இல்லத்திலும் உள்ளத்திலும் சமயம் பாராத இறைபக்தி

காலாங் பாரு அடுக்குமாடி வீடு ஒன்றின் ஐந்தாவது மாடியில் ஒரு பெரிய, வளைந்த நடைபாதை. அதில் இறை வழிபாட்டுச் சிலைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.

இல்லத்திலும் உள்ளத்திலும் சமயம் பாராத இறைபக்தி

2 mins read
7ca1fd39-a1cc-4ee5-879a-296310625806
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் தனது வீட்டின் வெளியே நான்கு சமயங்கள் சேர்ந்த இறை வழிபாட்டுச் சிலைகளைப் பாதுகாத்து வருகிறார் ராஜா. - படம்: கீர்த்திகா ரவீந்திரன் 
multi-img1 of 2

இந்து சமயத்தைச் சேர்ந்த பிள்ளையாரையும் சீனர்கள் வழிபடும் ‘குவான் யின்’ மற்றும் நரக தேவதைகள் என நம்பப்படும் ‘ஹே பாய் வூ சாங்’ உட்பட வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்த வழிபாட்டுச் சிலைகளையும் இதர வழிபாட்டுப் பொருள்களுடன் 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது வீட்டின் வெளியே உள்ள திறந்த நடைபாதையில் பாதுகாத்து வருகிறார் 62 வயது ராஜா. 

இதற்கு முன்பு நான்கு சிலைகளுடன் செடிகள், அலங்காரங்கள் உட்பட மொத்தம் 62 சிலைகளும் பொருள்களும் இந்த நடைபாதையில் வைக்கப்பட்டிருந்தன. அண்மையில் அந்தச் சிலைகளால் சங்கடப்படும் அண்டைவீட்டார் ஒருவர் புகார் அளித்த செய்தி ஊடகங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டது.

இதனால் ராஜா தற்போது நான்கு முக்கிய தெய்வச் சிலைகளை மட்டுமே அந்த நடைப்பாதையில் வைத்துள்ளார். 

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தனது காலாங் பாரு வீடமைப்பு வீட்டில் குடியிருக்கும் ராஜா, தற்போது தனது சகோதரியுடன் வசித்து வருகிறார். முன்பு துப்புரவாளராகப் பணியாற்றிவந்த இவர், தற்போது ஓய்வு பெற்றுள்ளார். 

“இந்த வழிபாட்டு விக்கிரங்களை நான் விலை கொடுத்து வாங்கவில்லை. இவை என்னை நாடி வந்தன,” என்று பகிர்ந்தார் திரு ராஜா. 

“ஒரு நாள், மூன்றில் இரண்டு வழிபாட்டுச் சிலைகள் திருட்டுப் போயின. மீதம் இருந்த ஒரு சிலையை வைத்து செய்வதறியாமல், இன்னும் 48 நாள்களுக்குள் அதை ஓர் ஆலயத்தில் கொடுத்துவிட முடிவெடுத்தேன். 

“48வது நாளன்று யாரோ என் வீட்டு வாசலைத் தாண்டி ஓடுவதுபோல் ஒரு சத்தம். கதவைத் திறந்து பார்த்தேன். களவுபோன என் இரண்டு சிலைகளும் அங்கு வைக்கப்பட்டிருந்தன,” என்று அவர் கூறினார். 

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, யார் கண்ணுக்கும் தென்படாத வகையில் ஓரிரவு காலாங் ஆற்றின் ஒரு மரத்தடியில் இருந்த ‘குவான் யின்’ சிலையை ராஜா கண்டார். 

“அந்த (குவான் யின்) சிலை என்னை மிகவும் ஈர்த்தது. மேலும் யோசிக்காமல் நான் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்றேன்,” என்றார் 12 வயதிலிருந்து சமயம் பாராது இறை வழிபாட்டில் ஈடுபட்டுவரும் ராஜா.

அவ்வப்போது சீனப் புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி போன்ற சிறப்பு நாள்களில் ராஜா சிறப்பு வழிபாட்டுகளை நடத்துவார். 

ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் வழக்கமாகப் பங்கேற்கும் இவர், காவடி செய்யும் வேலைகளில் மட்டற்ற மகிழ்ச்சியைக் காண்கிறார். அவ்வப்போது, காவடி ஏந்தும் மற்ற பக்தர்களுக்கும் இவர் உதவி செய்வார். 

இதைப் பிரதிபலிக்கும் வகையில், வீட்டின் நடைப்பாதையில் சில காவடிப் பொருள்களும் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 

“தைப்பூசத் திருவிழாவில் நேர்த்திக்கடன்கள் செலுத்துவதைத் தவிர, பெரும்பாலும் எனக்கு ஆலய வழிபாட்டில் சற்று குறைவான ஈடுபாடு. இல்லத்திலும் உள்ளத்திலும்தான் கடவுள் இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்,” என்றார் அவர். 

நடைபாதையில் தொடர்ந்து வைக்க முடியாத நிலையில் இனி இந்த தெய்வச் சிலைகள் நடைபாதையிலிருந்து அகற்றப்பட்டு அவரது வீட்டில் அடைக்கலமாகும். 

“இறைபக்தி என்பது என் வாழ்நாள் முழுவதும் தொடரும் ஓர் அர்ப்பணிப்பு. எல்லா தெய்வங்களும் ஒன்றுதான் எனக்கு,” என்றார் ராஜா. 

குறிப்புச் சொற்கள்