குருத்தோலை ஞாயிறன்று, சிங்கப்பூர்த் தேவாலயங்களில் குருத்தோலை ஊர்வலம் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) நடைபெற்ற குருத்தோலை ஊர்வலம், ஆராதனைகளில் தேவாலய உறுப்பினர்கள், வெளிநாட்டு ஊழியர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும்முன் புனித நகராகக் கருதப்படும் ஜெருசலத்திற்குச் சென்ற நாள் குருத்தோலைத் திருநாளாகப் போற்றப்படுகிறது.
கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான அதை முன்னிட்டு, தேவாலயங்களில் பக்தர்கள் பலர் குருத்தோலைகளை ஏந்தியவாறு ஊர்வலத்தில் பங்குபெற்றனர்.
சிங்கப்பூரின் ஒஃபிர் சாலையில் அமைந்துள்ள லூர்து அன்னை தேவாலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில் காலை தொடங்கி மாலைவரை சிறப்பு ஆராதனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
1888இல் கட்டப்பட்ட சிங்கப்பூரின் முதல் தமிழர் கத்தோலிக்கத் தேவாலயமான லூர்து அன்னை ஆலயத்தில் சிங்கப்பூரர்கள், வெளிநாட்டு ஊழியர்கள், சீன இனத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் எனப் பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.
‘சாம்பல் புதன்’ எனக் கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் நிகழ்வுடன் புனித வெள்ளிக்குமுன் கடைப்பிடிக்கப்படும் தவக்காலம் தொடங்கியது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக அனுசரிக்கப்படுகிறது.
திருச்சபை மக்கள் உட்பட பலரும் குருத்தோலை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டங்களில் பங்கேற்க காலையிலிருந்து கூடி கிறிஸ்தவப் பாடல்களைப் பாடி இயேசு கிறிஸ்துவை மனமார வழிபட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
வழிபாட்டின் ஒரு பகுதியாக ஆலயத்தில் ஆசீர்வதிக்கப்பட்ட குருத்தோலைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. பெரியோர்முதல் சிறியோர்வரை அனைவரும் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவாறு ‘ஓசன்னா’ என்ற பாடல்களைப் பாடி தேவாலயத்தைச் சுற்றிவந்தனர்.
இந்தத் திருநாளுக்காகப் பயன்படுத்தப்படும் குருத்தோலைகள் பெரும்பாலும் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டவை.
பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், தேவாலயங்களில் பவனி வருவதற்கு முந்தைய நாள் இரவே குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் இணைந்து குருத்தோலைகளைச் சிலுவை வடிவில் பின்னித் தயார் செய்தனர் பக்தர்கள்.
இந்த வழிபாட்டில் பங்கேற்றவர்கள், ஈஸ்டர் திருநாளுக்கு முந்தைய வாரத்தில் ஆயத்த வேலைகளைப் பார்ப்பதாகத் தமிழ் முரசிடம் தெரிவித்தனர்.
அதனை முன்னிட்டு பக்தர்கள் பலர் இந்த ஞாயிறன்று நீண்ட இறை வழிபாட்டில் ஈடுபட்டனர். அவர்கள் தொடர்ச்சியாக இவ்வாரத்தில் புனித வியாழன், புனித வெள்ளி ஆகியவற்றையும் அனுசரித்துப் பிரார்த்தனையில் ஈடுபடுவர்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாதம் என்பதால் ஆலயப் பங்குத்தந்தைகள் பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்திருப்பதாகத் தேவாலய இசைக் குழு நடத்துநர் மைக்கேல் சின்னப்பன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
“சமயம் சார்ந்ததும் சமூக ஒற்றுமை சார்ந்ததுமாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்த முன்னேற்பாடுகள் கவனமாகச் செய்யப்படுகின்றன. தவக் காலகட்டத்தில் எல்லோருக்கும் நல்ல முறையில் மனமாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று உளமார வேண்டுகிறோம்,” என்று அவர் கூறினார்.
உற்றாரும் சுற்றத்தாரும் சூழ இசைப் பாடல்களுடன் இறைவனைத் துதிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் இதில் ஈடுபட்டதை எண்ணி நெகிழ்வதாகவும் 21 வயது ராயன் மார்க்கஸ் கூறினார். கிறிஸ்து சேகரத் திருச்சபையில் நடைபெற்ற ஆராதனையில் இவர் பங்கேற்றார்.
“2,000 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இப்பண்டிகையை இன்னும் தொடர்ந்து கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மூன்று தலைமுறையினருடன் குருத்தோலை ஞாயிறை அனுசரிப்பது பலருக்கு அமையாத ஒரு சிறப்பு,” என்று கூறினார் ராயன்.

