கொடையாளர் பி.கோவிந்தசாமி பிள்ளையின் புதல்வர் திரு பிஜிபி ராமகிருஷ்ணன், உடல்நலக் குறைவால் சனிக்கிழமை (நவம்பர் 28) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 88.
சிங்கப்பூரின் மூத்த சமூகத் தலைவர்களில் ஒருவரும் கொடையாளருமான பி.கோவிந்தசாமி பிள்ளையின் இரண்டாவது மகனான இவர், தந்தை விட்டுச்சென்ற கொடை மரபை முன்னெடுத்தவர். உள்ளூர் கோவில்களுக்கும் சமூக நலத்திட்டங்களுக்கும் அளப்பரிய பங்களிப்புகளை அவர் ஆற்றியுள்ளார்.
குறிப்பாக, அவரது குடும்பத்தினர் சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். அக்கோயில் வளாகத்தில் அவரது தந்தை கட்டிய பிஜிபி மண்டபத்தில், திரு ராமகிருஷ்ணன் - சாந்தா ராமகிருஷ்ணன் தம்பதியரின் திருமணமே முதன்முதலில் நடைபெற்றது.
1980களில் பெருமாள் கோயிலின் நிர்வாகக் குழுத் தலைவராகச் சில ஆண்டுகள் பொறுப்பு வகித்த திரு ராமகிருஷ்ணன், கோயிலின் வளர்ச்சிக்குப் பல முக்கியப் பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.
“நிர்வாகத்தில் அவர் வல்லவராக திகழ்ந்தார்,” என்றார் முனைவர் அ.வீரமணி.
சிங்கப்பூரின் மிகப்பெரிய மொத்த, சில்லறை விற்பனை நிறுவனங்களில் ஒன்றாகத் விளங்கியது பிஜிபி நிறுவனம். மலாக்கா, ஜோகூர் பாரு வரை கிளைகளைக் கொண்டிருந்த அந்நிறுவனத்தைத் தமது தந்தையாருடன் இணைந்து இளம் வயதிலிருந்தே நடத்திய அனுபவம் கொண்டவர் திரு ராமகிருஷ்ணன்.
1982 முதல் 1988 வரை சிராங்கூன் வர்த்தகர்கள் சங்கத்தின் முதல் தலைவராக திரு ராமகிருஷ்ணன் சேவையாற்றினார். அக்காலகட்டத்தில் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்துடன் இணைந்து லிட்டில் இந்தியாவில் 1985ஆம் ஆண்டு முதல் தீபாவளி ஒளியூட்டு விழா நடைபெறுவதற்கு அவர் முக்கிய ஆதரவு நல்கினார்.
எப்போதும் வெள்ளை வேட்டியுடன் எளிமையாகக் காட்சியளிக்கும் திரு ராமகிருஷ்ணன், கண்டிப்பானவராகவும் எடுத்த முடிவில் உறுதியாக நிற்பவராகவும் இருந்ததாக சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபைத் தலைவரும் ஜோதி ஸ்டோர் உரிமையாளருமான திரு ராஜ்குமார் சந்திரா தமிழ் முரசிடம் கூறினார்.
“அவரிடமிருந்து நான் சொத்து ஒன்றை வாங்கியபோது, கூடுதலாகக் கிடைக்கும் தொகையைக் கோயில் திருப்பணிக்கே வழங்கப்போவதாகக் கூறி, சற்று அதிக விலை கேட்டார்,” என்று நினைவுகூர்ந்த திரு ராஜ்குமார், தந்தை விட்டுச்சென்ற மரபை திரு ராமகிருஷ்ணன் மிகச் சிறப்பாகத் தொடர்ந்து முன்னெடுத்ததாகப் புகழாரம் சூட்டினார்.
வணிகத்திற்காக எந்தவொரு முடிவையும் விரைவாக எடுக்க வேண்டும் என்று திரு ராமகிருஷ்ணன் தமக்கு அறிவுறுத்தியதாகவும் அது தமது வாழ்க்கையில் நிலைத்திருக்கும் பாடம் என்றும் திரு ராஜ்குமார் நினைவுகூர்ந்தார்.
காலமான திரு ராமகிருஷ்ணன், மனைவி சாந்தா ராமகிருஷ்ணன், மகன் கமலக்கண்ணன், மகள் ராதிகா, பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் ஆகியோர் உள்ளனர்.
அவரது நல்லுடல் திங்கட்கிழமை (நவம்பர் 30) தகனம் செய்யப்படும்.
