செவித்திறனை இழந்த கிரெஸ்ட் உயர்நிலைப் பள்ளி மாணவர் மனோஜாய் மஜும்தாருக்குக் கணக்குப் பாடம் சற்று கடினம்.
இருப்பினும், விடாமுயற்சியுடன் நாள்தோறும் காலையிலும் மாலையிலும் அவர் தமது கணக்குப் பாடங்களைச் செய்து, ஐயங்களைத் தீர்த்துக்கொள்வதற்காக தொடர்ந்து கேள்விகளைக் கேட்டு வந்தார்.
திங்கட்கிழமை (டிசம்பர் 16) வெளியான பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலை (ஜிசிஇ ‘என்’ நிலை) தேர்வின் முடிவில் மனோஜாய் கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெற்றார். அதைத் தொடர்ந்து, அவர் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் முன்கூட்டியே மாணவர்களைச் சேர்க்கும் திட்டத்தின்கீழ் வான்வெளி, வான்பயண மின்னணுவியல் ‘நைட்டெக்’ (Nitec in Aerospace Avionics) படிப்பு பயிலத் தகுதிபெற்றுள்ளார்.
“இந்தப் படிப்புக்குக் கணக்குப் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம். அதில் தேர்ச்சி பெற்றதில் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி,” என்றார் மனோஜாய்.
செவிப்புலன் குறைபாட்டை ஒரு தடையாகப் பார்க்காமல், விடாமுயற்சியுடன் காணொளிகள், எழுதப்பட்ட வழிகாட்டிகள் மூலம் மனோஜாய் தமது பாடங்களைக் கற்றார்.
எதிர்காலத்தில் ஓர் ஆசிரியராக வேண்டும் என்பதே இவரது கனவு.
“என்னைப் போல செவித்திறனை இழந்த மாணவர்களுக்குச் சைகை மொழியைக் கற்றுக்கொடுக்க வேண்டும்,” என்கிறார் மனோஜாய்.
குலையாத மனவுறுதி
‘ஸ்பாஸ்டிக் டிப்லெஜியா’ (spastic diplegia) எனும் ஒருவகை பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர் மாணவர் துர்கேஸ்வரன் கிருஷ்ணன். இதனால், உடல் ரீதியான சவால்களை எதிர்கொள்ளும் இவர், அடிக்கடி மருத்துவரைச் சந்திப்பதும் சிகிச்சை பெறுவதுமாக இருப்பார்.
தொடர்புடைய செய்திகள்
சிகிச்சைகளுக்கும் மருத்துவச் சந்திப்புகளுக்கும் அதிக நேரம் செலவிட்டாலும், ஜூரோங்வில் உயர்நிலைப் பள்ளி மாணவரான அவர், தொடர்ந்து தம் மாணவர் பிரிவில் முதலாவதாகத் திகழ்கிறார்.
எதிர்பாராத விதமாக, துர்கேஸ்வரனின் உடல்நிலை 2023ல் மோசமடைந்தது. அவரால் பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் தேர்வை எழுத முடியவில்லை.
சக மாணவர்களுடன் தேர்வு எழுத முடியாமல் போனது துர்கேஸ்வரனுக்கு வருத்தம் அளித்தாலும், மறுஆண்டு தேர்வு எழுதத் தம்மை மனத்தளவிலும் உடலளவிலும் தயார்ப்படுத்திக்கொண்டார்.
ஒவ்வொரு பின்னடைவையும் எதிர்கொள்ள துர்கேஸ்வரன் கடைப்பிடிக்கும் மனவுறுதி, மற்றவர்களுக்கு ஓர் உந்துதலாக அமைகிறது. எதிர்காலத்தில் சட்டம் மற்றும் மேலாண்மை, கணக்கியல், உளவியல் படிப்பு போன்றவை தொடர்பான கல்விப் பயணத்தைத் தொடர அவர் விரும்புகிறார்.
இவ்வாண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் தேர்வை எழுதிய மாணவர்கள், தேர்வு முடிவுகளை திங்கட்கிழமை (டிசம்பர் 16) பெற்றுக்கொண்டனர். தேர்வு எழுதிய 9,369 வழக்கநிலை ஏட்டுக்கல்விப் பிரிவு மாணவர்களில் 99.5 விழுக்காட்டினரும் 4,421 வழக்கநிலைத் தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களில் 98.3 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றனர்.