பிரபல இந்திய ‘ராப்’ பாடகர் ‘பால் டப்பா’, சிங்கப்பூரில் முதன்முறையாக அன்பர் தினத்தன்று (பிப்ரவரி 14) இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
விஆர் புரொடக்ஷன்ஸ் ஏற்பாட்டில், ஃபூச்சாவ் அரங்கில் நடைபெறும் ‘மேட் வைப் ஃபெஸ்ட்’ எனும் அந்நிகழ்ச்சியில் ‘பால் டப்பா’ சிங்கப்பூர் ‘ராப்’ கலைஞர் யங் ராஜாவுடன் இணைந்து ‘ராப்’ அங்கம் படைக்கவுள்ளார்.
மேலும், சிங்கப்பூர் கலைஞர்கள் தம்பி நாட்டா, பஹா மிஸ்தா பி, எஸ்ஜேஒய் (SJY), வை-டி, டிஜே சத்தியா, மலேசியக் கலைஞர்கள் ஏமஸ் பால், அர்விந்த் ராஜ் ஆகியோரும் பாடல்கள் படைக்கவுள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை சிங்கப்பூர் வந்த ‘பால் டப்பா’ தமிழ் முரசுக்கு சிறப்பு நேர்காணலும் அளித்தார்.
“இதுதான் நான் சிங்கப்பூர் வரும் முதன்முறை. சிங்கப்பூர் எப்படி இருக்கும் நான் யாரிடமும் கேட்கவில்லை. நானே வந்து அனுபவிக்க விரும்பினேன்,” என்றார் பால் டப்பா.
“நான் இதுவரை வெளியிடாத பாடல்கள் சிலவற்றையும் நிகழ்ச்சியில் படைக்கவுள்ளேன். அன்பர் தினத்தை நாம் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாகக் கழிப்போம்,” என அவர் கூறினார்.
சில ஆண்டுகளிலேயே ‘ராப்’ உலகில் தனக்கென ஒரு பெயர் பதித்தவர் பால் டப்பா.
2022ல் தன் முதல் பாடலான ‘3SHA’வுடன் தொடங்கி, ‘Ai’, ‘170CM’, ‘காத்து மேல’ உட்பட அவர் வெளியிட்ட பாடல்கள் பலவற்றும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
தொடர்புடைய செய்திகள்
திரையுலகிலும் ‘கலாட்டா’, ‘மக்காமிஷி’, ‘ஊரும் பிளட்’ என பலரையும் ஈர்த்த பாடல்களைப் படைத்துள்ளார். இசையமைப்பாளர், ‘ராப்’ கலைஞர், பாடகர், நடனக் கலைஞர் எனப் பன்முகங்கள் கொண்ட திறனாளராக அவர் திகழ்கிறார்.
முதல் காதல் நடனம்
சென்னையின் புளியந்தோப்பில் பிறந்து வளர்ந்த ‘பால் டப்பா’வின் உண்மைப் பெயர் அனிஷ். அவரது முதல் காதல் நடனமே. நடனத்தைச் சிறப்பாகக் கற்கவேண்டும் எனும் முனைப்பில் அவர் சென்னையையும் தாண்டி மும்பைக்குச் சென்று அங்கேயே இரு மாதங்கள் நடனம் பயின்றார்.
‘பிஃபேப்’ எனும் அவரது நடனக்குழு பல போட்டிகளிலும் பரிசுகள் வென்றது.
“அப்போது என் முழுக் கவனமும், நடனமாடுவது, பரிசுகளை வெல்வது என்பதே. எங்களை ரவி அண்ணா பார்த்துக்கொண்டார். போட்டியில் நாங்கள் வெல்லும்போது அடுத்த போட்டிகளில் கலந்துகொள்ள முதலீடாகப் பயன்படுத்தினோம்,” என்றார் அவர்.
“நாளடைவில் காணொளி எடுப்பது, ‘ராப்’ என வெவ்வேறு ஆர்வங்கள் எனக்கு வந்தன. நான் எதைச் செய்தாலும் அதை முறையாகக் கற்று சிறப்பாகச் செய்ய விரும்புவதுண்டு,” என்றார் ‘பால் டப்பா’.
“என் ‘ராப்’ கலையைப் பலரும் பாராட்டியதால்தான் நான் தொடர்ந்து உந்துதலுடன் பல பாடல்கள் எழுதினேன்,” என்றார் அவர்.
மனந்நெகிழவைத்த தருணம்
“பலருக்கும் அனிஷ் என்பவர் நடனமாடுபவர் என்றுதான் தெரியும். ஆனால் ஒருமுறை, என் வீட்டு அருகே கடையில் ஒரு சிறுவன் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தான். என்னிடம் வந்து, ‘நீங்க பால் டப்பாதானே! ஒரு புகைப்படம் கிடைக்குமா?’ எனக் கேட்டான். அவன் வீட்டுக்கு ஓடிச்சென்று கைத்தொலைபேசி எடுத்து வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டான். அவன் எனக்காக அவ்வளவு முயற்சி எடுத்துக்கொண்டதைப் பார்த்தபோது நான் ‘பால் டப்பா’வாகப் பிறரால் அறியப்படுகிறேன் என உணர்ந்து மகிழ்ந்தேன்,” என்றார் பால் டப்பா.
யங் ராஜாவுடன் நட்பு
“நான் ‘ராப்’ பாடல்கள் எழுதுமுன்னே எனக்கு யங் ராஜா பற்றி தெரியும். சமூக ஊடகங்களில் யங் ராஜா பச்சைத் தலைமுடியுடன் ‘டோக்கியோ டிரிஃப்ட்’ இசைக்கு சொந்த வார்த்தைகளுடன் ‘ராப்’ செய்வதைக் கண்டேன்.
“சென்னையிலிருந்து அங்கித் குப்தா எனும் தயாரிப்பாளர், நானும் யங் ராஜாவும் சேர்ந்து பாடல் வழங்கினால் நன்றாக இருக்கும் என்றார். அதற்காக தாளம் எனக்கு அனுப்பினார். அப்படித்தான் ‘தீ’ என்ற பாடல் பிறந்தது,” என்றார் பால் டப்பா.
“சென்னையில் யங் ராஜா நிகழ்ச்சிகள் படைத்தால் நானும் வந்து காண்பேன். அதனால், சிங்கப்பூரில் அவருடைய நாட்டில் பாடுவதென்றால் அந்த உற்சாகத்தைச் சொல்லவே தேவையில்லை,” என்றார் பால் டப்பா.

