாட்டுப்புறப் பாடல்கள்’ எனும் தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) கோலாகலமாகத் தொடங்கியது.
இந்திய மரபுடைமை நிலையத்தில் நடத்தப்பட்ட இத்தொடர், பிற்பகல் 2 மணியிலிருந்து 4 மணிவரை மண் மணமிக்க நாட்டுப்புறப் பாடல்களைக் கொண்டாடியது.
இந்த உன்னத முயற்சியை ‘ஆட்டம்’ எனும் லாப நோக்கற்ற அமைப்பு முன்னெடுத்திருந்தது.
2023ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, அழிந்துவரும் இந்தியப் பாரம்பரியக் கலைகளைச் சிங்கப்பூரில் ஆவணப்படுத்துவதையும் அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தது.
நிகழ்ச்சியின் நோக்கம்
நாட்டுப்புறக் கலைகள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமன்று, அவை சமூகத்தை ஒன்றிணைக்கும் திறன் கொண்டவை என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்தியது.
இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்களைச் சிங்கப்பூருக்கு வரவழைத்து, பட்டறைகள்மூலம் நம் பாரம்பரியத்தை இளைய தலைமுறைக்கு ‘வாழும் கலையாக’ மாற்றுவதே இத்திட்டத்தின் முக்கியக் குறிக்கோளாக அமைந்தது.
வழிநடத்த வந்த தமிழகக் கலைஞர்
இம்முறை தமிழகத்திலிருந்து வருகை தந்த புகழ்பெற்ற நாட்டுப்புறக் கலைஞர் சுகந்தி கருப்பையா, 33, இந்த நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
இந்தியத் தொலைக்காட்சியொன்றின் பாடல் போட்டியான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின்வழி புகழ்பெற்ற இவர், இசைஞானி இளையராஜாவின் இசையில் ‘விடுதலை 2’ திரைப்படத்தில் பாடியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
உரத்த குரலில் பாடும் இவரின் தனித்துவமான பாணி, நாட்டுப்புற இசையின் ஆழத்தையும் நுணுக்கத்தையும் உலகிற்கு உணர்த்தியது.
இவரது பயிற்சிப் பட்டறை, பங்கேற்பாளர்களின் வேர்களைக் கண்டறியும் கலைப்பயணமாக அமைந்தது.
பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு அடங்கிய சிறுபுத்தகங்கள் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டன.
இதில் அனைத்து வயதினரும் பிற இனத்தவர் சிலரும் கலந்துகொண்டனர்.
திருமதி சுகந்தி பாடல்களின் வரிகளை விளக்கிக் கூற, பார்வையாளர்கள் பாடகருடன் இணைந்து பாடினர். அங்கே பறை இசையும் இடம்பெற்றது.
“பள்ளிக்கூடங்கள், சமூக மன்றங்கள் உட்பட பல்வேறு இடங்களில் இந்த நடவடிக்கைகளை நடத்தும் பணிகளில் எங்கள் ‘ஆட்டம்’ குழு ஈடுபட்டுள்ளது. கற்பிப்பதற்காகத் திருமதி சுகந்தி போன்ற கலைஞர்களையும் நாங்கள் அணுகினோம்.
“நமது கலாசாரத்தில் மொழி, மரபுகள் எனப் பல அம்சங்கள் இருந்தாலும் இசை என்பது பல ஒற்றுமைகள் உள்ள ஓர் அம்சமாகும். வார்த்தைகள் புரியாவிட்டாலும் இசையும் ராகமும் அனைவருக்கும் புரியும்,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் இந்த நாட்டுப்புறப் பாடல் நிகழ்ச்சியின் செயலாளரான ஆகில் முகமது பிலால், 21.
திருமதி சுகந்தி, “தமிழர்கள் பேசத் தொடங்கிய பிறகு பாடிய முதல் பாடல்கள் நமது நாட்டுப்புறப் பாடல்கள்தான். எனவே, ஆரம்ப இசையை மீண்டும் நினைவுபடுத்துவதற்கும் அந்த வரிகளை உச்சரிப்பதற்கும் அதை ரசிப்பதற்கும் இது நல்ல வாய்ப்பாக இருக்கிறது,” என்று கூறினார்.
“நாம் முதலில் நமது பாடல்களைக் கேட்க வேண்டும், அதன் வரிகளை உள்வாங்க வேண்டும். அந்த உணர்வுகளை ரசிக்க நாம் முதலில் தமிழை நன்றாகப் படிக்க வேண்டும். தாலாட்டில் இருந்து ஒப்பாரிவரை ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு தனித்துவமான இசை வடிவமும் உச்சரிப்பு முறையும் உள்ளது,” என்று அவர் மேலும் சொன்னார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற தமயந்தி செல்லையா, “இந்த நிகழ்வு நாங்கள் எதிர்பார்த்ததைவிட இன்னும் நன்றாக அமைந்தது. ஏற்பாட்டாளர்கள் எல்லோரையும் ஈடுபடுத்திய விதம் மிகவும் நன்றாக இருந்தது. அங்குள்ள சூழலே மிகவும் துடிப்புடன் இருந்தது,” என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற 9 வயது திவாஷினி இசபெல் பிரதீப், “நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது. நான் நாட்டுப்புற இசையைப் பற்றி அறிந்துகொள்வது இதுவே முதல் முறை,” என்று சொன்னார்.

