தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர்த் தேவாலயங்கள் அனுசரித்த குருத்தோலை ஞாயிறு

2 mins read
a7dfd2a2-3155-4e2a-bd35-7aee012c17f4
டோர்செட் சாலையில் உள்ள கிறிஸ்து சேகர சபை அனுசரித்த குருத்தோலை ஞாயிறு. - படங்கள்: கிறிஸ்து சேகர சபை

கத்தோலிக்கர்களும் கிறிஸ்தவர்களும் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான குருத்தோலை ஞாயிறை சிங்கப்பூரின் பல தேவாலயங்கள் (ஏப்ரல் 13) அனுசரித்தன.

பூமியில் மனிதனாய் அவதரித்த இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன் புனித நகராகக் கருதப்படும் எருசலேமுக்குச் சென்ற நாளை குருத்தோலை ஞாயிறாக கத்தோலிக்கர்களும் கிறிஸ்தவர்களும் கொண்டாடுகின்றனர்.

அதை முன்னிட்டு பல தேவாலயங்களில் பக்தர்கள் பனை மரத்தின் ஓலைகளை ஏந்தியவாறு ஊர்வலம் சென்றனர். அவற்றுள் ஒன்று டோர்செட் சாலையில் உள்ள கிறிஸ்து சேகர சபை.

காலை 7.30 மணிக்குத் தொடங்கிய பிரார்த்தனைக் கூட்டத்தில் ‘ஓசன்னா’ என்ற பாடலைப் பாடி குருத்தோலைகளைப் பிடித்தவாறு மக்கள் ஆலயத்தில் பவனி வந்தனர்.

மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட மனிதன் திரும்ப மண்ணுக்கு ஒரு நாள் திரும்புவான் என்ற கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைக் குருத்தோலை ஞாயிறு பறைசாற்றுகிறது என்றார் கிறிஸ்து சேகர சபையில் 13 ஆண்டுகளாகச் சேவையாற்றிவரும் அருள்திரு கேனன் ஸ்டீவன் ஆசிர்வாதம்.

“என்னதான் நவீன காலத்தில் நாம் வாழ்ந்தாலும் குருத்தோலைகளைப் பின்னுவது, அவற்றை பிடித்துக்கொண்டு ஆலய வளாகத்தைச் சுற்றிவருவது போன்ற பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் கடைப்பிடிக்கிறோம்,” என்றார் அருள்திரு ஸ்டீவன்.

குருத்தோலை ஞாயிறு அன்று வழங்கப்படும் பனை ஓலைகளைப் பக்தர்கள் வழக்கமாக எரித்து ஆலிவ் எண்ணெய்யில் குழைத்து நெற்றியில் பூசிக்கொள்வர்.

இதுபோன்ற பாரம்பரியத்தை இளையர்களிடமும் கொண்டுசெல்ல தேவாலயங்கள் பல நடவடிக்கைகளை ஏற்பாடு செய்கின்றன.

புதுவாழ்வுத் தமிழ் திருச்சபையின் குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டத்தில் இளையர்களின் படைப்பு
புதுவாழ்வுத் தமிழ் திருச்சபையின் குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டத்தில் இளையர்களின் படைப்பு - படங்கள்: புதுவாழ்வுத் தமிழ் திருச்சபை
ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் அமைந்துள்ள புதுவாழ்வுத் தமிழ் திருச்சபையின் குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டத்தில் பங்குபெற்ற சிறுவர்கள்
ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் அமைந்துள்ள புதுவாழ்வுத் தமிழ் திருச்சபையின் குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டத்தில் பங்குபெற்ற சிறுவர்கள் - படங்கள்: புதுவாழ்வுத் தமிழ் திருச்சபை

அந்த வகையில் ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் அமைந்துள்ள புதுவாழ்வுத் தமிழ் திருச்சபை, ஆடல், பாடல், நாடகம் போன்ற அங்கங்கள் வழி இளையர்களை ஈர்த்து வருகிறது.

கடந்த 15 ஆண்டுகளாக குருத்தோலை ஞாயிறை அனுசரித்து வரும் புதுவாழ்வுத் தமிழ் திருச்சபை இந்த ஆண்டும் 100க்கும் அதிகமான குருத்தோலைகளைப் பக்தர்களுக்கு விநியோகம் செய்தது.

“இந்தக் குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டம் எங்களுடன் முடிந்துவிடக்கூடாது. அடுத்த தலைமுறையும் பின்பற்றவேண்டும் என்பதற்காக சிறு பிள்ளைகள் முதல் இளையர்கள் வரை அனைவரையும் உள்ளடக்கிய நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்,” என்றார் திருச்சபையின் போதகர் ஜெயக்குமார் இராமச்சந்திரன்.

இளையர்களும் ஆர்வத்துடன் ஆடல், பாடல் அங்கங்களில் பங்கேற்றனர்.

“பள்ளி முடிந்து பாடல்களைக் குழுவாக இணைந்து பயிற்சி செய்ய சபைக்கு வந்துவிடுவோம். ஒவ்வொரு வாரமும் எப்படியும் இரண்டிலிருந்து மூன்று நாள்கள் இங்கு வருவோம்,” என்றனர் பாடல் பிரிவில் அங்கம் வகிக்கும் ஷெகினா ஏஞ்சலா, ஜெயினா கிறிஸ்டல், ஸ்டெஷா கிருபாஷினி, டேனியல் ஜெசி.

பாடல்கள் தமிழில் இருப்பதால் மொழிவளம், உச்சரிப்பு ஆகியவையும் இளையர்களிடையே மேம்பட்டதைக் காணமுடிகிறது என்றார் போதகரின் மனைவி ஐரிஸ் ரெஜினா.

குறிப்புச் சொற்கள்