சவால்களையும் கலைகளையும் ஒன்றிணைத்த ‘மறதி’

சவால்களையும் கலைகளையும் ஒன்றிணைத்த ‘மறதி’

2 mins read
04a609e0-4ebe-4007-abba-68011ad0931b
எஸ்பிளனேட் அரங்கில் ஏகே தியேட்டர் கலைக்குழு படைத்த ‘மறதி’ நாடகம். - படம்: சீனிவாசன் சமீக்‌ஷா

மறதிநோயால் (Dementia) ஏற்படும் சவால்களையும் பாரம்பரியக் கலைகளையும் ஒன்றிணைத்து படைக்கப்பட்டது ‘மறதி’ நாடகம்.

அந்நாடகத்தை எஸ்பிளனேட் (The Esplanade) அரங்கில் ஏகே தியேட்டர் கலைக்குழு மேடையேற்றியது.

ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்ற முதல் காட்சியில், கிட்டத்தட்ட 10 பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்மொழி விழாவின் ஒரு பகுதியாகக் கலை, பண்பாடு போன்றவற்றை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில் அந்நாடகம் உருவாக்கப்பட்டது.

வேலுச்சாமி எனும் முதியவரை மையமாகக் கொண்டு அக்கதை தொடங்குகிறது. அவருக்கு மறதிநோய் இருப்பது கண்டறியப்பட்டதால், குடும்பத்தினர் மனக்கவலைக்கு உள்ளாகினர்.

இருந்தபோதும், தம் தாத்தாமீது மிகுந்த அன்பு கொண்ட பேரனோ அவரை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர பாடுபடுகிறார்.

தாத்தாவுக்குப் பிடித்தமான தெருக்கூத்து, மான்கொம்பு, பெருஞ்சலங்கை போன்ற மரபுக் கலைகளை நண்பர்கள், பெற்றோர் ஆகியோரின் உதவியுடன் தாத்தா கண்முன்னே பேரன் நிகழ்த்திக் காட்டுகிறார். அதன்மூலம் தாத்தாவிடம் ஏற்படும் மாற்றமே நாடகத்தின் முக்கியக் கதையம்சம்.

அந்தக் கலை வடிவங்களுடன் பின்னல் ஆட்டம், பொய்க்கால் குதிரை போன்ற கலைகளும் நிகழ்ச்சி மேடையில் படைக்கப்பட்டிருந்தன. 

கிராமங்களில் நடக்கும் திருவிழாவை மேடையேற்றிய ஏகே தியேட்டர்.
கிராமங்களில் நடக்கும் திருவிழாவை மேடையேற்றிய ஏகே தியேட்டர். - படம்: சீனிவாசன் சமீக்‌ஷா

பஞ்சு மிட்டாய், ராட்டினம், திருவிழாக் கடைகள் ஆகியவற்றை மேடையிலேயே அமைத்து கிராமத்துத் திருவிழா போன்ற சூழலை உருவாக்கினர். நிஜ வாழ்வில் அவற்றைக் காணாத மாணவர்களுக்கு அது புதிய அனுபவத்தைத் தந்தது.

உணர்ச்சிகளை வெளிப்படுத்த நிறங்கள் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக, தாத்தாவே வீட்டின் ஒளிவிளக்கு என்பதை உணர்த்த, இறுதிக் காட்சியில் மஞ்சள் நிற விளக்குகளும் ஆடைகளும் பயன்படுத்தப்பட்டன.

மாணவர்களைக் கவரும் வகையில் ‘ஜென்-ஸி’ (Gen-Z) தலைமுறையினர் பயன்படுத்தும் சொற்கள் இடம்பெற்றது மற்றொரு சிறப்பு.

அத்துடன், பார்வையாளர்களாக அமர்ந்திருந்த மாணவர்கள் சிலர் மேடையில் தெருக்கூத்து அடவுகளைக் கற்றனர்.

“மறதி என்பது ஒரு நோய் மட்டுமல்ல, நமது பாரம்பரியக் கலைகளை நாம் மறந்துபோவதும் ஒருவகை மறதிதான் என்பதை இந்த நாடகம் ஆழமாகப் பதிவுசெய்தது,” என்று நாடக இயக்குநர் ராணி கண்ணா விளக்கினார்.

நாடகத்தின் இசையமைப்பாளரும், பேரன் கதாபாத்திரத்தில் நடித்தவருமான அறின் ஜெய் கண்ணன், 22, தெருக்கூத்துக் கலைஞனாக நடித்ததைத் தமது கலைப்பயணத்தின் முக்கிய மைல்கல்லாகக் கருதுகிறார்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நிகழ்ச்சியின் தெருக்கூத்துக் கலைஞர் 32 வயது கோபிநாத், “இளையர்கள் பாரம்பரியக் கலைகளைக் கற்றால் அது அவர்களை உன்னத உயரத்திற்குக் கொண்டுசெல்லும்,” என்று கூறினார்.

தெருக்கூத்து அங்கம்
தெருக்கூத்து அங்கம் - படம்: சீனிவாசன் சமீக்‌ஷா

ஏகே தியேட்டர் கடந்த 13 ஆண்டுகளாக நாடகம், பயிலரங்குகள், கதை சொல்லுதல், நடனம் எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வருவதை அதன் இயக்குநர் ராணி குறிப்பிட்டார்.

“நாடகம் என்பது நம்மைச் சுற்றியுள்ள மக்களின் போராட்டங்களையும் உணர்வுகளையும் எடுத்துரைக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் இளையர்களிடம் தலைமைத்துவம், பொறுப்புணர்வு, ஒருமைப்பாடு ஆகியவற்றை வளர்க்க இது ஒரு சிறந்த தளம்,’’ என்றார் திருவாட்டி ராணி.

குறிப்புச் சொற்கள்