புதிய உச்சங்களுக்குக் குறிவைக்கும் ‘இஷ்தாரா’ பார்த்திபன்

புதிய உச்சங்களுக்குக் குறிவைக்கும் ‘இஷ்தாரா’ பார்த்திபன்

படம்: சயீது இப்ராகிம் சுல்தான்

16 Oct 2026 - 2:35 pm

4 mins read

ஏறத்தாழ $150 மில்லியன் மதிப்புள்ள தமது வணிகக் குழுமத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளை இஷ்தாரா நகைக்கடையின் நிர்வாக இயக்குநரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான திரு பார்த்திபன் முருகையன் பரிசீலித்து வருகிறார்.

சந்தை நிலவரத்தில் ஏற்படும் மாற்றங்கள், விநியோகக் கட்டமைப்பின் நிலையற்ற தன்மை போன்ற சவால்களுக்கிடையே, தமது வணிகத்தை அனைத்துலக அளவில் முன்னணி நிறுவனமாக உயர்த்தும் நோக்கில் 54 வயது திரு பார்த்திபன் இத்தகைய முடிவை எடுத்துள்ளார்.

அதிக வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் இடங்களைத் தேர்வு செய்தல், குறிப்பிட்ட வணிக அடையாளங்களை இலக்கு வைத்தல், விரைவான அனைத்துலக விரிவாக்கம் ஆகியவற்றின் மூலம் இவரது வணிகம் திறம்பட வளர்ந்து வருகிறது.

தற்போது இவரது குழுமத்தின்கீழ் ‘இஷ்தாரா’, ‘லுவேனஸ்’ ஆகிய நகை வணிகங்களின் பல விற்பனை நிலையங்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன.

அத்துடன், முன்னணி இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் ‘மேஸ்ட்ரோ புரோடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும் இதன் கீழ் இயங்கி வருகிறது.

தமது வணிக வளர்ச்சி குறித்து ‘தப்லா!’ நாளிதழிடம் திரு பார்த்திபன் பேசினார்.

“குறிப்பாக நகைத்தொழிலில் புதிய கடையைத் தொடங்குவதற்கு அதிக அளவிலான நிதி தேவைப்படுகிறது. இதுவே வணிக விரிவாக்கத்தை மெதுவாக்கும் முக்கியக் காரணியாக உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

பங்குச்சந்தைப் பட்டியலிடுதல் தொடர்பாக ஆலோசகர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த நடைமுறைகள் முழுமைபெறச் சிறிது காலம் பிடிக்கலாம்.

‘வேன் கிளீஃப் & ஆர்பெல்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளரான சுவிட்சர்லாந்தின் ரிச்மொன்ட், ‘தனிஷ்க்’ நிறுவனங்களைக் கொண்டுள்ள இந்தியாவின் டாடா குழுமத்தின் ‘டைட்டன்’ ஆகியவை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முன்னணி நகை நிறுவனங்களாகும்.

தமது சொந்த வணிகம் தவிர்த்து, சிங்கப்பூர் இந்திய வணிக, தொழிற்சபையின் துணைத் தலைவராகவும் திரு பார்த்திபன் பொறுப்பு வகிக்கிறார். அங்குள்ள தொழில் முனைவர்கள் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, மின்னிலக்க உருமாற்றம் உள்ளிட்ட தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்ள இவர் தலைமையிலான நிர்வாகக் குழு உதவி வருகிறது.

சிறுவயதில் விமானியாக வேண்டும் என்ற ஆசையைக் கொண்டிருந்தபோதிலும், அதை விடுத்துக் குடும்பத் தொழிலை நடத்த திரு பார்த்திபன் தீர்மானித்தார். அதைத் தொடர்ந்து, உத்திபூர்வ இடமாற்றம், சந்தை விரிவாக்கம் குறித்த திட்டங்களை அவர் செயல்படுத்தத் தொடங்கினார்.

கடந்த 1997ஆம் ஆண்டில் குறைந்த அளவிலான வாடிக்கையாளர்கள் மட்டுமே வந்து சென்ற சந்தர் சாலையிலிருந்து, சிராங்கூன் சாலையில் பிரதான பகுதிக்கு இஷ்தாரா கடை இடம் மாறியது. இந்த இடமாற்றம் வணிகத்துக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 1990களில் இந்தியா தனது பொருளியலைத் திறந்துவிட்டதையும் தெற்காசியர்கள் பேரளவில் வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்ததையும் இஷ்தாரா சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது.

இந்தியாவில் தங்கம் மீதான சுங்க வரி அதிகம் என்பதால், தரம், நம்பிக்கையின் காரணமாக அவர்கள் சிங்கப்பூரில் தங்கம் வாங்க விரும்பினர்.

“அந்தக் காலத்தில் மூன்று அல்லது நான்கு நகைக்கடைகள் மட்டுமே இருந்ததால் போட்டிகளும் மிகக் குறைவாகவே இருந்தன,” எனத் திரு பார்த்திபன் குறிப்பிட்டார்.

ஒரே இடத்தில் தங்கிவிடாமல் தொடர்ந்து வணிகத்தை விரிவாக்கி வரும் இவர், சிராங்கூன் சாலையில் உள்ள புகழ்பெற்ற முன்னாள் கோமள விலாஸ் உணவகத்தின் 76-78 ஆம் எண் முகவரியில் புதிய இஷ்தாரா ‘ஷோரூம்’ ஒன்றைத் திறக்கவுள்ளார்.

இந்தியக் குடும்பங்களின் மிகப் பெரிய தங்கக் கொள்முதல் காலமான தீபாவளிப் பண்டிகையைக் கருத்தில் கொண்டு இதன் திறப்பு விழா திட்டமிடப்பட்டுள்ளது.

சில்லறை விற்பனைச் சங்கிலியில் தடம் பதிப்பு சிங்கப்பூரில் மட்டுமன்றி, உலக அளவிலும் சில்லறை விற்பனைச் சங்கிலி வணிகங்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது,” என்று திரு பார்த்திபன் விளக்கமளித்தார்.

இதற்கான வாய்ப்பு 2012ல் அமைந்தது. சாங்கி விமான நிலையத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகளிடமிருந்து நகைக்கடை தொடர்பான கோரிக்கைகள் அதிகரித்ததை அடுத்து, அங்கு நகைக்கடை அமைப்பதற்கான ஏலம் விடப்பட்டது. அதில் திரு பார்த்திபன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ‘லுவேனஸ் ஜூவல்லரி’ உருவாக்கப்பட்டு, பல விருதுகளையும் வென்றது.

சீனா, பிலிப்பீன்ஸ் நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் தங்க நகைகளை வாங்க விரும்புவதை அவர் கண்டறிந்தார்.

பிலிப்பீன்ஸ் மக்கள் அதிகம் கூடும் லக்கி பிளாசாவில் உயர்தர 22 காரட், 24 காரட் தங்க நகைகளைத் தவணைமுறைத் திட்டங்களுடன் விற்பனை செய்யத் தொடங்கினார்.

சீனச் சந்தையைக் கவரும் வகையில் ஹாங்காங்கிலும் வணிகத்தைத் திரு பார்த்திபன் விரிவுபடுத்தினார். வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதிலும் வெளிப்படைத்தன்மையிலும் சிங்கப்பூரைப் போன்ற சூழலை ஹாங்காங் கொண்டிருந்தது.

ஹாங்காங் விமான நிலையத்தைத் தொடர்ந்து, அந்நகரப்பகுதியில் மூன்று கிளைகள் தொடங்கப்பட்டன.

பண்பாட்டு அடிப்படையிலும் முதலீட்டு நோக்கிலும் தங்கத்திற்கான தேவை நிலையானதாகவும், நீண்டகால அடிப்படையில் மதிப்பு உயர்வதாகவும் இருக்கும் என்பதால், தங்க நகை வணிகமே குழுமத்தின் முதன்மை வணிகமாகத் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.

தப்லாவுக்காக அப்துல் ஹாடி எழுதியது. தமிழாக்கம் நரேந்திரன் பிள்ளை

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்