கற்றல் குறைபாடுகளைக் கண்காணிக்க ஒரு நிலையான மதிப்பீட்டுக் கருவியைக் காட்டிலும் தொடர்ந்து மேம்படுத்தப்படும் ஒரு கருவி தேவை என்பதை உணர்ந்த கீதா சாந்தா ராம், டிஸ்லெக்சியாவுக்கான சிங்கப்பூரின் முதல் பாடத்திட்ட அடிப்படையிலான கருவியை 2016ஆம் ஆண்டில் நிறுவினார்.
‘மேப்டிராக்’ (MAPTrack) என்று அழைக்கப்படும் இந்தப் பாடத்திட்டத்தின்வழி ஒவ்வோர் ஆண்டும் 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைகின்றனர்.
“தரவு மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு குழந்தையின் வளர்ச்சியை நாம் காண்பது எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது,” என்றார் சிங்கப்பூர் டிஸ்லெக்சியா அமைப்பின் கற்றல் வேறுபாடுகள் மதிப்பீட்டுச் சேவைகளுக்கான தலைமைச் செயல்பாட்டு அதிகாரியான டாக்டர் கீதா.
இருப்பினும், கற்றல் குறைபாடுகளைக் கண்காணிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில்தான் சவால் இருந்தது என்றும் அதை மேலிருந்து கீழ்நோக்கிய அணுகுமுறையில் கட்டாயமாக்க வேண்டியிருந்தது என்றும் டாக்டர் கீதா கூறினார்.
“தங்கள் மாணவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க ஏற்கெனவே நிலையான நடைமுறைகளை வகுத்திருந்த கல்வியாளர்கள் பலர் இருந்தனர். ஏன் இதை இந்த முறையில் கையாள வேண்டும் என்பதை அவர்கள் நாளடைவில் புரிந்துகொண்டார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தொழில்நுட்பம் மனித முயற்சியைக் குறைக்கவும் தனிப்பயனாக்கத்தை உறுதிசெய்யவும் உதவுகிறது என்று சுட்டிக்காட்டினார் டாக்டர் கீதா.
அத்துடன் எதிர்காலத்தில் நாம் ஒருவரையொருவர் பார்த்து, அந்த வேறுபாடு என்னவென்று வெளிப்படையாகச் சொல்லாமலேயே நாம் அனைவரும் வேறுபட்டவர்கள் என்பதை ஏற்றுக்கொள்வோம் என்பதே அவரது நம்பிக்கை.
“ஏனென்றால் நமது வேறுபாடுகளால் நாம் ஒருபோதும் கட்டுப்படுத்தப்படுவதில்லை,” என்று திடமாகக் கூறினார் டாக்டர் கீதா.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) நடைபெற்ற சமூக சேவை வல்லுநர் விருதுகள் விழாவில், மேலும் நான்கு பேருடன் இணைந்து சமூகச் சேவை வல்லுநர்களுக்கான சிறப்பு விருதை டாக்டர் கீதா பெற்றார்.
அதிபர் தர்மன் சண்முகரத்னம், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி இருவரும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினர்.
தொழில்முறை சிறப்பு, தலைமைத்துவம், புதுமை ஆகியவற்றுக்காக சமூகச் சேவைத் துறையின் ஆக உயரிய அதிபர் விருதை அதிபர் தர்மன் இருவருக்கு அளித்தார்.
இலவச சமூகச் சட்ட அமைப்பான ‘புரோ போனோ எஸ்ஜி’யின் சட்டச் செயல்பாடுகளின் தலைவரும் துணை இயக்குநருமான பிரேம்நாத் விஜயகுமார் தகுதி விருதைப் பெற்றார்.
சிங்கப்பூரின் முதல் சமூகச் சட்டப் பல்கலைக்கழக மருத்துவமனையைச் செயல்படுத்துவதற்கு திரு பிரேம்நாத் தற்போது ஆதரவளிக்கிறார்.
“அனைவருக்கும் ஒரே தொலைநோக்குப் பார்வை இருப்பதால் அவர்கள் ஒரு பொதுவான நோக்கத்திற்காக ஒன்றிணைவது மிகவும் ஊக்கமளிக்கிறது,” என்றார் அவர்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நிர்வாகப் பணிகளைச் சீராக்கும் ஒரு முன்முயற்சிக்காக ‘ஏவா’ (AWWA) அமைப்பு ஒரு குழு விருதைத் தட்டிச் சென்றது.
ஆவணச் சேகரிப்பிற்குச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் வழி, நிர்வாக நேரம் ஏறத்தாழ 30% குறைந்தது.
இந்தத் தொழில்நுட்பம் நிர்வாகப் பணிகளைக் குறைக்க உதவுகிறது; ஆனால், கல்வியாளரின் திறன், அனுபவம், குழந்தையுடனான உறவு ஆகியவை ஈடுசெய்ய முடியாதவையாகவே இருக்கின்றன என்று ‘ஏவா’ அமைப்பின் தலைமைக் கல்வியாளர் ராஜேஸ்வரி இளங்கோ தெரிவித்தார்.

