கவிப்பெருக்கு: புதுநடையில் சங்கப்பாடல்கள்

கவிப்பெருக்கு: புதுநடையில் சங்கப்பாடல்கள்

2 mins read
5546f652-4d9d-4c10-9418-5e3a33abd8c1
கவிதை படைத்த 33 பேரில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் மாணவர்கள் என கவிப்பெருக்கு 2026 நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர். - படங்கள்: த.கவி, தமிழ்வாணன் சஹானாஸ்ரீ

தமிழ்வாணன் சஹானா

சிலப்பதிகாரத்தின் வழக்குரை காதை, பொருள்வயிற் பிரிவின் வலிபேசும் கலித்தொகைப் பாடல் என, சங்ககாலக் கவிதைகளை உணர்ச்சிப் பெருக்குடன் வசன கவிதைகளாகப் படைத்தது கவிப்பெருக்கு.

வசனக்கவிதை எனும் தற்காலக் கவிதை முறையின்வழி இளைய தலைமுறையினரிடையே மொழியைக் கொண்டு சேர்க்கும் நோக்குடன் கவிப்பெருக்கு மூன்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. 

நாற்காலி, திறன்பேசி, பேருந்து முதல் உணர்வுகள்வரை அன்றாடப் பயன்பாடுகளைக் கவிநயத்துடன் படைக்கும் தன் வழக்கமான பாணியுடன் சங்க இலக்கியத்தையும் இவ்வாண்டு புதிதாக இணைத்துப் படைத்தது பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றது. 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜே‌ஷ் குமார் தர்மலிங்கம் எழுதிய ‘யார் பாரதி? எனும் கவிதை, அரங்கை உற்சாகத்தால் ஆர்ப்பரிக்க வைத்தது. 

பலகோடி உயிரணுக்களால் உருவான மனிதன், ஒரு ‘செல்லுக்குள்’ சிக்கியுள்ளதை நகைச்சுவையுடன் படைத்த நதிநேசன் கணேசனின் கவிதை அரங்கைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. 

இவ்வாண்டுத் தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக, ‘கிரேத்தா ஆயர்’ மக்கள் அரங்கில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) கவிப்பெருக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கிட்டத்தட்ட 520 பேர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் 12 படைப்புகள் மேடையேற்றப்பட்டன.

“கவிதையை எளிமைப்படுத்தி அனைவருக்கும் புரியும் வகையில் பின்னணி இசையுடன் வழங்க வேண்டும் எனும் நோக்கத்தில் இந்நிகழ்ச்சியைப் படைத்து வருகிறோம்,” என்றார் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் இராஜேஷ் குமார் தர்மலிங்கம்.

நிகழ்ச்சியில் கவிதை படைத்த 33 பேரில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் மாணவர்கள் என்றும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

தமது அன்றாடப் பேருந்து பயணத்தில் தாம் கவனிக்கும் எளிய விஷயங்கள் தமது கவிதைக்கான தூண்டுதல் என்று குறிப்பிட்டார் நிகழ்ச்சியில் கவிதை படைத்த விக்டோரியா பள்ளி மாணவர் சிரன் கிரு‌ஷ்ணா முருகன்.

மேலும், “என்னைப் போன்ற மாணவர்கள் மேடையேறிப் படைப்பதைக் காணும்போது, அடுத்த இளைய தலைமுறைக்கும் கவிதை மீது ஈர்ப்பு உண்டாகும். அவர்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் வரும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

தற்கால மனிதன் தொழில்நுட்பத்திற்கு அடிமையாகிக் கிடப்பதை மிக நுட்பமான நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டியதை ரசித்ததாகச் சொன்னார் வெங்கடேசன் கார்த்திக், 52. 

குறிப்புச் சொற்கள்