வீட்டிலிருந்து தொழில் நடத்தும் பெண்களுக்கு உதவிய ‘பெண்கள் திருவிழா’

ஷிஃப்ரா கிரியேஷன்ஸ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி

வீட்டிலிருந்து தொழில் நடத்தும் பெண்களுக்கு உதவிய ‘பெண்கள் திருவிழா’

2 mins read
7cd9cbec-2d0a-4664-a282-3aefac8d60d7
‘பெண்கள் திருவிழா’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஷிஃப்ரா கிரியேஷன்ஸ் தோற்றுவிப்பாளரான சைதா பீவி (இடது), அவரது கணவர் முஹம்மது கௌது. - படம்: சைதா பீவி
multi-img1 of 3

பெரும்பாலும் குடும்பப் பொறுப்புகளைச் சமாளிப்பதற்கு மத்தியில், தங்கள் தனிப்பட்ட மேம்பாட்டுக்கான வாய்ப்பைப் பெண்கள் சிலர் இழந்து விடுகின்றனர். மேலும், இந்திய முஸ்லிம் குடும்பங்கள் சிலவற்றில் நிலவும் கடுமையான கட்டுப்பாடுகளால் தங்கள் கனவுகள் நிறைவேற வாய்ப்பில்லை என்கின்றனர் சிலர்.

இவற்றைக் கடந்து, வீட்டிலிருந்தபடி தொழில் நடத்தும் பெண்கள் தங்கள் தொழிலில் மிளிர்வதற்கு ஒரு தளமாக அமைந்தது, மே 9ஆம் தேதி, ஷிஃப்ரா கிரியேஷன்ஸ் நடத்திய ‘பெண்கள் திருவிழா’ நிகழ்ச்சி.

ஷிஃப்ரா கிரியேஷன்சின் தோற்றுவிப்பாளர் சைதா பீவி, 41, அவரது கணவர் முஹம்மது கௌது இருவரும் வீட்டுத் தொழில்களை நடத்திவரும் இந்திய முஸ்லிம் பெண்களுக்காக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில், உணவு, உடை, அலங்காரப் பொருள்கள் போன்ற பல்வேறு தொழில்களை நடத்துவோர் ‘பாப்-அப்’ கடைகளை அமைக்க வாய்ப்பளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 25 பேர் இதில் பங்கேற்று வாடிக்கையாளர்களை வரவேற்றனர்.

“நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் இணையத்தில் மட்டுமே வர்த்தகம் செய்து வருபவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் முதன்முறையாக ‘பாப்-அப்’ கடைகள் வைக்கின்றனர்,” என்று சைதா பீவி கூறினார்.

கமாரா பெர்ஃப்யூம்ஸ், மூன்று தலைமுறையாக நடத்தப்பட்டுவரும் தொழிலாகும். ஆனால் நவீன காலத்திற்கேற்ற தொழிலாக அதை உருமாற்றி வீட்டிலிருந்து நடத்திவருகிறார் 39 வயதான நஸ்ரின் சபினா.

“இந்திய, மலாய், அரேபியப் பாரம்பரியங்களிலுள்ள வாசனைத் திரவியங்களைத் தயாரித்து விற்கிறோம். பெரும்பாலும் இணையத்தில் விற்பனையாகாத வாசனைத் திரவியங்களும் இங்கு வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்றதால் பெருமைகொள்கிறேன்,” என்று நஸ்ரின் சபினா கூறினார்.

நட்புறவால் பிறந்த தொழில்தான், ‘த சாட் டிரியோ’ (The Chaat Trio). பல்கலைக்கழகத்தில் பயிலும் பெண்கள் மூவர், பானி பூரி விற்பனை செய்து வருகின்றனர் .

அஜிமா, கிஃப்தியா ஃபர்ஹத், ஜூலைஹா ரஸீனா மூவரும் தம் தொழிலை ‘பெண்கள் திருவிழா’ நிகழ்ச்சியில் தொடங்கினர். இவர்களின் உணவுக் கடை மக்களின் பேராதரவைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

“இந்தியர்களின் பாரம்பரிய உணவான பானி பூரியை நவீன உலகத்திற்கேற்ப பல சுவைகளில் நாங்கள் விற்பனை செய்தாலும் அதன் பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பது எங்கள் நோக்கம்,” என்றார் 21 வயதான கிஃப்தியா ஃபர்ஹத்.

“இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம், எங்கள் தொழிலைப் பற்றியும் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றியும் மேலும் புரிந்துணர்வை வளர்த்துக்கொண்டோம். முதன்முறை ஒரு கடையை வைத்து விற்பனை செய்த எங்களுக்குக் கிடைத்த வரவேற்பு பெருமகிழ்ச்சியைத் தந்தது,” என்றார் ஜூலைஹா ரஸீனா, 22.

“பெண்கள் முன்வந்து இது போன்ற தொழில்களைச் சிறப்பாக நடத்த வேண்டுமானால் அதற்கு அவர்களின் குடும்பங்களின் ஆதரவு மிகவும் அவசியம். என் கணவர், தந்தை, மகள் ஆகியோரின் ஆதரவின்றி இந்நிகழ்ச்சிக்கு என்னால் ஏற்பாடு செய்திருக்க முடியாது,” என்று பெருமிதத்துடன் கூறினார் சைதா பீவி.

குறிப்புச் சொற்கள்