இளம் தலைமுறையினரிடையே தமிழ் மொழியையும் அதன் மரபுச் செல்வங்களையும் கொண்டுசேர்க்கும் நோக்கில் அமைந்திருந்தது ‘தமிழே வாழ்க 5.0 பழமொழிகள்’ நிகழ்ச்சி.
சக்தி நுண்கலைக்கூடம் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி இந்த ஆண்டிற்கான தமிழ்மொழி விழாவின் நிறைவாக நடைபெற்றாலும், வாழ்நாள் முழுதும் தமிழைத் தலைமுறைகள் கொண்டாடவேண்டும் எனும் இலக்குடன் ஐந்தாவது முறையாக அரங்கேறியது.
பிள்ளைகளைப் பெற்றோர் மேடையேற்றியதையே பெரும்பாலும் பார்த்தவர்களுக்கு இம்முறை பெற்றோரை மேடைக்கு அழைத்துவந்து கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய சிறாரைப் பார்த்தது சிறப்பான அனுபவமாக அமைந்திருந்ததாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர் கூறினர்.
அன்றாட வாழ்வில் தமிழ்
இந்நிகழ்ச்சி வெறுமனே போட்டிகளுடன் நின்றுவிடாமல், பிள்ளைகள் தங்களின் அன்றாட வாழ்வில் தமிழையும் தமிழ்ப் பழமொழிகளில் புதைந்துள்ள வாழ்வியல் நெறிகளையும் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததாகக் கூறினார் திருவாட்டி வனிதாஸ்ரீ, 48.
இவரின் பிள்ளைகள் சிறந்த ‘மேடை ஆளுமை’ எனும் விருதை வென்றனர். ‘இளம் கன்று பயமறியாது’ எனும் பழமொழி வாயிலாக நிகழ்ச்சியைப் படைத்தனர் அவர்கள்.
“தமிழ் மொழி பேசுவது பரவலாகவே குறைந்துவிட்டது. பள்ளி முதல் உடன்பிறந்தோருடன் பேசுவதுவரை ஆங்கிலத்தில் பரவலாகப் பிள்ளைகள் பேசுவதைப் பார்க்க முடிகிறது. சில நேரம் பெற்றோராகிய நாங்கள் அவர்கள் பேசும்போது குறுக்கிட்டுத் தமிழில் பேசுமாறு அறிவுறுத்துவோம்,’’ என்றார் திருவாட்டி வனிதாஸ்ரீ.
‘‘படைப்பாளர்களாகப் பரிசு கிடைத்ததில் மகிழ்ச்சி. ஆனாலும், தமிழ் மொழி மீதான ஆர்வத்தால் அப்பாவுடன் சேர்ந்து நிகழ்ச்சிக்குப் பயிற்சி பெற்றதில் மேலும் மகிழ்ச்சி,’’ என்று கூறினார் அவ்விருதை வென்ற எழில்முகி.
வழக்கமான மொழிப் பயிலரங்குகள் போல் அல்லாமல், இதில் பெற்றோரும் தங்களது பிள்ளைகளுடன் இணைந்து பங்கேற்றதும், தாய்மார்களுக்கு ஈடாகத் தந்தையரும் மேடையேறியது சுவாரசியமாக இருந்தது என்றார் திருமதி புவனா, 39.
தொடர்புடைய செய்திகள்
குடும்பத்தின் ஈடுபாட்டுடன் பழமொழிகள்வழி நம் பண்பாட்டைக் காப்போம் எனும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சில் மாணவர்கள், சிறார், இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் என ஏறத்தாழ நூறு பேர் பங்கேற்றிருந்தனர்.
இத்தகைய விழாக்கள், அவை வடிவமைக்கப்பட்ட பாங்கு ஆகியவை வீடுகளிலிருந்தே பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் கொண்டுசேர்க்கும் ஆரோக்கியமான சூழலை நினைவூட்டியதாகப் பங்கேற்பாளர்கள் பலர் தெரிவித்தனர்.
குறிப்பாக ‘பழமொழி பரமபதம்’ எனும் அங்கம் பார்வையாளர்களின் மனத்தை வென்றது. நிகழ்ச்சியின் நிறைவில், பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கும் இலக்குடன் சிறந்த கதைக்களம், சிறந்த படைப்பாற்றல், சிறந்த கருத்து உட்பட பத்துக்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.
இதற்கிடையே, தமிழ்ப் பழமொழிகளின்வழி பண்பாட்டு விதைகளை விதைத்த இந்த நிகழ்ச்சி, சிங்கப்பூரில் தமிழ் மொழியின் எதிர்காலத்திற்கு வலுசேர்க்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது என்றார் சக்தி நுண்கலைக்கூடத்தின் கலை இயக்குநர் திருமதி தேவி வீரப்பன்,40.
“இந்த நிகழ்வு ஒருநாளுடன் மட்டும் முடிந்துவிடக்கூடிய ஒன்று அல்ல. நம் இளம் தலைமுறையினருக்கு ஒவ்வொரு நாளும் தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஊக்கமளிக்க இது ஒரு நல்ல வழி,” என்று அவர் குறிப்பிட்டார்.
‘‘பழமொழிகள் என்பது பண்பாடுகளின் தொகுப்பு என்பதைப் பிள்ளைகளுக்கு எளிய வகையில் புரியச் செய்வது இலக்கு. எனினும், அவை தொடர்ந்து நம் அன்றாட வாழ்விலும் தழைக்க குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் அவசியம்.
‘‘அதனைக் கருத்தில் கொண்டே பெற்றோருடன் இணைந்துப் பங்கேற்கும் பயிலரங்குகள், இளம் நிருபர் உள்ளிட்ட பல அம்சங்களை அறிமுகப்படுத்தினோம். அரங்கம் முழுவதும் ஒலித்த தமிழோசை ஆண்டுதோறும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்,’’ என்றார் திருமதி தேவி.

