மயிலாட்டம் முதல் மண்பாண்டம் வரை: பழகிப்பார்த்து பாலர் பரவசம்

மயிலாட்டம் முதல் மண்பாண்டம் வரை: பழகிப்பார்த்து பாலர் பரவசம்

படம்: ஈ-பிரிட்ஜ் பாலர் பள்ளி

30 Apr 2026 - 6:00 am

2 mins read
கரகாட்டம் ஆடி கலக்கிய மாணவர்கள்.
கரகாட்டம் ஆடி கலக்கிய மாணவர்கள். - படம்: ஈ-பிரிட்ஜ் பாலர் பள்ளி
ஒயிலாட்டம் ஆடிய மாணவர்கள்.
ஒயிலாட்டம் ஆடிய மாணவர்கள். - படம்: ஈ-பிரிட்ஜ் பாலர் பள்ளி

ஈ-பிரிட்ஜ் பாலர் பள்ளி, தேசிய நூலக வாரியத்துடன்  இணைந்து நடத்திய ‘ஈ-பிரிட்ஜ் பாலர் பள்ளி தமிழ்மொழி விழா’ ஏப்ரல் 25 (சனிக்கிழமை) தேசிய நூலகத்தின் 16வது தளத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது.

விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகத் தேசியக் கல்விக்கழகத்தின் (NIE) ஆசிய மொழிகள், பண்பாட்டுத் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் சீதா லட்சுமி வருகை தந்து சிறப்பித்தார்.

மாணவர்களுக்குத் தமிழ்மொழியின் முக்கியத்துவத்தையும் பாரம்பரியக் கலைகளையும் கொண்டுசேர்ப்பதே நிகழ்வின் முக்கிய நோக்கம் என்று பள்ளியின் தமிழ்ப் பிரிவின் மூத்த ஆசிரியர் 42 வயது திருவாட்டி ஜீவா சந்திரசேகர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஈ-பிரிட்ஜ் பாலர் பள்ளியின் தமிழ் ஆசிரியர்கள்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஈ-பிரிட்ஜ் பாலர் பள்ளியின் தமிழ் ஆசிரியர்கள். - படம்: ஈ-பிரிட்ஜ் பாலர் பள்ளி

தமிழ் ஆசிரியர்களின் உதவியுடன் நான்கிலிருந்து ஆறு வயது வரையிலான பாலர் பள்ளி மாணவர்கள், ஒன்றரை மாதகாலப் பயிற்சியில் கரகாட்டம், மயிலாட்டம், கோலாட்டம் ஒயிலாட்டம் என நான்கு வகையான பாரம்பரிய நடனங்களை ஆர்வத்துடன் கற்று, மேடையில் அரங்கேற்றினர்.

கோலாகலமாகக் கோலாட்டம் ஆடிய மாணவர்கள்.
கோலாகலமாகக் கோலாட்டம் ஆடிய மாணவர்கள். - படம்: ஈ-பிரிட்ஜ் பாலர் பள்ளி

“பள்ளி மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு தளமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது,” என்று திருவாட்டி ஜீவா குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் மண்பாண்டம் வைத்துப் பொருள் செய்தல், சிலம்பாட்டம், அம்மிக்கல், ஆட்டுக்கல் பயன்படுத்துதல், மோர் கடைதல் போன்ற பல்வேறு பாரம்பரியச் செயல்பாடுகள் இடம்பெற்றன.

சிலம்பத்தைச் சுழற்றிக் காண்பித்த மாணவர்கள்.
சிலம்பத்தைச் சுழற்றிக் காண்பித்த மாணவர்கள். - படம்: ஈ-பிரிட்ஜ் பாலர் பள்ளி

சுண்டல், இடியாப்பம் போன்ற பாரம்பரிய உணவுவகைகளைச் சுவைக்கும் வாய்ப்பும் கதை சொல்லி பிரியங்கா கணேசனின் கதை சொல்லும் நிகழ்வும் விழாவிற்கு மேலும் பெருமை சேர்த்தன.

பாரம்பரிய உணவுவகைகளை ருசித்த மாணவர்கள்.
பாரம்பரிய உணவுவகைகளை ருசித்த மாணவர்கள். - படம்: ஈ-பிரிட்ஜ் பாலர் பள்ளி

பாலர் பள்ளி மாணவர்களில் ஒருவரின் பெற்றோரான 36 வயது மதனா சுபாஷ் பாலன், “இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக இருந்தது; இதில் பல பண்பாட்டுக் கூறுகள், உணவு, கதை சொல்லுதல், நடனம் என அனைத்தும் நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன,” என்றார்.

மற்றொரு பெற்றோரான 36 வயது கனகேஸ்வரி, “நாங்கள் முதன்முறையாக ஒரு தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறோம், இது போன்ற பல நிகழ்வுகளில் எனது குழந்தைகளுடன் கலந்துகொள்ள விரும்புகிறேன்,” என்று கூறினார்.

பெற்றோருடன் இணைந்து மண்பாண்டத்தைச் செய்த மாணவர்கள்.
பெற்றோருடன் இணைந்து மண்பாண்டத்தைச் செய்த மாணவர்கள். - படம்: ஈ-பிரிட்ஜ் பாலர் பள்ளி

ஏறக்குறைய 150 பேர் கலந்துகொண்ட இந்த விழா, பெற்றோரும் பிள்ளைகளும் ஒன்றுசேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பளித்தது.

குறிப்புச் சொற்கள்
பாலர் பள்ளிநடனம்பாரம்பரியம்