சிங்கப்பூரில் சினைப்பைப் புற்றுநோய்க் குறித்த விழிப்புணர்வு

சிங்கப்பூரில் சினைப்பைப் புற்றுநோய்க் குறித்த விழிப்புணர்வு

2 mins read
e03f5613-705f-4060-8369-37789973f7ad
பார்க்வே புற்றுநோய் நிலையத்தில் புற்றுநோய் நிபுணத்துவ மருத்துவராக இருக்கும் டாக்டர் தனுஜா ராஜசேகரன். - படம்: பார்க்வே புற்றுநோய் நிலையம்

உலகச் சினைப்பைப் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் மே 8ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் பெண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோய்களில் சினைப்பைப் புற்றுநோயும் ஒன்று. ‘அமைதியான உயிர்கொல்லி’ என்று அழைக்கப்படும் அப்புற்றுநோய்க்கு ஆரம்பக் கட்டத்தில் பெரிய அறிகுறிகள் தென்படுவதில்லை.

“அடிவயிறு வீக்கம், இடுப்பு வலி, காரணமற்ற உடல் எடைக் குறைவு போன்ற அறிகுறிகள் தொடர்ச்சியாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ‘BRCA1’, ‘BRCA2’ என்பவை நம் உடலில் உள்ள சாதாரண மரபணுக்கள். இவை பாதிக்கப்பட்ட உயிரணுக்களைச் சரிசெய்ய உதவுகின்றன.

“இந்த மரபணுக்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. ‘BRCA’ மரபணு மாற்றம் உள்ளவர்களுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், குடும்பப் பின்னணி உள்ளவர்கள் மரபணுச் சோதனையைச் செய்துகொள்வது அவசியம்,” என்றார் பார்க்வே புற்றுநோய் நிலையத்தில் புற்றுநோய் நிபுணத்துவ மருத்துவராக இருக்கும் டாக்டர் தனுஜா ராஜசேகரன்.

‘BRCA’ மரபணு மாற்றங்கள், சிங்கப்பூரில் ஏறக்குறைய 5% முதல் 10% வரையிலான புற்றுநோய்களுக்குக் காரணமாக உள்ளன.

புற்றுநோயின் நான்கு நிலைகளைப் பொறுத்து அறுவை சிகிச்சை, ‘கீமோதெரபி’, இலக்கு வைக்கப்பட்ட சிகிச்சைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. சினைப்பைப் புற்றுநோயிலிருந்து மீண்ட நோயாளிகளில் ஒருவர், ஏ.ஜே, 42.

அவர் மீண்டுவந்த பயணத்தைப் பற்றி டாக்டர் தனுஜா பகிர்ந்துகொண்டார்.

“ஏ.ஜேவுக்கு முற்றிய நிலையில் சினைப்பைப் புற்றுநோய் கண்டறியப்பட்டது. அவர் அறுவை சிகிச்சை வழியாகச் சினைப்பைகளை அகற்றி, ‘கீமோதெரபி’ சிகிச்சையைச் செய்துகொண்டார். தற்போது முறையாகச் சிகிச்சை மேற்கொண்டதால், அவர் குடும்பத்துடன் நலமாக இருக்கிறார்,” என்றார் டாக்டர் தனுஜா.

“பொதுவாக, ஆசியச் சமூகத்தில், இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்துப் பேசுவதற்குப் மக்கள் தயக்கம் காட்டுவதுண்டு. பெண்கள் தங்களுக்குத் தோன்றும் அறிகுறிகளைப் பெரிதுபடுத்தாமல் புறக்கணித்துவிடுகிறார்கள்.

“தாய்மார்கள் குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதால் தங்களை மறந்துவிடுகிறார்கள். அறிகுறிகள் தொடர்ந்தால், பரிசோதனைகளைச் செய்துகொள்ளுமாறு டாக்டர் தனுஜா வலியுறுத்துகிறார்.

“புற்றுநோய் என்பது வாழ்வின் முடிவு அல்ல. முன்னேற்றம் காணும் மருத்துவத் தொழில்நுட்பத்தால் முன்கூட்டியே புற்றுநோயைக் கண்டுபிடிக்க இயலும். அதன்வழிக் குணமடைவதற்கான சாத்தியம் அதிகரிக்கக்கூடும்,” என்றார் அவர்.

பார்க்வே புற்றுநோய் நிலையத்தில் புற்றுநோய் நிபுணத்துவ மருத்துவராக இருக்கும் டாக்டர் தனுஜா ராஜசேகரன்.
பார்க்வே புற்றுநோய் நிலையத்தில் புற்றுநோய் நிபுணத்துவ மருத்துவராக இருக்கும் டாக்டர் தனுஜா ராஜசேகரன். - படம்: பார்க்வே புற்றுநோய் நிலையம்
குறிப்புச் சொற்கள்