தமிழ் மொழி வளர்க்கும் தூண்களுக்குக் கௌரவம்

தமிழ் மொழி வளர்க்கும் தூண்களுக்குக் கௌரவம்

5 mins read
c3afff9f-6917-4b37-8990-765d61b601cd
இவ்வாண்டு நல்லாசிரியர் விருது பெற்ற (இடமிருந்து) ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரித் தமிழாசிரியர் கலைவாணி இளங்கோ ஃபூஹுவா தொடக்கப்பள்ளித் தமிழாசிரியர் அ. சுமதி, கேஷுவரீனா தொடக்கப்பள்ளி மூத்த தமிழாசிரியர் நஸிமா பானு, கிரெஸ்ட் உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் ரைஹானா பீவி. - படம்: பே. கார்த்திகேயன்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் இளைய தலைமுறையினரிடையே தமிழ் மொழியின் பயன்பாட்டை ஊக்குவிப்பதிலும் மாணவர்கள் மத்தியில் மொழிப்பற்றையும் கலாசார விழிப்புணர்வையும் வளர்ப்பதிலும் தமிழாசிரியர்களின் பங்கு அளப்பரியது.

அந்த வகையில் தங்களின் வகுப்பறைகளில் புத்தாக்க உத்திகளையும் நவீன தொழில்நுட்பங்களையும் கையாண்டு, மாணவர்களை ஈர்த்த ஆசிரியர்கள் நால்வருக்கு ‘நல்லாசிரியர் விருது 2026’ எனும் அங்கீகாரம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

நல்லாசிரியர் விருது (தொடக்கப்பள்ளி)

ஃபூஹுவா தொடக்கப்பள்ளித் தமிழாசிரியர் அ. சுமதி, 33.
ஃபூஹுவா தொடக்கப்பள்ளித் தமிழாசிரியர் அ. சுமதி, 33. - படம்: பே. கார்த்திகேயன்

வகுப்பறை என்பது வெறுமனே பாடங்களை மட்டும் கற்பிக்கும் இடமன்று. அது மாணவர்களின் ஆளுமையையும் விழுமியங்களையும் செதுக்கும் ஒரு தளம் என்று உறுதியாக நம்புகிறார் 33 வயது தமிழாசிரியர் அ. சுமதி.

ஃபூஹுவா தொடக்கப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழாசிரியராகப் பணியாற்றி வரும் இவரது வகுப்பறைகள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவை.

மாணவர்கள் சலிப்பின்றித் தமிழைப் பயில வேண்டும் என்பதற்காக, விவாத மேடைகள், பாத்திரமேற்று நடித்தல், நாடகங்கள் போன்ற பல சுவாரசியமான செயல்பாடுகளைத் தமது கற்பித்தலில் அவர் இணைத்துள்ளார். ஒவ்வொரு மாணவரின் மொழித் திறனுக்கேற்ப வேறுபடுத்தப்பட்ட கற்பித்தல் முறைகளைத் திருவாட்டி சுமதி கையாண்டு வருகிறார்.

குறிப்பாக, பெற்றோர் ஆதரவுடன் அவர் வடிவமைத்த ‘வீட்டுச் சமையல் காணொளித் திட்டம்’ மாணவர்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றது. தொடக்கநிலை 4 மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ், சமையல் முறையை விளக்கி மாணவர்கள் காணொளிகள் தயாரித்தனர். காணொளித் தயாரிப்பிற்காக, தமிழில் பேசத் தயங்கிய பிள்ளைகள்கூட எளிய வாக்கியங்களைச் சரியாகக் கட்டமைத்துத் தன்னம்பிக்கையுடன் பேசப் பழகினர்.

“திட்டவேலையை முடித்த பிறகு மாணவர்கள் தமிழில் மேலும் தன்னம்பிக்கையுடன் பேச முடிகிறது என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்கள். இத்தகைய மகிழ்ச்சியான கற்றல் அனுபவங்கள் வழியே தமிழைப் புத்தாக்க முறையில் கொண்டு சேர்ப்பதே என் இலக்கு,” என்றார் திருவாட்டி சுமதி.

சிறு வயதிலிருந்தே தமிழ் மொழிமீது அதிக ஆர்வம் கொண்டிருந்த இவர், பள்ளிப் பருவத்திலேயே விவாதங்கள் போன்ற பல போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர்.

தொடக்கக் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, ஆறு மாத காலம் தாம் முன்னர் பயின்ற பள்ளியிலேயே தமிழ் கற்பிக்கும் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். அங்கு இவருக்குக் கற்பித்த ஆசிரியர்கள் இவரிடமிருந்த திறமையைக் கண்டு, தேசியக் கல்வி கழகத்தில் சேர்ந்து தமிழ் கற்பிக்க ஊக்கமளித்தனர். அதுவே இவரது ஆசிரியர் பயணத்தின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

தொழில்நுட்பத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், தொடக்கநிலை மேல்வகுப்பு மாணவர்களின் வாசிப்பு, புரிதல் திறனை மேம்படுத்த நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திச் செயற்கை நுண்ணறிவுக் காணொளிகளையும் உருவாக்கிப் பயிற்றுவிக்கிறார்.

“ஒரு தமிழாசிரியராகப் பிள்ளைகளுக்கு இன்னும் சிறப்பாகக் கற்பித்து, நல்ல முன்மாதிரியாக வழிநடத்த வேண்டும் என்ற ஊக்கத்தையும் உறுதியையும் இந்த விருது எனக்கு அளிக்கிறது,” என்றார் திருவாட்டி சுமதி.

நல்லாசிரியர் விருது (தொடக்கப்பள்ளி)

கேஷுவரீனா தொடக்கப்பள்ளி மூத்த தமிழாசிரியர் நஸிமா பானு, 33.
கேஷுவரீனா தொடக்கப்பள்ளி மூத்த தமிழாசிரியர் நஸிமா பானு, 33. - படம்: பே. கார்த்திகேயன்

சரியான வாய்ப்பும் வழிகாட்டுதலும் கிடைத்தால் மாணவர் ஒவ்வொருவரும் கற்றுத் தேர்ந்து சிறந்து விளங்க முடியும் என்ற உயரிய கோட்பாட்டுடன் தம் கற்பித்தல் பணியை மேற்கொண்டு வருகிறார் 33 வயது மூத்த தமிழாசிரியர் நஸிமா பானு.

கேஷுவரீனா தொடக்கப்பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் இவரது கற்பித்தல் முறைகள் வகுப்பறை எல்லையோடு நின்றுவிடுவதில்லை.

இந்தியச் சமையல் கலை பற்றிய பாடத்தில் நறுமணப் பொருள்களின் வரலாறு, பாரம்பரியச் சமையல் பாத்திரங்களின் பயன்பாடு, அவற்றின் மருத்துவக் குணங்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியதோடு, வகுப்பறையிலேயே மீன் குழம்பு தயாரிக்கும் நேரடிச் சமையல் விளக்கக் காட்சியையும் அவர் நடத்திக் காட்டினார்.

மாணவர்கள் தவறுகள் செய்வதற்குப் பயப்படாத ஒரு வகுப்பறைச் சூழலை உருவாக்குவதே என் நோக்கம். தமிழ் மொழியைப் பாடமாக மட்டுமோ வேலைக்காகவோ கற்பதைவிட, நமது அடையாளம், மரபு, வரலாறு, பண்பாடு ஆகியவற்றுடன் மாணவர்கள் அதனை இணைத்துக் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்றார் செல்வி நஸிமா.

மேலும், மாணவர்கள் பொங்கல் பண்டிகையை ஒட்டி லிட்டில் இந்தியா பகுதிக்குச் சென்ற கற்றல் பயண அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுத வைத்தார். அவை பின்னர் ‘தமிழ் முரசு’ நாளிதழில் அச்சிடப்பட்டு மாணவர்களுக்குச் சிறந்ததோர் அங்கீகாரத்தைத் தேடித்தந்தது.

சிறு வயதிலிருந்தே வீட்டில் தமிழ் மொழி இயல்பாகப் பேசப்பட்டதால் மொழிமீது கொண்ட ஈர்ப்பும், அந்த ஆர்வத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கமுமே அவரைத் தமிழாசிரியராகும் பாதைக்கு வித்திட்டன.

“இந்த விருது என் பணிகளையும் தமிழ்த் துறைக்கான என் முயற்சிகளையும் அங்கீகரிப்பதாக அமைந்துள்ளது. எனது முயற்சிகளைத் தொடரவும், மாணவர்களிடம் ஆக்ககரமான தாக்கத்தை ஏற்படுத்தவும் இது ஊக்கமாக இருக்கும்,” என்று செல்வி நஸிமா பானு குறிப்பிட்டார்.

நல்லாசிரியர் விருது (உயர்நிலைப் பள்ளி)

கிரெஸ்ட் உயர்நிலைப்பள்ளி உயர்நிலை மூன்றாம் வகுப்பு மாணவர் நலனுக்குப் பொறுப்புவகிக்கும் துணைத் தலைவரும் தமிழாசிரியருமான ரைஹானா பீவி, 53.
கிரெஸ்ட் உயர்நிலைப்பள்ளி உயர்நிலை மூன்றாம் வகுப்பு மாணவர் நலனுக்குப் பொறுப்புவகிக்கும் துணைத் தலைவரும் தமிழாசிரியருமான ரைஹானா பீவி, 53. - படம்: பே. கார்த்திகேயன்

‘வேர்கள் ஆழமாக இருந்தால், மரம் உயரமாக வளரும்’ என்னும் பொன்மொழியைத் தமது முப்பது ஆண்டுகாலக் கற்பித்தல் பயணத்தின் தாரக மந்திரமாகக் கொண்டுள்ளார் உயர்நிலை மூன்றாம் வகுப்பு மாணவர் நலனுக்குப் பொறுப்புவகிக்கும் துணைத் தலைவரும் தமிழாசிரியருமான 53 வயது ரைஹானா பீவி.

கிரெஸ்ட் உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் இவர், பாரம்பரியமும் நவீனமும் இணைந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்.

குடும்பத்தில் தமிழாசிரியர்கள் பலரைப் பார்த்து வளர்ந்ததால் இயல்பாகவே இவருக்கு மொழியின்மீது ஆர்வம் ஏற்பட்டது. மாணவர்களுக்குப் பாடத்தோடு பண்பாட்டையும் கற்பித்து, வேர்களை மதிப்பவர்களாக அவர்களை உருவாக்குவதே இவரது நோக்கமாகும்.

“மாணவர்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தும்போதுதான் அவர்கள் தயக்கமின்றிப் பேசத் தொடங்குவார்கள். வகுப்பறையில் அவர்கள் ஆங்கிலம் கலந்து தமிழில் பேசினாலும், அதை அவர்களின் முன்னேற்றப் பாதையாகவே கருதிப் பாராட்டி மேலும் ஊக்குவிப்பேன்,” என்றார் திருவாட்டி ரைஹானா.

செயற்கை நுண்ணறிவு உரையாடல் செயலியான ‘லேங்பட்டி’ (LangBuddy) மூலம் மாணவர்கள் கணினியுடன் தமிழில் பேசிப் பழக இவர் வழிவகுத்தார். மேலும், தமிழ் வாசிப்பில் சவால்களை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான தனிப்பட்ட வளங்களை உருவாக்குவதிலும் அவற்றுக்கான இணையத்தளத்தை வடிவமைப்பதிலும் இவர் முக்கியப் பங்காற்றினார்.

“இந்த விருது என் பொறுப்பை மேலும் அதிகரித்துள்ளது. மாணவர்களுக்கும் எனக்குமான உறவு வலுப்படும்போது, அவர்கள் தமிழ் மொழியில் சிறந்து விளங்குவதற்கான வழிகள் பிறக்கின்றன,” என்று கூறினார் திருவாட்டி ரைஹானா.

நல்லாசிரியர் விருது (தொடக்கக் கல்லூரி)

ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரித் தமிழாசிரியர் கலைவாணி இளங்கோ, 41.
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரித் தமிழாசிரியர் கலைவாணி இளங்கோ, 41. - படம்: பே. கார்த்திகேயன்

வகுப்பறைக்குள் நுழையும் ஒவ்வொரு மாணவரும் தனக்குள் சுமந்து வரும் புதிய கதையை வெளிக்கொண்டுவருவதே தம் பணி என்று நம்புகிறார் 41 வயதுத் தமிழாசிரியர் கலைவாணி இளங்கோ.

ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வரும் இவர், கடந்த 15 ஆண்டுகளாகக் கல்வித்துறையில் முத்திரை பதித்து வருகிறார்.

பெற்றோர் இருவருமே தமிழாசிரியர்கள் என்பதால், சிறு வயதிலிருந்தே வளமான மொழிச் சூழலில் வளர்ந்த இவருக்கு ஆசிரியர் பணி என்பது இயல்பாகவே அமைந்த ஒரு கனவாகும்.

“வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவரிடமும் ஒரு தனித்திறன் உள்ளது. அதை அடையாளம் கண்டு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே என் பணி. இலக்கியத்தைப் பாடமாக மட்டும் பார்க்காமல் சமூகத்தோடு இணைத்துப் பார்க்க அவர்களுக்குப் பயிற்றுவிக்கிறேன்,” என்கிறார் இவர்.

மாணவர்கள் சிறுகதைகளைப் படித்து, சொந்தக் குரலில் வலையொளிகளை உருவாக்கி விவாதிக்கும் ‘வலையொளி வழிப் பார்வை’ (From Podcast to Perspective) என்ற மாறுபட்ட உத்தியை இவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

பள்ளியின் ஈராண்டிற்கு ஒருமுறை நடைபெறும் ‘அக்னி’ (AGNI) கலை விழாவில் இவர் அறிமுகப்படுத்திய கவிதை ஒப்புவித்தல் அங்கத்தின் மூலம், அதற்குமுன் கவிதை எழுதியிராத மாணவர்கள் மூவர் கவிதைப் புத்தகங்களை வெளியிடும் அளவிற்குப் படைப்பாளர்களாக உருவெடுத்துள்ளனர். அதுமட்டுமன்றி, வெளியூர்க் கற்றல் பயணங்களின்போது மாணவர்கள் தாங்களாகவே நாடகம் எழுதி, அதனைப் பிற நாட்டு மாணவர்களுக்காக அரங்கேற்றவும் இவர் வழிகாட்டுகிறார்.

என் மாணவர்கள் சார்பிலும் தொடக்கக்கல்லூரி ஆசிரியர்கள் சார்பிலும் இந்த விருதைப் பெறுவதில் பெருமிதமடைகிறேன். தமிழ்மொழியை வகுப்பறையோடு மட்டும் நிறுத்திவிடாமல், நமது மொழி, பண்பாடு ஆகியவற்றைக் கடந்து சமூகத்திற்குக் கொண்டு சேர்க்கும் சிந்தனையை மாணவர்களிடம் விதைப்பதே என் விருப்பம்,” என்றார் செல்வி கலைவாணி.

குறிப்புச் சொற்கள்