விலங்கியல் மருத்துவருக்கு உதவியாளராகப் பணியாற்றியபோது தொண்டையில் மீன் கொக்கி சிக்கிய பூனை சிகிச்சைக்குக் கொண்டுவரப்பட்டதை சி சஞ்சய் மித்ரா கண்டார்.
அது ஆதரவற்று தெருவில் அலைந்த பூனை என்பதை அறிந்தபோது 25 வயது சஞ்சயின் மனத்தில் விலங்குகள்மீதான கருணை மேலும் அதிகரித்தது.
இளம் வயதிலிருந்தே விலங்குகள் மேல் அன்பு கொண்டிருக்கும் சஞ்சய், அந்தப் பூனையைத் தத்தெடுத்து அதற்கு ‘அபிமன்யு’ என்று பெயரிட்டார். ‘அபிமன்யு’வுக்கு இப்போது கிட்டத்தட்ட 11 வயது.
கைவிடப்பட்ட விலங்குகள்
விலங்கு கொடுமை தடுப்புச் சங்கம் (SPCA) விலங்குகள் மீதான கொடுமை அல்லது நலன் சார்ந்த கவலைகள் குறித்து சென்ற ஆண்டு 1,109 புகார்களைப் பெற்றது.
அதில் 283 புகார்கள் விலங்கு கொடுமை தொடர்பானவை. மொத்தம் 257 விலங்குகள் கைவிடப்பட்டன. கைவிடப்பட்ட விலங்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை பூனைகள்.
விலங்குகள் கைவிடப்படுவதற்கு, அப்படிக் கைவிடுவோருக்குக் கிடைக்கும் தண்டனை குறைவாக இருப்பது ஒரு காரணம் என்று விலங்கு கொடுமை தடுப்புச் சங்கம் கருதுகிறது.
சென்ற மார்ச் மாதம் விளையாட்டு மைதானத்தில் ஒரு நாளுக்கு மேலாகக் கட்டப்பட்டிருந்த நாய் குறித்த தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதை அடுத்து நாயைக் கைவிட்டவர் பின்னர் அடையாளங் காணப்பட்டார்.
அவரை விசாரித்தபோது அந்த நாய் அதற்கு முன் இரு வெவ்வேறு குடும்பத்திடம் இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
தொடர்புடைய செய்திகள்
பெருவிரைவு ரயில் நிலையங்கள், வீவக வீடுகளின் கீழ்த்தளங்கள் போன்ற இடங்களில் விலங்கு கொடுமை தடுப்புச் சங்கம் கைவிடப்பட்ட முயல்களைக் கண்டெடுத்திருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் கூண்டில் அடைக்கப்பட்ட இரு முயல்கள் வீவக குடியிருப்பின் கீழ்த்தளத்தில் கைவிடப்பட்டிருந்தன. சங்கம் நடத்திய விசாரணையில் இரு முயல்கள் மாண்டதாகத் தெரிய வந்தது.
ஆதரவற்ற விலங்குகளுக்கு அடைக்கலம்
கைவிடப்பட்ட விலங்குகளையும் தெருவில் திரியும் விலங்குகளையும் தத்தெடுக்க விரும்புவோருக்கு வாய்ப்பளிக்கிறார் கிரிஸ்டின் பெர்னடெட், 35.
நால்வருடன் இணைந்து ‘கோசஸ் ஃபார் அனிமல்ஸ்’ (Causes for Animals) என்ற அமைப்பைத் தொடங்கி கைவிடப்பட்ட நாய்களைத் தத்தெடுப்பதை அவர் ஊக்குவிக்கிறார்.
‘பெட்ஸ் வில்லா’ எனும் விலங்குகள் காப்பகத்தில் விலங்குகளைக் கவனித்து வந்த கிறிஸ்டின் கைவிடப்பட்ட நாய்களை 20 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்த்து வருகிறார்.
கைவிடப்பட்ட செல்லப்பிராணிகளைப் பொறுப்புடன் பாதுகாப்பதும் கருத்தடை செய்வதும் அவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான சரியான வழி என்றார் அவர். கைவிடப்பட்ட விலங்குகளுக்கான தடுப்பூசி இயக்கங்களையும் கிறிஸ்டின் ஏற்பாடு செய்கிறார்.
சிங்கப்பூரில் விலங்குகள் கைவிடப்படும் சம்பவங்கள் சற்று குறைந்து வருவதாகச் சொன்ன கிரிஸ்டின் இன்னும் மோசமான சம்பவங்கள் தொடர்வதாகக் கூறினார்.
நெறிமுறையற்ற இனப்பெருக்க நடைமுறைகள் இன்னும் நிலவுவதால் தேசியப் பூங்காக் கழகம் இன்னும் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும் என்பது அவரது கருத்து.
நேரப் பற்றாக்குறை, நிதி நெருக்கடி போன்ற காரணங்களால் சிலர் தங்கள் செல்லப் பிராணிகளைக் கைவிடுகின்றனர்.
“சிலர் செல்லப் பிராணிகள் அழகாக இல்லை என்ற காரணத்திற்குக்கூட கைவிடுகின்றனர். மருத்துவத் தேவை இருக்கும் பிராணிகளைத் தத்தெடுக்க சிலர் தயங்குகிறார்கள். பிராணிகளை ஒரு சொத்தாகப் பார்க்காமல் அவற்றைக் குடும்பத்தில் ஒருவராகப் பார்க்க வேண்டும்,” என்றார் கிரிஸ்டின்.
செல்லப்பிராணியைத் தத்தெடுக்க வருபவர்களின் வீடு, அந்தப் பிராணிக்கு ஏற்ற வீடாக இருக்குமா என்பதில் கிரிஸ்டின் கவனம் செலுத்துகிறார்.
பலவகைகளில் செல்லப்பிராணிகளைக் கைவிடுவது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் காப்பகங்களுக்குக் கூடுதல் ஆதரவு கிடைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கிறிஸ்டின் நம்புகிறார்.
சிங்கப்பூர்த் தெருக்களில் ஆதரவற்ற விலங்குகள் அறவே இருக்கக் கூடாது என விரும்பும் கிரிஸ்டின், இதர காப்பகங்களோடு இணைந்து தீவு முழுவதும் பூனைகளுக்கான கருத்தடைத் திட்டத்தை நடத்துகிறார்.
எழும் சவால்கள்
விலங்கு கொடுமை தடுப்புச் சங்கம் அரசு சாரா விலங்குநல அறநிறுவனம் என்பதால் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படும் சம்பவங்களில் தலையிட முடியாது.
உரிமையாளரின் அனுமதியோ அதிகாரிகளிடமிருந்து உத்தரவோ இல்லாமல் ஒருவரின் வீட்டுக்குள் சென்று விலங்கு கொடுமை நடப்பதைச் சங்க அதிகாரிகளால் உறுதிசெய்ய முடிவதில்லை.
சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்பிடமிருந்து சட்டபூர்வ அங்கீகாரம் இல்லாமல் கொடுமைக்கு ஆளாகும் விலங்குகளைப் பறிமுதல் செய்ய முடியாது. அதோடு விலங்கு நலச் சட்டங்களின்படி குற்றவாளிகள்மீது சங்கத்தால் வழக்குத் தொடரவோ, நடவடிக்கை எடுக்கவோ முடியாது.
அர்ப்பணிப்பும் பொறுப்பும் தேவை
கைவிடப்படும் செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறும் கால்நடை மருத்துவர் சந்தியா நாயர், 38, உரிமையாளர்கள் அவற்றை வளர்ப்பதற்கு நீண்டகால அர்ப்பணிப்புத் தேவை என்பதை உணராமல் இருப்பது ஒரு முக்கிய காரணம் என்றார்.
கைவிடப்படும் விலங்குகள் பல விதமான உணர்வுரீதியான மாற்றங்களையும் எதிர்கொள்வதாக டாக்டர் சந்தியா சொன்னார்.
மருந்தகத்திற்கு வரும் விலங்குகள் பெரும்பாலும் உடல்நலமின்றி வருவதாகச் சொன்ன அவர், சிலவற்றுக்குக் காயங்கள் ஏற்பட்டிருக்கும் என்றும் சில விலங்குகளிடம் ஒட்டுண்ணி தொற்றும் கண்டறியப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
பூனை வளர்புக்கான உரிமத்தையும் அவற்றை எளிதில் அடையாளம் காண்பதற்கான ‘மைக்ரோசிப்பிங்’ எனும் முறையைக் கட்டாயப்படுத்தாமல் இருப்பது, பிராணிகளை வளர்க்கச் செலவு அதிகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனப் பல காரணங்களுக்காக அவை கைவிடப்படுகின்றன எனக் குறிப்பிட்ட டாக்டர் சந்தியா.
செல்லப்பிராணிகளைப் பராமரிக்க முடியாமல் அவற்றைக் கைவிட நினைப்போருக்கு தற்காலிக காப்பகங்களை நாடுவது, விலங்குநல நிறுவனங்களிடம் ஆலோசனைப் பெறுவது போன்ற வழிகளை டாக்டர் சந்தியா பரிந்துரைக்கிறார்.
செல்லப்பிராணிகளை வளர்க்க நினைப்போர், முதலில் அதன் பொறுப்புகள், செலவு போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.
தேவைப்படும் மாற்றங்கள்
- விலங்கு கொடுமை தடுப்புச் சங்கம், கடுமையான விலங்குப் பாதுகாப்புச் சட்டங்களும் அமலாக்கமும் வேண்டுமென்று கோருகிறது.
- செல்லப்பிராணிகள் தொடர்பான பொருள்கள் அல்லது சேவைகளை வழங்குவதன் மூலம் லாபம் ஈட்டுவோர்மீது அதிக பொறுப்புணர்வை சுமத்துதல், தடுப்பு நடவடிக்கையாகக் கடுமையான தண்டனைகள் போன்றவை அவற்றில் அடங்கும்.
- மீட்பவர்களும் காப்பகங்களும் நேரம், பணம், பரிவு எனப் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு மறுவாழ்வு அளிக்க அதிகம் பொறுப்பேற்கின்றனர். எனவே, சட்டங்கள் விலங்கு கொடுமைச் சம்பவங்களால் ஏற்படும் செலவுகளுடன் மீட்பவர்கள், தங்குமிடங்கள், சமூக நலன் அமைப்புகளுக்கு அதிகரிக்கும் சுமைகளையும் கருத்தில்கொள்ள வேண்டும்.
பொதுமக்களும் பங்காற்றலாம்
- செல்லப்பிராணிகளை கடைகளிலிருந்தோ, வளர்ப்போரிமிருந்தோ வாங்காமல் தத்தெடுப்பது நலம்.
- கைவிடப்பட்ட பிராணியைக் காண நேர்ந்தால், விலங்குநல மருத்துவச் சேவை அல்லது விலங்கு கொடுமை தடுப்புச் சங்கத்துக்குப் புகார் அளிக்கலாம்.
- செல்லப்பிராணிகளை வளர்ப்பது குறித்து பிறருக்கு அறிவுறுத்தலாம்.
- தொண்டூழியம் புரிவது, நன்கொடை வழங்குவது போன்ற வழிகளில் விலங்கு நல நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கலாம்.
- விலங்குகளின் இனப்பெருக்கத்தைக் குறைக்க கருத்தடையை ஊக்குவிக்கலாம்.
- செல்லப்பிராணிகளைக் கைவிடுவது சிங்கப்பூரில் சட்டப்படி குற்றம். அத்தகைய குற்றம் புரிவோருக்கு $10,000 வரையிலான அபராதம் அல்லது 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

